Friday, April 21, 2017

நாம் மறந்து போன தேவ மனிதர்: தமிழ் டேவிட் - பரிசுத்தமாக்கப்பட்டது எப்படி?

நான் மனம் திரும்புதலின் அனுபவத்தைப் பெற்றிருந்தாலும், என் இருதயத்தில் பூரண சமாதானத்தை நான் பெற்றிருக்க வில்லை.  பாவம் செய்வதை நாம் முழு மனதுடன் வெறுத்தேன், ஆயினும் அடிக்கடி நான் கட்டுப்பாட்டை இழந்து, ஒளியில் நடக்கத் தவறினேன். இனிமேல் பாவம் செய்ய மாட்டேன் என நான் அடிக்கடி தீர்மானம் எடுப்பதுண்டு, ஆயினும் நான் பாவம் செய்தேன்.  நான் மிகக் கவனமாக இருந்தும், தோற்றுப் போனேன்.  நான் மோசமானவைகளைப் பார்க்காதபடிக்கும், கேட்காத படிக்கும் சில வேளைகளில் என் கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டு இருப்பேன். ஒரு நாள்  நான்  இன்று பாவம் செய்ய மாட்டேன் என தீர்மானம் செய்துகொண்டு இருந்தேன், ஆனாலும்  அந்த நாளில் நான் நான்கு முறை பாவம் செய்து விட்டேன். கிறிஸ்துவின் பாதுகாக்கும் வல்லமை பற்றி நான் அறிந்திருக்க வில்லை.  சகல பாவம் மற்றும் பாவங்களில் இருந்து சுத்திகரிக்கப்படுதல் பற்றி நான் அறிய வில்லை.

நான் பிரசங்கிக்கும் போது என் மேல் கல் எறியப்பட்டாலோ, அல்லது எவரேனும் அதற்கு இடையூறு செய்தாலோ நான் கோபப்பட்டு, போலீசை அழைத்தேன். என் பிரசங்கத்தை கவனமாகக் கேட்கக்கூடிய திரள் கூட்டம் இருந்தது, ஆயினும் ஒருவரும் இரட்சிக்கப்படவில்லை. என் பிரசங்கம் முழுதும் சுய தம்பட்டமாகவே இருந்தது.  மனிதரால் வரும் மகிமையை நான் தேடினேன், பின்பு எப்படி என் வேலை வெற்றிகரமானதாக இருக்கமுடியும்? பெரும்பாலான நேரங்களில் நான் எனக்குரியவைகளையே பார்த்துக் கொண்டு, என் தவறுகளை சரிசெய்வதற்கு முயற்சி செய்வது என இருந்து வந்தேன்.  நான் பாதி வேலையைச் செய்து மீதியை தேவன் செய்ய வேண்டும் எனக் கேட்டு, அவரை என் உடன் வேலையாளாக ஆக்கிக் கொண்டிருந்தேன்.  இதனால் நான் அனேக தவறுகளைச் செய்தேன்.

நான் மனம் திரும்புதலின் அனுபவத்தைப் பெற்று சுமார் மூன்று வருடங்களுக்குப் பின், நான் கொஞ்சம் கொஞ்சமாக என் “ஆதி அன்பை” இழந்து, அனலும் குளிருமற்றவனானேன்.  நான் மகிழ்ச்சியற்றவனாக மாறி, முன்னிலும் அதிகமாக சுயத்திற்கு இடம் கொடுக்கிறவனாகி விட்டேன். வலையில் அகப்பட்ட பறவை போல, நான் சுயம் என்ற வலையில் சிக்கி உயரே எழும்ப முடியாமல் இருந்தேன்.  இன்னமும் என் தனிப்பட்ட இரட்சிப்பு பற்றிய நிச்சயத்தை நான் இழந்து விடாமல் இருந்தேன். தேவன் தம் மிகுந்த இரக்கத்தினால் ஒல்தாம் (Col. Oldham) என்பவர் மூலம் என் முந்தைய மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்தை திரும்பவும் எனக்குத் தந்தார். நான் சுயத்தை நம்புவதை விட்டுவிட்டு கிறிஸ்துவை நம்புவதற்குப் பலப்படுத்தப்பட்டேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஆயினும் நான் பாவத்தின் மீது முழு பெலம் மற்றும் வெற்றியையும், பாவங்களில் இருந்து சுத்திகரிக்கப்படுதலையும் பெற்றிருக்கவில்லை.

பாவத்தில் இருந்து சுத்திகரிக்கப்படுதல் மற்றும் வல்லமை பற்றிய கருத்து எனக்கு விளங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது.  நான் அனேக முரண்பாடுகள் உள்ள கருத்துக்களை என்னைச் சுற்றியிருந்தவர்களிடம் இருந்து கேட்டேன். பழைய சுபாவத்தைத் தவிர மீதி எல்லாம் நீக்கப்பட்டுவிட்டது என்று சிலர் சொல்வர்; அனத்தும் நீக்கப்பட்டுவிட்டது, ஒரு பாவம் கூட இனி இருக்காது என மற்றவர்கள் சொல்வர். வேறு சிலர், பாவம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் கூட இனி இருக்காது என்று சொன்னார்கள்.  அனேக வருடங்களாக நாங்கள் பாவமே செய்தது கிடையாது என சிலர் சாட்சி கூறினர்.  இந்த முரண்பாடான கொள்கைகள் என்னை குழப்பத்திற்குள்ளும் சந்தேகத்திற்குள்ளும் தள்ளின. மிக உயர்ந்த பதவிகளில் இருந்த சிலர் பாவமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.  எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல், தேவனிடம் வழிகாட்டுமாறு உதவி கேட்டேன். என்னை சரியாக வழிநடத்தும் என்று நான் அறிந்திருந்த தேவனுடைய வார்த்தையை நான் ஜெபத்துடன்  கவனமாக ஆராய்ந்து பார்த்தேன்.  மிக தெளிவாகவும், சிறப்பாகவும் எனக்கு போதிப்பதற்கு தேவன் கிருபையாக தயை செய்தார்.

நான் சந்தேகப்படுவதை விட்டுவிட்டேன்.
எல்லா பாவத்தில் இருந்தும் கர்த்தர் நம்மை சுத்திகரிக்கிறார்.
நம் பாவங்கள் இயேசுவின் மீது சுமத்தப்பட்டது ஏசாயா 53:6. கிறிஸ்துவுடனே கூட பழைய மனுஷன் சிலுவையில் அறையப்படவேண்டும் ரோமர் 6:6. நான் மாம்சத்தைக் குறித்து கற்றுக்கொள்ள விரும்பினேன் (கலாத்தியர் 5:24). ஆம்,  அதுவும் கூட ஆசை மற்றும் இச்சைகளுடன் கூட சிலுவையிலறையப்பட வேண்டியதுதான். பழைய புளித்த மாவு அகற்றப்பட்டு, சுயம் சிலுவையில் அறையப்படவேண்டும். கலாத்தியர் 2:20.  நம்மை அடிக்கடி விழப்பண்ணுகிற அனைத்துப் பாவங்களும்,  மாம்ச சிந்தையில் பிறக்கும் அனைத்து காரியங்களும் சிலுவையில் சாகடிக்கப்பட வேண்டும். பாவமான அனைத்தும், ஒவ்வொரு காரியங்களும்  நீக்கப்படவேண்டும் என்று ஆண்டவர் எதிர்பார்க்கிறார் என்பதைக் கற்றுக்கொண்டேன்.  இவை முழுமையாகச் செய்யப்படவேண்டும், எதையும் விட்டுவைத்து விடக் கூடாது.  எதிர்காலத்தைப் பற்றி நம் மனதில் எப்பொழுதும் இருக்கிற போராட்டத்தைப் பற்றி சாத்தான் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.  கலாத்தியர் 5:17 சொல்வது என்னவெனில், “ மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது,”  ஆயினும் தேவனுக்கு மகிமையுண்டாவதாக, அதே அதிகாரத்தில் 24, 25 வசனங்களில் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இருக்கிறது.  நான் செய்யவேண்டியவைகளைச் செய்ய என்னை ஒப்புக் கொடுத்தேன். தேவன் தம் வார்த்தையை நிறைவேற்றினார் – நான் முற்றிலும் கழுவப்பட்டேன். அல்லேலூயா!
அதன் பின்பு நான் சந்தித்த போராட்டங்கள் அனைத்தும் வெளியே இருந்தே வந்தன, எனக்குள் போராட்டம் இல்லை.  உள்ளே பயமும், வெளியே போராட்டமும் இருந்தது. என்னை விட்டு பொல்லாத அனைத்துக் காரியங்களும் எடுத்துப் போடப்பட்டால், அதன் பின்பு எனக்குள் பொல்லாங்கு மீண்டும் வர வாய்ப்பு இருக்கிறதா?  என நான் மறுபடியும் கேள்வி கேட்டேன்.

கர்த்தர் கொடுத்த பதில்: ” ஆதாம் எந்தவிதமான பாவ சுபாவமும் இல்லாதிருந்த போதிலும் கூட, பாவம் செய்து விழுந்து போனான்.: ஒருவர் எப்படிப்பட்ட பரிசுத்தராக இருந்தாலும் கூட அவர் பாவத்தில் விழுவதற்கு அப்பாற்ப்பட்டவரல்ல.

நான் கழுவப்பட்ட அனுபவத்தைப் பெறுவதற்கு முன்பு எனக்கு இந்த சிந்தனை வந்தது. “ என்னை நானே சுத்தமாக்கிக் கொள்ள முடியுமா?’ இல்லை. கர்த்தராகிய ஆண்டவர் அந்த வேலையைச் செய்கிறார். எசேக்கியேல் 36:25-26.
பின்பு பிசாசானவன் எனக்கு பின்வரும் சந்தேகத்தை உண்டாக்கினான்.  வாக்குத்தத்தமானது யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டது, கிறிஸ்தவர்களுக்கு பழைய ஏற்பாட்டில் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்குப் பதிலளிக்கும்படியாக, கர்த்தர் எனக்குக் காட்டியது என்னவெனில், பழைய ஏற்பாடானது யூதர்களுக்கு மட்டுமேயானது என்றால், கிறிஸ்துவும் கூட யூதர்களுக்கு மட்டுமே சொந்தமானவர், அவர்களுக்காகவே அவர் வந்தார். தேவனுடைய வார்த்தையில் அவர் அப்படி எதுவும் சொல்ல வில்லை. நான் என்னுடைய அனைத்துப் பயங்களையும், சந்தேகங்களையும் உதறித் தள்ளினேன். கிறிஸ்து முற்றிலும் எனக்குச் சொந்தமானவர் என்றும், அவருடன் கூட சகல பாவங்களில் இருந்தும் சுத்திகரிக்கப்படுதலை விசுவாசத்தினால் எனதாக்கிக் கொண்டேன் (அப்போஸ்தலர் 15:9). கிறிஸ்து எனக்குள் வாசம் செய்வதை நான் உணர்ந்தேன். நான் அவர் தங்கும் வீடாக மாறினேன்.

ஆசீர்வாதமான அனுபவத்தின் மூலமாக நான் இந்த உண்மையைக் கண்டுகொண்டேன்.  மனிதர்கள் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றி ஒருபோதும் கவலைப் படாதீர்கள். தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.

நான் இப்போது கிறிஸ்துவின் பாதுகாக்கும் வல்லமை பற்றியும், முழுமையான சுத்திகரிக்கப்படுதல் என்பதன் பொருளையும் அறிந்து கொண்டேன். என் இரட்சகராகிய தேவனின் களிகூர்ந்து, முழுமையான சமாதானத்தைப் பெற்று அகமகிழ்ந்து, இளைப்பாறுதலை அனுபவிக்கிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அடுத்த கட்டுரையில்.... தமிழ் டேவிட் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைப் பெற்ற அனுபவத்தைப் பற்றிக் கூறுவதைக் கேட்போம்.

நாம் மறந்த, சிறந்த தேவ மனிதர்கள் தொடர் கட்டுரை 3
 

முந்தய கட்டுரைகள்

நாம் மறந்த சிறந்த தேவ மனிதர்கள் - 2 தமிழ் டேவிட் (இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற கதை)

நாம் மறந்த, சிறந்த தேவ மனிதர்கள் – 1. தமிழ் டேவிட் - ஒரு அறிமுகம்

 

No comments: