Friday, August 12, 2016

அவர் என்னை கொன்று போட்டாலும்....

சாது கொச்சுக்குஞ்ஞு அவர்கள் பற்றி நான் கேள்விப்படும்போதெல்லாம் பல விசயங்கள் என் மனதில் தோன்றி எழும். தமிழகமெங்கும் அவரும் பொன்னம்மா சன்னியாசியும் நடந்தே சபைகள் தோறும் கிராமங்கள் தோறும் தேவ ஊழியம் எப்படி சாத்தியமாயிற்று! ஆனந்தமே பரமானந்தமே எனத் துவங்கும் பாடல் மற்றும் துக்கத்திண்டே பான பாத்ரம் என துவங்கும் பாடல் எழுதப்பட்ட சூழ்நிலைகள் மனதில் விரியும். இதில்  “ஆனந்தமே பரமானந்தமே” பாடல் எழுதப்பட்ட சூழலை முன்பொருமுறை தமிழ்கிறிஸ்தவ தளத்தில் பதிவிட்டேன். அப்பொழுது பாடல்களில் வரலாறு என்ற ஒரு திரியில் பல பாடல்களின் வரலாற்றை தொகுத்து எழுதிக் கொண்டிருந்தேன். அப்படி எழுதும்போது துக்கத்தின் பான பாத்ரம் பாடலை நான் அதன் வரலாறு தெரிந்தும் எழுதத் தயங்கினேன்.
என்னவெனில், அப்படிப் பட்ட ஒரு மனம் உள்ளவர்கள் இன்று கிறிஸ்தவத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள், நான் அப்படி இருக்கிறேனா என்று ஒரு பக்கம் சிந்தனை, இன்னொருபக்கத்தில், அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்காவது மனம் வேறெதிலும் செல்லாது மனதை வியாபித்துக் கொள்வதையும் கவனித்திருக்கிறேன். சமீபத்தில் முகநூலில் நண்பர் ஒருவர் அந்தப் பாடலைப் பற்றிய தகவலை பகிர்ந்த போது, திரும்பவும் நான் அப்பாடல் வரிகளின் ஆழம் மற்றும் அது தூண்டிய சிந்தனைகளில் மூழ்கி அப்பாடலை திரும்பத் திரும்ப பாடி கரைந்து எனையுமறியாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறேன்.
நிற்க, இக்கண்ணீர் என் சூழ்நிலையை நினைத்து அல்ல, மாறாக எப்படி என்னை பாழாக்கும் சூழ்நிலைகளிலும் பரிசுத்த தேவன் எனை அவர் பக்கம் அவ்ரைப் போல மாற்றுவதில் அவருக்காக வாழ என்னை தயார்படுத்துகிறார் என்பதை நினைத்து மனம் உருகி உளம் கசிந்து வரும் கண்ணீர்.
பல முறை நான் யோபு  “அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நான் நம்பிக்கையாயிருப்பேன்” என்று சொல்லி இருப்பதைப் பற்றி தியானித்தும் சிந்தித்தும் இருக்கிறேன். ஆனால் அனேக தேவ மனிதர்களின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் மிக முக்கியமான உண்மை, அவர்களுகு இவ்வுலக பாடுகள் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. ஏன், இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு இந்த ஒரு உலகமே ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. ஆகவே தான் அவர்களின் வாழ்க்கைச் சூழ்நிலைகள் அவர்களை அசைக்க வில்லை. ஏனெனில் அவர்கள் அவர்மீது அல்லவா கட்டி எழுப்பப்பட்டிருக்கிறார்கள்.

இதை எல்லாம் நினைத்து மனம் வேத வசனத்தை அசைபோடும்போது, அடிமனதிலிருந்து சொல்ல விரும்புகிற வசனம், “அவர் என்னைக் கொன்று போட்டாலும் அவர் மேல் நான் நம்பிக்கையாயிருப்பேன்.” ஏனெனில் நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இயேசுவுக்காக. அவர் சொல்லி இருக்கிறார், “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.” பிறகென்ன கவலை! 

1 comment:

Pethuru Devadason said...

நானும் அந்த பாடலை இரண்டுமுறை கேட்ட பின்னர், இரண்டு நாட்களாக இன்னும் என்னையறியாமல் அந்த பாடல் தான் மனதில் வாயில் வந்து கொண்டிருக்கிறது.