Wednesday, April 26, 2017

2. சின்னச் சின்ன ஆசைகளுடன் சின்னச் சின்ன இசை அனுபவங்கள்

ஒன்றாம் வகுப்பு முடித்தவுடனேயே என் பெற்றோருடன் தங்கிப் படிப்பதற்காக இராஜகோபாலபுரம் என்ற சிறிய கிராமத்தில் ஒரு வருடமும், அதைத் தொடர்ந்து எங்கள் படிப்பு கருதி, குடும்பமாக பாளை வந்து குடியேறிய பின் என் ஞாயிற்றுகிழமைகள் விசேசமான நாட்களாக மாறியது.

நான் R.C துவக்கப்பள்ளியில் படித்ததாலும், பாளை சவேரியார் பேராலயம் அருகே குடியிருந்ததாலும் ஒவ்வொரு நாளும் அதிகாலையிலேயே ஆலயத்தில் ஒலிக்கும் பாடல்களுடனே விழித்தேன்.  அன்று கேட்ட பாடல்கள் இன்றும் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதில் பின்வரும் பாடல்கள் அடிக்கடி ஒலித்தன, என்னை மிகவும் கவர்ந்தன.
1. நீயே எமது வழி
2. உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை
3. அமைதியின் தூதனாய் என்னை நீர் மாற்றிடும்
4. உம் புகழைப் பாடுவது என் வாழ்வின் இன்பம் ஐயா
அந்நாட்களில் ஞாயிற்றுக் கிழமையானால் ஆலயம் செல்ல வேண்டும், ஓய்வு நாள் பாடசாலையில் கலந்து கொள்ள வேண்டும் என்பது கிட்டத்தட்ட ஒரு வெறியாகவே எனக்கு இருந்தது. ஆண்டவர் மீது கொண்ட அன்பினால் நான் அப்படி இருந்தேன் என்று என்னால் சொல்ல முடியாவிட்டாலும், அங்கு சொல்லித் தரப்படும் பாடல்கள் மற்றும் கதைகள் எனக்கு கேட்க கேட்க திகட்டாதவைகளாக இருந்தன என்பதுதான் உண்மை. காலமே முதலில்  R.C சபையில் இருக்கும் ஓய்வு நாள் பள்ளிக்கும், அதைத் தொடர்ந்து எங்கள் குடும்பத்துடன் இணைந்து மிலிட்டரிலைன்ஸ் CSI சபையில்  வைத்து நடைபெறும் ஓய்வு நாள் பள்ளிக்கும், அதன் பின் மாலை வேளைகளில் எங்கள் வீட்டிற்கருகில் பெந்தெகோஸ்தே சபையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் இரு ஓய்வு நாள் பள்ளிகளுக்கும் அடுத்தடுத்துச் சென்று கொண்டிருந்தேன்.  இயற்கையாகவே நான் முந்தைய கட்டுரையில் சொன்னது போல “உளத்தி”யாக இருந்த படியால் அங்கே கற்றுக் கொண்ட பாடல்கள் எல்லாம் என்க்கு தொடர்ந்து எதையாகிலும் பாடிக்கொண்டிருக்க உதவியாயிருந்தன. இதில் R.C ஓய்வு நாள் பள்ளிக்குச் செல்வதை சில வருடங்களில் நிறுத்தி விட்டேன். ஏனெனில் ஒரு முறை, நான் நான்காவது படிக்கும் போது ஒரு திருவிழா சமயத்தில் சவேரியாரைப் புகழ்ந்து ஒரு பாடலைக் கற்றுக் கொடுத்தார்கள். அதன் பின்பு ஏனோ அங்கு செல்ல எனக்கு விருப்பமில்லாமல் போயிற்று.

ஓய்வு நாள் பள்ளியில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் சொல்லிக்கொடுக்கப்பட்ட ஒரு பாடல்,
குட்டி நானையா கழுதைக் குட்டி நானையாஇயேசு ராஜா ஏறிச் செல்லும் குட்டி நானையா”
இப்பாடலைப் பாடிக் கொண்டே நடந்து செல்லும்போது, இயேசு என் மீது இருப்பதாகவும், நானோர் கழுதைக் குட்டி போலவும் நினைத்துக் கொண்டு இன்பமாக பாடிச் செல்வேன். நினைக்கவே இன்பமாக இருக்கும். இப்போதும்தான். ஞாயிற்றுக் கிழமைகள் ஆனால் ஒரேயடியாக சண்டேஸ்கூல் பையனாக நான் மாறினாலும், மற்ற நாள்களில் நான் நானாகவே, தவறு செய்கிற, இயேசப்பாவுக்கு பிரியமில்லாதவைகளைச் செய்து விட்டு ஐயையோ நான் செய்து விட்டேனே என்று பதறி, உதறித் தள்ளாமல் திரும்ப திரும்ப விழுகிற ஒரு வாழ்வையே வாழ்ந்து வந்தேன். ஆனாலும் ஆண்டவர் தம் அன்பினால் என்னை தூர போக விடவில்லை, திரும்ப திரும்ப இழுத்து வந்தார்.

மிலிட்டரிலைன்ஸ் சபையில் சிறுவர்கள்  ஆறாவது, ஏழாவது வகுப்பு படிக்கும்போது பாடகர் குழுவில் சேர்ந்து விடுவர். எனக்கும் சேர ஆசை. ஆனால் பாடகர் குழு தலைவர் தாமஸ் சார் அவர்களை நினைத்து பயம். ஏனெனில் அவர் சனிக்கிழமை பாட்டு பயிற்சியில் கையில் பிரம்பு வைத்திருப்பார் எனக் கேள்விப்பட்டிருந்தேன். மிகவும் கண்டிப்பானவர். ஆகவே பாடகர் குழுவில் சேருவதை சற்று ஒத்திப் போட்டேன். ஆனால் என் வயதுடையவர்கள் அனைவரும் பாடகர் குழுவில் சேர்ந்த பின், நானும் சேராமல் இருப்பது நல்லதல்ல என்று நினைத்து சேர்ந்து விட்டேன். தாமஸ் சார் இனிமேல் பாடகர் குழுவிற்கு வரமாட்டார் என்றும், புதிய choir master வந்து விட்டார் என்று கேள்விப்பட்டதும் ஒரு காரணம். புதிதாக பாலசிங் சார் அவர்கள், நல்ல குரல் வளம் உடையவர், Casio Keyboard வாசிக்க funk முடியுடன் ஜோசுவா அண்ணன். ஒவ்வொரு வாரமும் புதிய் புதிய பாடல்களை பாமாலைப் புத்தகத்தில் இருந்தும், கீர்த்தனைகளில் இருந்தும் கற்றுக் கொண்டது பேரானந்தனுபவமாக இருந்தது. அதுவும் நான் பாடகர் குழுவில் சேர்ந்த சில நாட்களில் Choir Sunday க்காக சிறப்புப் பாடல்கள் பயிற்சி கொடுக்கப்பட்டது.
கூடு தேடும் பறவைகள் கூடுகின்றன
இயேசு ராஜன் புகழையே பாடுகின்றன
பிதா மகனின் சபையில் இன்று ஆடுகின்றன

வான் வெளியிலே தேர் வருகுது
இயேசு ராஜன் தேர் வருகுது


இந்தப் பாடலின் இராகமும், பிண்ணனி இசையும் என்னவோ செய்தது. ஞாயிற்றுக் கிழமை பாடுவதற்காகவே சபைக்குச் செல்ல ஆரம்பித்தேன்.  பாடகர் குழுவில் சேர்ந்த முதல் வருடம் (1992 அல்லது 1993ல்) பாடகர் குழு ஆராதனையில் பாடியப் பாடல் இது என நினைக்கிறேன்.  பாடகர் குழுவில் கற்றுக் கொண்ட ஒவ்வொரு பாடல்களும் மெய்மறக்கச் செய்தன. அவை ஜோசுவா அண்ணனின் இசை சேர்ந்ததும் உயிர்பெற்று பேசின.
- இன்னும் பேசுவோம்








முந்தைய கட்டுரை
1. இசையுடன் நான் - பயணக் கட்டுரைத் தொடர்

என் இசைத் தொகுப்பு பற்றிய அறிமுகக் கட்டுரையை இதுவரை படிக்கவில்லையெனில், ப்ளீஸ் படித்துவிடுங்கள் :)

இயேசுவுக்காக...

No comments: