Monday, April 24, 2017

இசையுடன் நான் - பயணக் கட்டுரைத் தொடர்


ஒரு ஒழுங்குக்கு உட்பட்டு இசைவாகச் செல்வதே இசை என்று சொல்லகராதிகள் விளக்கம் தருகின்றன. முதன் முதலாக இசையுடன் எனக்கு அறிமுகம் உண்டானது எப்படி?

நான் ஐந்து அல்லது ஆறுவயது சிறுவனாக தென்கலத்தில் உள்ள என் பாட்டி வீட்டில் இருக்கையில் கலந்து கொண்ட முழு இரவு ஜெபத்தில் ஆரம்பித்தது எனலாம். பரி. பேதுரு ஆலயத்தில் நடந்த அந்த இரவு ஜெபத்தில் நான் மட்டுமே ஆண் பிள்ளை (சாண் பிள்ளையானாலும்!). கொட்டு வாசிக்க எவரும் இல்லை. நான் ஓடிப் போய் அதை எடுத்துக் கொண்டு பாட்டுக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத தாளத்தில் எனக்கு அப்போது இருந்த பலத்தில் வாசித்தேன். நேரம் செல்லச் செல்ல எனக்கு கைவலித்து, அதை அப்படியே ஒரு ஓரமாக வைத்துவிட்டேன். ஆனால் நான் அங்கிருந்தாக வேண்டும். என் இரு சித்திமார் (என் தாயாரின் சகோதரிகள்) அங்கிருந்தனர். ஜெபத்தைக் கவனிக்க ஆரம்பித்து விட்டேன். அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் வாலிபப் பெண்கள். ஆனால் அவர்கள் அனைவரும் வைராக்கியத்துடன், கண்ணீர் வடித்து  ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு புரியாத மொழியில் பேசுகிறார்கள், அப்போது அவர்கள் பாடிய ஒரு பாடல் மட்டும் இன்னமும் என் மனதில் நிறைந்திருக்கிறது.
    ஆயிரம் ஆயிரம் பாடல்களை
    ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்!
    யாவரும் தேமொழிப் பாடல்களால்
    இயேசுவைப் பாடிட வாருங்களேன்
            அல்லேலூயா! அல்லேலூயா!
            என்றெல்லாரும் பாடிடுவோம்
            அல்லலில்லை! அல்லலில்லை!
            ஆனந்தமாய்ப் பாடிடுவோம்
அன்று நான், அந்த நள்ளிரவில் அந்தப் பாடலைக் கற்றும் கொண்டேன்.  அதன் பின் நான் நடந்தாலும், படுத்திருந்தாலும் எப்போதும் அந்தப் பாடலை என்னையுமறியாமல் பாடுவது எனக்கு வழக்கமாயிற்று. அந்தப் பாடலைத் தொடர்ந்து நான் கற்றுக் கொண்ட பாடல்களை என்னையுமறியாமல் நான் எதைச் செய்தாலும் பாடிக் கொண்டே இருந்ததால் எனக்கு “உளத்தி” என்ற ஒரு பட்டத்தைக் கொடுத்தனர்.  இப்போதும் ஊருக்குப் போனால் சித்தியிடம் இருந்து சமயங்களில் இப்பட்டம் கிடைக்கும்.  அன்று கற்றுக்கொண்ட பாடல் மட்டுமல்ல, நான் அன்று தென்கலம் பரி. பேதுரு தேவாலயத்தில்ஆவியில் நிறைந்து ஜனங்கள் ஜெபித்த காட்சிக்கொப்பாக இன்று வரை வேறு எதையும் காணவில்லை.  ஒரு சிறுவனாக என் வாழ்வில் அந்த இரவு ஜெபம் மிகவும் முக்கியமான பங்கு வகித்தது.  தேவனுடனான என் தனிப்பட்ட உறவின் ஆரம்பம் அது என்றுகூட சொல்லலாம்.


- பயணம் ஆரம்பம்

எனது இசைத் தொகுப்பு பற்றிய ஒரு சிறிய கட்டுரை


No comments: