Saturday, April 8, 2017

நாம் மறந்த சிறந்த தேவ மனிதர்கள் - 2 தமிழ் டேவிட் (இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற கதை)


தமிழ் நற்செய்தியாளர் டேவிட்
 மனமாற்றம் அடைந்து, சுத்திகரிக்கப்பட்டு நிரப்பப்பட்டது எப்படி?
நான் 1853ம் ஆண்டில்  தென் இந்தியாவில் உள்ள திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தேன். என் பெற்றோர் கிறிஸ்தவர்களாகவும், முழுநேர கிறிஸ்தவ ஊழியர்களாகவும் இருந்தனர்.  நான் இரண்டு வயது குழந்தையாக இருந்த போது என் தகப்பனார் மரித்துப் போனார். என் அருமைத் தாயார் மிகுந்த சிரமங்களுடன், கவனமாக எங்களை வளர்த்தார். நான் சி.எம்.எஸ் உறைவிட பள்ளியில் சேர்க்கப்பட்டேன், ஆனால் ஒன்பது வயதில் அதை விட்டு வெளியே வந்து விட்டேன்.  பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மறுபடியும் படிப்பைத் தொடரும்படி சேர்க்கப்பட்டேன், அங்கே சுமார் ஐந்து வருடங்கள் நான் படித்தேன். நான் பள்ளியில் மிகவும் துன்மார்க்கமான வாழ்க்கையை வாழ்ந்தேன்.  வகுப்பில் என் மோசமான நடத்தையைப் பற்றிய குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுப்பட்டது.  என் தவறான நடத்தையினால் நான் அனேகர் தவறான பாதையில்  செல்வதற்குக் காரணமாக இருந்தேன்.  சூதாட்டம், பொய் சொல்லுதல், ஏமாற்றுதல், திருடுதல் மற்றும் சண்டையிடுதல் போன்றவைகள் மூலமாக நான் என் சிறுவயதில் என்னை நானே சந்தோசப்படுத்திக் கொண்டிருந்தேன்.  மரணத்தைப் பற்றிய பயம் எனக்கு எப்பொழுதும் இருந்தது என்றாலும், என் தீய பழக்க வழக்கங்களை என்னால் விட்டு விட முடியவில்லை. கிறிஸ்தவப் பெற்றோருக்குப் பிறந்து, ஞாயிற்றுக் கிழமை ஓய்வு நாள் பள்ளி மற்றும் சபையில் கலந்து கொள்ளுதல் ஆகியவை என்னை ஒரு கிறிஸ்தவனாக்கவில்லை. நான் கிறிஸ்தவரல்லாதவரைக் காட்டிலும் மோசமானவனாக இருந்தேன்.

என் பதினாறு வயதில் நான் இந்தியாவை விட்டு சிலோனுக்குச் சென்றேன். நான் குறைவான கல்வியையே பெற்றிருந்தாலும், என்னால் நிறைய சாதிக்க முடியும் என்று நினைத்தேன். சிலோனில் ஒரு ஆங்கிலப் பள்ளிக்கூடம் ஒன்றை நிறுவ முடியுமளவுக்கு எனக்கு திறன் இருந்ததாக நான் நினைத்தேன்.  கடிவாளம் இடப்படாத குதிரையைப் போல, கட்டுப்பாடின்றி, என் நண்பர்கள் மற்றும் கடைக்காரர்களை ஏமாற்றுதல் மற்றும் வஞ்சித்தல் ஆகியவை என் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளாக இருந்து வந்தது. மற்றவர்களிடம் இருந்து தந்திரமாக கடன் வாங்குவதிலும், திரும்பச் செலுத்தும் எண்ணம் எதுவுமின்றி நயமான வார்த்தைகளால் உறுதி கூறுவதிலும் நான் மிகுந்த சாமர்த்தியமுள்ளவனாக இருந்தேன்.

ஒரு மதுபானக் கடையில் கணக்கு வழக்குகளைப் பார்ப்பவனாக எனக்கு ஒரு வேலை கிடைத்தது. அங்கே நான்  பிசாசுக்கு அடிமையானேன். என் இருதயம் மற்றும் ஆத்துமா இவ்விரண்டையும் அவனுடைய விருப்பங்களுக்கு அர்ப்பணித்து விட்டவனாக இருந்தேன். சீக்கிரத்திலேயே நான் இருப்பதிலேயே மோசமான ஒழுக்கக் குறைபாடுகளின் ஆழத்தில், பாவத்தில் மூழ்கிவிட்டேன்.

பாவம் மற்றும் மதியீனத்தின் கசப்பான ஒவ்வொரு நிலைகளையும் நான் கடந்து சென்றேன். ஒரு நிறுவனத்தின் முதலாளியுடன் நானும் ஒரு பங்குதாரராக சேர்க்கப்பட்டு,  அந்த ஊரின் மிகவும் பெயர்பெற்ற ஒன்றுக்கும் உதவாத மனிதர்களுடன் சேர்ந்துப் பழக ஆரம்பித்தேன்.  நான் என் சுய மரியாதையை எல்லாம் இழந்து அவமானப்பட்டேன். என் மனச்சாட்சியின் குரல் மழுங்கிவிட்டது. நன்மையான எந்தக் காரியத்துக்கும் நான் மரித்தவனாக இருந்தேன். மிகவும் வறுமைக்குள்ளாகி, கடன்காரனாக மாறி, என்ன செய்வது என்ற பயம் எனக்குள் எழுந்தது.

இந்த மோசமான சூழ்நிலையில், என் ஏழைத் தாயார் இந்தியாவிலிருந்து தகுதியற்ற தன் மகனைத் தேடி வந்தார்.  அவன் என்னைக் கண்டுபிடித்து, என் வருந்தத்தக்க சூழலில் இருந்து என்னைக் காப்பாற்றி, இந்தியாவிற்கு திரும்ப அழைத்துச் சென்றார். நான் திருமணம் செய்ய வேண்டும் என அவர் விரும்பினார். நான் சம்மதித்தேன், என் மாமா ஒரு இள கிறிஸ்தவப் பெண்ணை எனக்காக தெரிந்தெடுத்தார், வெகு விரைவில் நாங்கள் திருமணத்தில் இணைந்தோம். மனம் திரும்பின ஒரு கணவனத் தாரும் என ஆண்டவரிடம் ஜெபித்து, இப்பெண் அனேகரை திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்திருந்திருக்கிறார். அவள் மிகவும் ஏமாற்றமடைந்து வருந்தும்படி நான் அவளிடம் உண்மையை சொல்ல வேண்டுமோ? எங்களுக்குத் திருமணம் நடந்து மூன்று மணிநேரங்களுக்குப் பின் அவள் ஒரு கிறிஸ்தவ கைப்பிரதியை என்னிடம் கொடுத்து, நான் அதை விரும்புகிறேனா என என்னிடம் கேட்டாள்.  எனக்கு இது போன்ற காரியங்களைப் பற்றி கவலை இல்லை என்றேன். எங்கள் திருமண வாழ்வின் முதல் ஆண்டை மிகுந்த வருத்தத்துடனும், துக்கத்துடனும், தேவன் என்னை இரக்கமாக மனமாற்றம் பெறச் செய்ய வேண்டும் என்று கண்ணீருடன் ஜெபித்து நாட்களைக் கடத்தினார். எங்களுக்குத் திருமணம் நடந்து பத்து நாட்களுக்குப் பின், நான் காலரா நோயினால் பாதிக்கப்பட்டேன். நான் பிழைக்க வழி இல்லை என மருத்துவர்கள் கருதினர். நான் மரணத்தின் விளிம்புவரை சென்ற அந்த இரவை நான் நன்றாக நினைவில் வைத்திருக்கிறேன். என் அருமை மனைவி, நோய் தொற்று பற்றிய பயமில்லாமல் அந்த இரவு முழுவதும் என்னுடன் இருந்து, கடவுள் என்னைக் காப்பாற்றவேண்டும் என வேண்டிக்கொண்டிருந்தாள்.  கர்த்தருடைய நாமம் பரிசுத்தப் படுவதாக. அவளுடைய ஊக்கமான வேண்டுதல்கள் வீணாகப் போகவில்லை. கிருபாசனத்துக்கு நேராக அவள் செய்த ஜெபங்கள் கேட்கப்பட்டு பதிலளிக்கப்பட்டது. நான் சுகம் பெற்று பின் மறுபடியும் நாங்கள் சிலோனுக்குப் போனோம்.

நான் உலக வேலை பார்ப்பதற்கு என் மனைவி எதிர்ப்பு தெரிவித்து, நான் ஊழியம் செய்ய வேண்டும் என மிகவும் கவலைப் பட்டாள். சுதேச உதவிக்காரருக்குக் கொடுக்கப்பட்ட சொற்ப கூலியை அறிந்தவனாக, நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஒரு முறை ஊழியம் செய்வதற்கு எங்களை ஒப்புக் கொடுக்கும்படி மிஷன் வளாகம் வரைக்கும் சென்று, வாசலில் என் மனதை மாற்றிக் கொண்டு திரும்ப வீடு வந்து சேர்ந்தோம்.

கடைசியில் நான் சம்மதித்து, நாங்கள் இருவரும் ஒரு மிஷனில் இணைந்து வேலை பார்த்தோம். எனக்கு பன்னிரண்டு மற்றும் அரை அணாக்களும், அவளுக்கு  ஏழு அணாக்கள் மாதச் சம்பளம்.  இந்த மிஷனில் இருக்கும்போது, என் இருதயத்தில் ஆண்டவருடைய பரிசுத்த ஆவியைப் பற்றிய வெளிச்சத்தைக் காண்பித்தது ஆண்டவருடைய சித்தமாக இருந்தது.  என் மனைவியின் அனுதின வாழ்க்கை மற்றும் ஜெபங்களை  (அவளின் பிரசங்கம் அல்ல) தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு, அவை  நான் மனமாற்றத்திற்குள் வருவதற்குக் காரணமாக இருந்தது.  ஒரு நாள் நான் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது நான் தேவனின் குற்றஞ்சாட்டுதலின் குரலைக் கேட்டேன். அவர் சொன்னது, “ டேவிட் நீ தவறான வழியில் இருக்கிறாய், உன் வாழ்க்கை தவறானதாக இருக்கிறது, மேலும் நீ நரகத்துக்குச் செல்லும் விசாலமான பாதையில் நீ இருக்கிறாய்.”  என் மனக்கண்களுக்கு முன்பாக நான் செய்த ஒவ்வொரு பாவங்களும் தெளிவாகக் காட்டப்பட்டது. நான் இரக்கம் மற்றும் மன்னிப்பு வேண்டி கதறினேன். நான் ஒரு பைத்தியக்காரனைப் போல தரையில் படுத்து உருண்டேன். நான் சமாதானத்தைத் தேடினேன், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.”இயேசுவின் இரத்தம், பாதுகாப்பு, நிச்சய தன்மை மற்றும் ஆனந்தம்” என்ற தலைப்பில் ஒரு கைப்பிரதியை வாசித்தேன்.  என் குழப்பமான மனதிற்கு அது ஒரு தற்காலிக அமைதியைத் தந்தது. நான் அனுதினம் செய்கிற பாவங்களை ஒரு தாளில் எழுதி, இரவில் அவைகளை அறிக்கை செய்தேன். ஆனால் காலையில் மறுபடியும் அப்பாவங்களைச் செய்தேன். இரட்சிப்பின் வழியை எனக்குக் காட்டுவார் எவருமில்லை. விசுவாசி, விசுவாசி என அனேகர் என்னிடம் கூறினார், ஆனால் எதை, எப்படி விசுவாசிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஒருபோதும் விளக்கியது இல்லை. என் வாழ்க்கைத் துணையின் உதவியை நாடினேன்; அவள் தனக்கிருந்த வெளிச்சத்தின் அளவின் படி ஆண்டவரை நம்பி இருந்தாலும், அவளிடத்தில், “பரிபூரணமான அமைதி” அவளிடம் இருந்ததில்லை. எனக்கு உதவிக் கரம் நீட்ட என் மனைவியால் முடியவில்லை.

முடிவுக்கு வராத இந்த குழப்பமான மன அமைதியற்ற நிலையில் நான் இரண்டு வருடங்கள் இருந்தேன். ”கவலையுடன் தேடுபவர்” என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தைப் பார்த்தேன்.  அதை மிகவும் கவனமாக வாசித்தேன். அதை எழுதிய ஆசிரியரின் வார்த்தைகளை அல்ல, அவர் மேற்கோள் காட்டியிருந்த வசனமானது அமைதியற்ற என் மனதிடம் சமாதானம் மற்றும் மன்னிப்பைப் பற்றி பேசியது.  அது ரோமர் 4:5 ல் உள்ள ” ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால்…” என்பது போன்ற வசனங்கள் ஆகும்.

நான் மன்னிப்பைப் பெறுவதற்காக செய்து வந்த கிரியைகளை நான் விட ஆரம்பித்தேன்.  அழுகை, பெருமூச்சு, வாசிப்பு, முயற்சி இவை எல்லாம் பயனற்றவை என்று கண்டுகொண்டேன், அவைகளை நிறுத்தவும் செய்தேன். நான் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து, அவருடைய வார்த்தையில் உள்ளபடி அவரை விசுவாசித்தேன். என் பாரம் நீங்கியது, என் கண்ணீர் துடைக்கப்பட்டது. என் பலவீனமான ஆத்துமாவானது இயேசுவில் ஒரு இளைப்பாறுதலையும், சொல்ல முடியாத சந்தோசத்தையும் சமாதானத்தையும் கண்டுகொண்டது. விலைமதிப்பில்லாத இரட்சிப்புக்காக நான் துள்ளிக் குதித்து உற்சாகமாக கத்தினேன். கிறிஸ்துவைப் பற்றி தாமதமின்றி மற்றவர்களிடம் சொல்ல ஆரம்பித்தேன், வெளியரங்கமாக பிரசங்கித்து, கிறிஸ்துவின் இரட்சிப்பின் வல்லமையைப் பற்றி பகிரங்கமாக சாட்சிகூறினேன். என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி, என் முழு உள்ளமே அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரி.  என் சத்தத்தை மிகவும் உயர்த்தி அவரைப் பற்றிய துதிகளை நான் சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டவர்கள் அனைவரும் தேவனின் ஆச்சரியமான நன்மையை ருசிபார்த்து அவரைப் பற்றி பகிர்ந்து கொள்ள வேண்டும் என நான் விரும்பினேன். பழையவை எல்லாம் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. என் மதுபான கடையில் , மற்றும் என்னுடன் சேர்ந்து பலவித விளையாட்டுகளை விளையாடி தோழர்களின் உதவி எனக்கு இப்போது தேவையற்றதாகி விட்டது.

நான் அவர்களை விட்டு விலகுவதற்கு முன்னமே, அவர்கள் என்னை விட்டு விலகிச் சென்றுவிட்டனர். கர்த்தருக்கே ஸ்தோத்திரம். அவர்களில் ஒருவரை நான் கண்டு, என் சாட்சியை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.  அது அவனை மிகவும் பாதித்தது, அதன் பின் அவன் ஒருபோதும் என்னைப் பார்க்க திரும்பி வரவில்லை. இதன் பின்பு, இந்த தெளிவான வெளிச்சத்திற்கும், மன்னிப்பைப் பற்றிய முழு நிச்சயத்திற்கும் என் அருமை மனைவியை நடத்த கர்த்தர் என்னை பயன்படுத்தினார். பின்னர் என் சகோதரரரும் என் தாயாரும் கூட இதைப் பெற்றனர்.  இப்போது ஒரு வீடு எப்படி இருக்க வேண்டுமோ அவ்வண்ணமாக எங்கள் வீடு இருந்தது, அது ஒரு விசுவாச வீடாக, பரலோகத்தின் ஒரு முன்சுவையாக இருந்தது. தேவனுக்கே  மகிமை.  நாள் முழுதும் தேவனுடைய மகிமையைப் பாடி, துதித்து உயர்த்தி மகிழ்ந்தோம்.. அல்லேலூயா. என் கடன்கள் அனைத்தையும் நான் திரும்பச் செலுத்தி முடித்தேன்.  அவற்றில் சில நான் ஒன்பது வயது சிறுவனாக இருக்கும்போது வாங்கிய கடன்கள் ஆகும்.  இதைச் செய்வதற்கு எனக்கு நான்கு வருடங்கள் ஆனது.  எனக்குக் கடன் கொடுத்தவர்கள் சிலர் எனக்குக் கொடுத்தக் கடனை முற்றிலும் மறந்தே போயிருந்தனர்.  என் வாழ்க்கையில் உள்ள மாற்றத்தை நான் பார்த்து, நான் இரட்சிக்கப்பட்டதை அறிந்து கொண்டேன்.

-      அடுத்த கட்டுரையில் தமிழ் டேவிட் தாம் பரிசுத்த ஆவியின் பெலனைப் பெற்றது பற்றி கூறுவதைப் பார்க்கலாம்.

No comments: