Sunday, April 2, 2017

நாம் மறந்த, சிறந்த தேவ மனிதர்கள் – 1. தமிழ் டேவிட் - ஒரு அறிமுகம்



இந்திய கிறிஸ்தவ வரலாறு இயேசு கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவராகிய அப்போஸ்தலர் தோமாவிடம் இருந்து துவங்குகிறது என்பது வரலாற்று உண்மை என்றாலும், தேவன் துவக்க கால முதலே அனேக தேவ மனிதர்களை இம்மண்ணில் உருவாக்கி, வல்லமையாக பயன்படுத்தி இருக்கிறார். அவர்களில் அனேகரைப் பற்றி இன்றைய கிறிஸ்தவர்கள் அறிந்திருப்பது மிக மிகக் குறைவாக இருப்பது வருத்தமளிக்கக் கூடிய செய்தி ஆகும். இன்னும் பல நல்ல தேவ மனிதர்களைப் பற்றிய சரியான விவரங்கள், அவர்கள் எழுதின புத்தகங்கள் பல அப்படியே அழிந்து போய்விட்டன. இத் தொடரில் என் விருப்பம் என்னவெனில், சபை மற்றும் சாதி பாகுபாடின்றி, இந்தியாவில் குறிப்பாக முதலில் தமிழகத்தில் இருந்து தேவன் எழுப்பிப் பயன்படுத்தின தேவ மனிதர்களைப் பற்றி இக்கால கிறிஸ்தவ தலைமுறைக்கு என்னால் இயன்ற தகவல்களைச் சேகரித்து தரவிரும்புகிறேன். 

முதலாவதாக தமிழ் டேவிட் என்று உலகமெங்கிலும் அறியப்பட்ட வே. தே. டேவிட் என்பவரைப் பற்றி சில விவரங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் இவரைப் பற்றி அறிய வந்தது மிகவும் தற்செயலானது போல எனக்குத் தோன்றினாலும், அவருடைய வாழ்க்கை எனக்கு ஒரு பலத்த அசைவை உண்டாக்கி இருப்பது மறுக்க முடியாதது. அவரைப் பற்றி வாசிக்க வாசிக்க நான் அறிந்து கொண்ட ஒரு உண்மை என்னவெனில், அவர் தேவனுக்காக தம்மை எவ்வளவு முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார் என்பதாகும். நீங்களும் கூட அதைக் கண்டு கொள்வீர்கள். 
எந்த ஒரு வெற்றிக்கும் பின் அதற்கு உறுதுணையாக இருந்து உற்சாகப்படுத்தினவர் என்று கண்டிப்பாக ஒருவர் இருப்பார்.  பக்தியான கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து பாளையங்கோட்டையில் கிறிஸ்தவ பள்ளியில் படித்த டேவிட் சிறு வயது முதலே துன்மார்க்கமான வழியில் நடந்தவர் என்றாலும் அவருடைய திருமணம் அவர் வாழ்வில் ஒரு பெரும் மாற்றத்திற்கு வழி வகுத்தது. அவரே இதை தன் நண்பர் ஒருவரிடம் இப்படிச் சொல்கிறார்: “எங்களுக்குத் திருமணம் நடந்த மூன்று மணிநேரங்களுக்குக்குள் என் மனைவி ஒரு கைப்பிரதியை என்னிடம் வந்து கொடுத்தார். அப்பொழுது தான் திருமணம் செய்திருக்கும் ஆணிடம் இவ்வாறு நடப்பது ஒரு பெரிய அவமரியாதை என்று நான் நினைத்தேன். இந்தியாவில் இப்படிச் செய்வது ஒரு பெரிய அவமானமாகக் கருதப்பட்டது… அனேக நேரங்களில் அவள் அதிகாலையிலேயே ஒரு பெரிய வேதாகமத்தை எடுத்து வந்து என் முன்பாக அமர்ந்து வாசிப்பார். எனக்கு அது ஒரு பிரச்சனையாக இருந்தது. நான் அவள் ஜெபங்களைக் கேட்க முடிந்ததில்லை, அதை அப்படியே புறக்கணித்து விடுவேன்.”  என்ன ஒரு ஆச்சரியம் எனில், டேவிட் அவர்களை மணப்பதற்கு முன்பு, அப்பெண் இயேசுவை நன்கறிந்த கிறிஸ்தவர் ஒருவரையே திருமணம் செய்வேன் எனப் பிடிவாதமாக அனேகரை வேண்டாம் என தள்ளி இருக்கிறார்.  

இவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்ற நாள்முதற்கொண்டு கிறிஸ்துவைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். தேவன் இவருக்குக் கொடுத்த தாலந்துகளினால், எவரிடமும் கிறிஸ்துவைப் பற்றி தெளிவாக விளங்கக் கூறும் ஆற்றல் பெற்றிருந்தார். அந்நாட்களிலேயே மிக எளிதாக இவர் பேசும் இடங்களில் திரள் கூட்டம் கூடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. ஆன படியால் இவரை இந்தியாவின் ஒயிட்பீல்ட் என செல்லமாக அழைத்திருக்கின்றனர். 18 ம் நூற்றாண்டில் ஜார்ஜ் ஒயிட்ஃபீல்ட் என்ற தேவமனிதர் இங்கிலாந்து தேசத்தையே தேவனுக்காக அசைத்து, அனேகர் ஆண்டவரைப் பின்பற்ற ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டார் மற்றும் மெதடிஸ்ட் சபையின் ஆரம்ப காலத்தில் வெஸ்லி சகோதரர்களுடன் இணைந்து செயல்பட்டவர்.
பிரசங்க மேடைகளிலும், வாய்ப்பு கிடைக்கும் எவ்விடத்திலும் கர்த்தருக்காக வைராக்கியமாகப் பேசும் திறன் பெற்றிருந்த தமிழ் டேவிட் அவர் செய்த பல நற்காரியங்களுக்காக நன்கறியப்பட்டிருந்தார்.  அவர் எழுதிய “பரிசுத்த ஆவியின் ஞானஸ்ஸ்நானத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா?” என்ற கைப்பிரதி உகாண்டா தேசத்தில் ஒரு எழுப்புதல் நடைபெற காரணமாக இருந்தது மிகவும் ஆச்சரியமானதாகும். 

உகாண்டாவில் சி.எம்.எஸ் மிஷனெரியாக பணிபுரிந்த பில்கிங்டன் (Pilkington) என்பவர் இவர் எழுதிய கைப்பிரதியை வாசித்த பின்பு உண்டான தாக்கத்தினால் அவர் ஊழியம் செய்த பகுதியில் ஒரு பெரும் எழுப்புதல் உண்டாயிற்று. அவர் தன்  மூன்று வருடகால ஊழியத்தில் உகாண்டாவில் அனேக ஆச்சரியமான சாதனைகளைச் செய்திருந்தார். புதிய ஏற்ப்பாட்டை லுகாண்டா மொழியில் மொழிபெயர்ப்பு செய்ததுடன், பழைய ஏற்ப்பாட்டின் அனேக புத்தகங்களையும் மொழிபெயர்ப்பு செய்து முடித்திருந்தார். ஆனால் அவர் தன் ஊழியத்தில் ஆவிக்குரிய பலன்கள் மிகக் குறைவாக இருப்பதாக உணர்ந்தார். தன் பழைய மதத்தில் இல்லாதது எனச் சொல்லிக்கொள்ளும்படியாக  கிறிஸ்தவத்தில் எதுவும் இல்லை எனக் கூறி, லுகாண்டா மொழிபெயர்ப்பை வாசித்த ஒரு உள்ளூர் கிறிஸ்தவர் பின்மாற்றம் அடைந்தார்.  மிகவும் நம்பிக்கையிழந்த அச்சூழ்நிலையில், விக்டோரியாவில் உள்ள ஒரு சிறிய தீவான கோம் (Kome) என்ற பகுதிக்குச் சென்றார்.  

அந்தத் தீவில் பில்கிங்டன் தனித்திருந்த நேரத்தில், பரிசுத்த ஆவியின் வல்லமையின் இரகசியத்தைக் கற்றுக் கொண்டார். அது அவருடைய வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. 1896ல் லிவர்பூல் எனும் ஊரில் மாணவர்களுக்கு மத்தியில் தான் பெற்ற அனுபவத்தைப் பற்றிப் பேசுகையில், ”டேவிட் என்ற தமிழ் நற்செய்தியாளர் எழுதிய ஒரு புத்தகமானது ’என் வாழ்கை சரியாக இல்லை, என்னிடத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமை இல்லை’ என்பதைக் காட்டியது.  நான் என் வாழ்க்கையை நூற்றுக்கணக்கான தடவை தேவனுக்கென அர்ப்பணித்திருக்கிறேன். ஆனால் தேவனின் ஈவை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பரிசுத்த ஆவியில் நிரப்பப்படும்படி தேவன் எனக்குக் கட்டளையிடுவதை இப்பொழுது நான் கண்டேன். ”பின்பு நான் வாசித்தது, “நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்”, இந்த வாக்குத்தத்தத்தைக் கூறி நான் பரிசுத்த ஆவியைப் பெற்றேன்.’

டேவிட் எழுதிய அச்சிறு புத்தகத்தை வாசிப்பவர்கள், அதில் என்ன சிறப்பான செய்தி பில்கிங்டன் அவர்களுக்கு இருந்தது, இன்று நமக்கு அதில் ஏதேனும் செய்தி இருக்கக் கூடுமா என்று ஆச்சரியப்படக் கூடும். பரிபூரணமான வாழ்க்கையைத் தேடுபவர்களின் இருதயங்களில் இருக்கக் கூடிய ஒரு கேள்விக்கு டேவிட் தன் புத்தகத்தில் பதில் தருகிறார்: “பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தை நான் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?”
டேவிட் தரும் பதில்: ”முழங்கால் படியிட்டு, தேவனிடம் அதைக் கேட்டு, விசுவாசத்தில் அதை உங்களுக்குச் சொந்தமானதாக உரிமை பாரட்டுங்கள்; நீங்கள் முழங்காலில் இருந்த் எழுவதற்கு முன், தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். பின்பு எழுந்து போய் மற்றவர்களிடம் தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிற இந்த ஞானஸ்நானத்தைப் பற்றி சாட்சி பகருங்கள், ஏனெனில் நீங்கள் தேவனின் வாக்குத்தத்தங்களைச் சொந்தமாக்கியிருக்கிறீர்கள். உணர்ச்சி அடைய வேண்டும் என்று அல்ல,  நீங்கள் விசுவாசிக்க வேண்டும் என்றே தேவன் சொல்கிறார்… நீங்கள் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்ட போது செய்ததைப் போல இப்போதும் போய் மற்றவர்களுக்குச் சொல்லுங்கள். நீங்கள் மற்றவர்களிடம் சொல்லும்போது, அது நீங்கள் விசுவாசிப்பதைக் காண்பிக்கிறது. மேலும் தேவன் அதன் மூலமாக மகிமைப் படுகிறார். இதைக் குறித்து சாட்சிபகர நீங்கள் பயப்படுவீர்கள் எனில், நீங்கள் விசுவாசிக்க வில்லை என்பதையும், நீங்கள் பெற்றுக் கொள்ள வில்லை என்பதையும் அது காட்டுவதாக இருக்கிறது.  ஒரு ஆசிரியர் தன் மாணவர்களிடம், “ இன்றிலிருந்து ஆறு வாரங்கள் உங்களுக்கு நான் விடுமுறை அளிக்கிறேன்”, என்று சொன்னால் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் அதை யாருக்கும் சொல்லாமல் அமைதியாக இருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?  கண்டிப்பாக இல்லை.  வெகுசீக்கிரத்திலேயே ஊரெல்லாம் அந்த செய்தி பரவி இருக்கும். நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லும்போது, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கிறது. மேலும் அதன் மூலமாக தேவன் மகிமைப்படுத்தப்படுகிறார்”.

இதைத்தான் பில்கிங்டன் கோம் என்ற இடத்தில் இருந்து மெங்கோ (Mengo) விற்கு டிசம்பர் 7,1893ல் திரும்பி வந்த போது செய்தார். அவரில் இருந்த மாற்றத்தை அனைவரும் கண்டனர். அது உண்மைதான் என அவருடைய முகத்தில் காணப்பட்ட மாற்றம் உறுதி செய்தது.  டிசம்பர் 8,9, 10 ஆகிய நாட்களில் ஒரு ஆச்சரியமான தொடர் கூட்டங்கள் அல்லது எழுப்புதல் ஆரம்பமானது. பழைய கிறிஸ்தவர்கள் புதிய வல்லமையையும், பரிசுத்தத்தையும் பெற்றனர். தலைவர்கள் முன்வந்து, தாங்கள் ஒரு சாதாரண பெயர் கிறிஸ்தவர்களாகவே இருந்து வந்ததாக அறிக்கை செய்தனர். ஒரு பெரும் திரளான புறஜாதியார் மனமாற்றம் அடைந்தனர்.  முன்பு பின்மாற்றம் அடைந்து சென்ற உள்ளூர் கிறிஸ்தவர் திரும்பவும் கிறிஸ்தவரானார்.  அக்காலத்தில் நடந்தவை அதை பின் நடந்த ஊழிய வரலாற்றில்  ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.  1894ல் 68 சுதேச ஊழியர்களும், கிறிஸ்துவைப் பின்பற்றும் 1375 பேர்களும் இருந்தனர். அந்த ஆண்டில் 544 பேர் திருமுழுக்கு பெற்றனர். பில்கிங்டன் 1897ல் மரித்த போது, 659 சுதேச ஊழியர்களும், கிறிஸ்துவைப் பின்பற்றின 12,086 பேரும் இருந்தனர், 4442 பேருக்கு திருமுழுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இன்று உகாண்டா தேசத்தில் கிறிஸ்தவர்களே மற்றவர்களைக் காட்டிலும் எண்ணிக்கையில் அதிகம். 

தமிழ் டேவிட் அவர்களைப் பற்றிச் சொல்வதற்குப் பதிலாக, எங்கேயோ நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்ல காரணமுண்டு. தேவன் சாதாரண மனிதர்களை, தம் வல்லமையினால் பெரும் காரியங்கள் நடக்கப் பயன்படுத்துகிறார். ஒருவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது, அல்லது அவருக்கு தன்னை முழுமையாக விட்டுக்கொடுக்கும்போது, விசுவாசித்து செயல்படும்போது அசாதாரணமான காரியங்கள் நடக்கத் துவங்குகின்றன. அதுதான் தமிழ் டேவிட் அவர்களின் வாழ்விலும், பில்கிங்டன் அவர்களின் ஊழியத்திலும் நடந்தது. விசுவாசத்திற்கும் உணர்ச்சிவசப்படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் நன்கறிய வேண்டும். அறிந்தால், அறிந்து அதன் படி செயல்பட்டால் தேவன் உங்களையும் கொண்டு பெரும் காரியங்களைச் செய்வார். 

அடுத்த கட்டுரையில்…. தமிழ் டேவிட் அவர்களின் சுயசரிதை

No comments: