Monday, April 17, 2017

இயேசுவுக்காக...

கிறிஸ்துவுக்குள் அன்பான இணைய தள நண்பர்களே,
நான் அவ்வப்போது நான் எழுதிய பாடல்களைப் பற்றி கொஞ்சம் எழுதி இருக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன் ஒரே ஒரு பாடலை மட்டும் ஒலிப்பதிவு செய்து அதை உங்களுடன் பகிர்வு செய்திருந்தேன். கடந்த 15 வருடங்களாக தேவ கிருபையால் நான் எழுதி இசையமைத்த பாடல்களில் ஒரு 10 பாடல்களை தெரிவு செய்து அதை முறைப்படி ஒரு ஆல்பமாக வெளியிடலாம் என்று நீண்ட யோசனைக்குப் பின் விசுவாசத்துடன் முடிவெடுத்து இப்போது  ரிக்கார்டிங் செய்யப்பட உள்ளது.  நம் கிறிஸ்தவ கீர்த்தனைகளின் சாராம்சத்தை உள் வாங்கியும், சமகால தரமான இசையை உள்ளடக்கியும் இவை விரைவில் வெளிவரும். இந்த 10 பாடல்களைப் பற்றி ஒரு சிறிய குறிப்பை இப்பதிவிலும்,  இதைத் தொடர்ந்த பதிவுகளில் அப்பாடல் உருவான கதை மற்றும் சிறப்பையும் எழுத விரும்புகிறேன்.

பாடல் 1 - பரிசுத்தம் நான் பெற வேண்டும்
இப்பாடல் மூன்றே மூன்று சுருதி (note) களை மட்டுமே கொண்டு கம்போஸ் பண்ணப்பட்ட பாடல் ஆகும். அதாவது சரிகமபதநிச என்ற ஸ்வரங்களில் ச ரி க என்ற இந்த மூன்று சுருதிமட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிறிஸ்தவப் பாடல்களில் இதுவே ஒருவேளை முதல் பாடலாக இந்த வகையில் இருக்க அதிக வாய்ப்புண்டு.

பாடல் 2 - பரலோகத்தில் இருக்கிற எம் தந்தையே
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கற்பித்துக் கொடுத்த, “பரமண்டல ஜெபத்தை” அப்படியே பாடலாக வடித்திருக்கிறேன். எல்லா சபைகளிலும் பரமண்டல ஜெபம் ஒரு சம்பிரதாயமாக சொல்லப்படாமல், ஆத்ம்ப் பூர்வமாக மனதில் இருந்து படிக்க வேண்டும் என்ற ஆசையில் எழுதப் பட்ட ஒரு பாடல்.

பாடல் 3 - கருவில் உருவாகுமுன்னே
இப்பாடல் எரேமியா தீர்க்கதரிசனப் புத்தகத்தின் முதல் அதிகாரத்தில் உள்ள வசனங்களை, எரேமியாவின் வாழ்க்கையில் தேவனின் இடைபடுதலை அடிப்படையாகக் கொண்டு, எழுதப்பட்ட ஒரு பாடல்

பாடல் 4 - கண்மணி போல் என்னை காக்கும் தேவா
இப்பாடல் தேவன் நம்மை எப்படி பாதுகாக்கிறார் என்பதை அந்தாதி வடிவில் எழுதி இசையமைக்கப்பட்ட பாடல் ஆகும். ஒரு சரணத்தின் முடிவு அடுத்த சரணத்தின் துவக்கமாக  அமைவதே அந்தாதி.

பாடல் 5 - துதித்திடுவேன் உயர்த்திடுவேன்
சபை மற்றும் தனி ஜெபங்களில் அனைவரும் எளிதாக பாடக் கூடிய ஒரு பாடல், பஜனைப் பாடல்கள் வரிசையில் ஒரு கிறிஸ்தவப் பாடல் இருக்க வேண்டும் என்று கருதி மிக எளிமையான இசைவரிசையுடன் எழுதப்பட்ட பாடல் இது.

பாடல் 6 - என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர்
இப்பாடல் சங்கீதம் 27 ஐ அப்படியே பாடல் வடிவில் வரும்படி எழுதப் பட்டது ஆகும். எச்சூழ்நிலையிலும் துதித்துப் பாட ஒரு பாடலாக இருக்கும்படி தேவ கிருபையால் எழுதி இசைத்த பாடல்.

பாடல் 7 - கர்த்தர் எந்தன் மேய்ப்பர்
சங்கீதம் 23 ஐ அடிப்படையாகக் கொண்டு கர்த்தர் நம் மேய்ப்பராக இருந்தால் நாம் எப்படி அவரைப் புகழ்ந்து பாடுவோம் என்பதை விளக்கும் ஒரு பாடல்.

பாடல் 8 - உம் பாதம் சரணடைந்தேன்
கம்பீர நாட்டை என்ற கர்நாடக இராகத்தின் அடிப்படையில் ஆண்டவரிடம் சரண்டைந்து ஜெபம் செய்ய, வித்தியாசமான தாளத்தில், அதாவது 7/8 தாளத்தில் எழுதி இசைக்கப்பட்ட ஒரு பாடல்.

பாடல் 9 -  இயேசு எந்தன் கன்மலை
ஆண்ட்வராகிய இயேசு கிறிஸ்து நமக்கு யாராக இருக்கிறார் என்பதை விவரித்து, அதன் பலன் என்பதைச் சொல்லி ஒரு துள்ளலான இசையில் எழுதி இசைக்கப்பட்ட பாடல் ஆகும். பாடலைப் பாடும்போதே மனம் துள்ள வேண்டும் என்ற ஜெப விருப்பத்துடன் எழுதப்பட்ட பாடல்.  எனக்கு மிகவும் பிடித்தப் பாடல்.

பாடல் 10 - காலையில் உம்மைத் தேடுவேன்
சங்கீதம் 63 ஐ மையமாக வைத்து எழுதிய பாடல். முன்பே இப்பாடல் என் குரலில் வெளிவந்திருந்தாலும், இப்போது வேறு குரலில் வர இருக்கிறது. மாயமாளவகௌளை என்ற இந்த இராகம் பக்திப் பாடலுக்கு ஏற்ற இராகம் மற்றும் கர்நாடக இசையில் ஆரம்ப பால பாடங்களில் முக்கியமான இராகம் ஆகும். இந்த இராகத்தில் கிறிஸ்தவப் பாடல்கள் மிகவும் அரிது.

மேலே அனைத்துப் பாடல்களையும் பற்றி நான் சிறு குறிப்பு தரக் காரணம் என்னவெனில், அவைகளைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன், உங்களின் ஜெப உதவியை நாடியும் இங்கே எழுதி இருக்கிறேன். இப்பாடல்கள் அனைத்தும் தற்போது இசை குறுந்தகடு ஆக ஒலிப்பதிவு செய்யப்பட்டு வெளிவர இருக்கின்றன. அதற்கு முதற்கட்டமாக இன்றிலிருந்து குரல் பதிவு (voice recording)  செய்யப்பட இருக்கிறது. நாங்கள் தேர்ந்த பாடகர்களோ அல்லது இசை நிபுணர்களோ இல்லை என்றாலும், இம்மட்டும் வந்தது தேவனின் சுத்தக் கிருபை. இந்த ஒலிப்பதிவு மற்றும் வெளியீடு அனைத்தும் மிகுந்த பொருட்செலவு சம்பந்தப் பட்டது.

தேவனுடைய கிருபையால் நான் தற்போது பெங்களூரில் ஒரு இறையியல் கல்லூரியில் பணிபுரிந்து வந்தாலும், இந்த பாடல் வெளியீட்டுச் செலவுகளுக்கு நான் தேவனையே முற்றிலும் சார்ந்து இருக்கிறேன். நண்பர்கள் ஜெபித்து உதவ உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய பொருளாதாரத்தில் இச்செலவுகள் நடைபெற சாத்தியமில்லாதவைகளாக இருப்பது போல தோன்றினாலும், தேவனால் எல்லாம் கூடும் என்று விசுவாசிக்கிறேன்.  ஒருவேளை கர்த்தர் உங்களுடன் பேசுவார் எனில் உங்களால் முடிந்த ஒரு சிறு தொகையை “இயேசுவுக்காக” என்ற இசைத்தகடு வெளியீட்டிற்கு கொடுத்து உதவலாம்.  என் வங்கி விவரங்களை கீழே கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு ஏதேனும் விளக்கம் மற்றும் தெளிவு தேவை எனில், என்னைத் தொடர்பு கொள்ளலாம் arputhaa@yahoo.co.in  - 09538328573

Indian overseas Bank
A/c Name : ARPUTHA RAJ
Account Number: 339501000000557
Branch : BANGALORE-KOTHANUR (3395
IFSC CODE : IOBA0003395

நீங்கள் பணம் அனுப்பினால், தயவு செய்து “இயேசுவுக்காக” or "iyesuvukkaaka" என்று குறிப்பிட்டு அனுப்புவீர்கள் எனில் உங்கள் முன் கணக்கு விவரங்களை முன் வைக்க எளிதாக இருக்கும். காணிக்கையாக அனுப்ப விரும்ப வில்லை எனில் நீங்கள் இப்பொழுதே pre-order செய்யலாம். முறைப்படி வெளியீடு செய்யப்படும்போது உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
இப்பதிவு ஜெப உதவி வேண்டி....

என்றும் அன்புடன்
அற்புதராஜ்

No comments: