Showing posts with label Pastor K J Abraham. Pentecostal pioneer. Show all posts
Showing posts with label Pastor K J Abraham. Pentecostal pioneer. Show all posts

Sunday, April 30, 2017

மறைந்தும் மறையாத திருமறைப் போதகர் - பாஸ்டர் K.J.ஆபிரகாம்



A tribute to Pastor. K. J. Abraham

எம்மதமும் சம்மதம், நதிகள் பலவாகினும் அவை அனைத்தும் சங்கமிக்கும் கடல் ஒன்றே என்றும், மதத்தின் பெயரால் சிலர் பிழைப்பு நடத்துகிறார்கள் என்றும் சொல்லிக் கொண்டும், வசைபாடி, நக்கலடித்துக் கொண்டும் திரிந்து கொண்ட காலம் ஒன்று என் வாழ்க்கையில் இருந்தது. ஒரு மனிதன் விசாலமான எண்ணத்துடன் இருப்பதற்கு மதம் தடையாக இருக்கிறது என்று அப்பொழுது தவறாக நினைத்துக் கொண்டு, ஒரு பெயர் கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன்.  தவறாது ஞாயிற்றுக் கிழமை சபைக்குச் செல்பவன், அதுவும் பாடகர் குழுவில் மிகவும் (தவறனாலும்) சத்தமாகப் படிப்பவன், ஆனால் எல்லாம் வெளிவேஷம் தான். என் நண்பர்களுடன் தீவிர விவாதமும், எங்கள் அனைவருக்குள்ளும் கேள்விகளும் இருந்தன.

அப்படிப் பட்ட சமயத்தில் தான் நாங்கள் வயதான ஒரு போதகர் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டோம். அவரைப் பற்றி சொன்னவர் மிகவும் நல்லவிதமாகச் சொன்னபடியால், நாம் அவரைப் போய்ப் பார்த்தால் கிறிஸ்தவம் மற்றும் வேதாகமம் பற்றிய நம் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கலாம் என்று நானும் என் நண்பரும் நினைத்தோம். போய்ப் பார்க்கலாம் என்று அவரைப் பார்த்தோம். மிகவும் தயக்கத்துடன், சுமார் 70 வயது நிரம்பிய அந்தப் போதகரின் வீட்டிற்குச் சென்றோம். வாசலில் கே.ஜெ. ஆபிரகாம் என்றப் பெயர்ப் பலகையை நாங்கள் பார்க்கும்போதே, “யா(ஆ)ரானு” என்றச் சத்தம் கேட்டது. வாசலுக்கு நேரே அங்கே வயதான ஒரு மனிதர் நாற்காலியில் அமர்ந்திருந்ததைப் பார்த்தோம். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டோம், சும்மா பார்க்க வந்தோம் என்று சொன்னோம். மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றவர், சுத்தமான சில தமிழ் வார்த்தைகளைக் கலந்து உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் எங்களைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லை, அவரும் அவரைப் பற்றி ஒன்றும் சொல்ல வில்லை.  நாங்கள் கிளம்பலாம் என்று நினைத்தபோது, அருகில் புதன் கிழமை அன்று நடக்கும் Bible Study பற்றிக் கூறி, எங்களை அங்கு வருமாறு அழைத்தார். நாங்களும் பார்க்கிறோம் என்றுச் சொல்லி நழுவினோம். ஆனாலும் அவர் இளம் வாலிபர்களான எங்களை நடத்தின விதமும், அழைத்த விதமும் பிடித்திருந்தது. அவருடன் பேசின போது, கேட்பதற்கு மிகவும் மன இரம்ம்மியமாயிருந்தது.

அடுத்த வாரம், “சரி, போகலாம்” என்று தீர்மானித்து அந்த Bible Studyக்கு சென்றோம். பெரிய கூட்டம் எல்லாம் அங்கில்லை. அந்த வீட்டில் வசித்து வந்த திரு. தாமஸ் என்ற வங்கி அதிகாரியும் அவருடைய பிள்ளைகளும், அது போக நான்கு அல்லது ஐந்து பேர் மட்டுமே இருந்தனர். நாங்கள் போனதால் அன்று எண்ணிக்கை சற்று அதிகம் போலும். எங்களைப் பார்த்ததும் உற்சாகமாக வரவேற்ற அந்த தேவ மனிதர், எங்களை அமரச் சொல்லி தன் Bible Studyஐ தொடர்ந்தார். அப்பொழுது யாத்திராகமம் புத்தகத்தில் இருந்து அவர்கள் வாரவாரம் வேதவிளக்கம் அளித்து போதித்துக் கொண்டு வந்தார். அன்றில் இருந்து என் புதுப் பயணம் ஆரம்பித்தது.

நான் முன்பு சொன்னது போல, என் மனதில் பல கேள்விகள் இருந்தன. ஆனால் நான் அவை எதையும் அவரிடம் கேட்காமலேயே, அவர் நடத்தின வேதபாட வகுப்புகளில் பதிலளிக்கப்பட்டு எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மனத் தெளிவு உண்டானது. வசனம் கேட்க கேட்க, ஒரு தீவிரமும், ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே சென்றது. ஆனால் கேட்பதில் இருந்த ஆர்வம் அக்காலத்தில் திருவசனத்தை வாசிப்பதில் இல்லை. இன்னும் சொல்லப் போனால் வாசித்த எதுவும் வாசித்து முடித்தவுடனேயே மறந்தும் போய்விடும். ச்சே என்று என்னை நானே நொந்து கொள்வேன். நாங்கள் ஒழுங்காக வேதபாட வகுப்புக்கு சென்ற சில நாட்களில், ஸ்ரீவைகுண்டத்தில் வைத்து நடைபெறும் உபவாச ஜெபத்திற்கு வரும்படி அழைத்தார்.  நம்மளுக்கும் உபவாசத்திற்கும் சம்பந்தமே கிடையாதே என்று நினைத்தேன். எதற்கும் போய்ப் பார்ப்போம் என்று என் நண்பரின் உதவியுடன் பாளையில் இருந்து ஸ்ரீவைகுண்டத்தில் வைத்து நடக்கும் இரண்டாவது வெள்ளி, சனி நடக்கும் உபவாச ஜெபத்திற்குச் சென்றோம்.  ஒரு சிறிய சபை, கொட்டு மட்டுமே இசைக் கருவி. ஒரு சிலப் பாடல்கள் படித்தவுடன் பாஸ்டர் ஜெபிக்கலாம் என்று சொல்லி, வேதத்தில் இருந்து சற்று பேசி அனைவரையும் ஜெபிக்கச் சொன்னார். நான் நினைத்தேன், யாராவது ஜெபத்தில் மக்களை வழிநடத்துவார்கள் என்று, ஆனால் அப்படி ஒருவரும் முன் வரவில்லை. மக்கள் முழங்கால் படியிட்டு, “ஸ்தோத்திரம்” சொல்லி மவுனமாக ஜெபிக்க ஆரம்பித்து விட்டார்கள்.  எனக்குப் புதிராக இருந்தது. கண்களை மூடினால், உலகமே என் கண்முன் வந்தது. சரி கண்களைத் திறந்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தேன். என்னைத் தவிர அனைவரும் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது, “இயேசுவே” என்றும் “பிதாவே” என்றும் ஏக்கப் பெருமூச்சுகள் சபையாரிடம் இருந்தும் பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்களிடம் இருந்தும் வந்தது. எப்படி இவர்களால் இப்படி தொடர்ந்து ஜெபிக்க முடிகிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நேரம் செல்லச் செல்ல சபையில் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ஜெபத்தில் அனலாவதை என்னால் உணர முடிந்தது. ஏறக்குறைய ஒரு மணிநேரம் கழித்து மறுபடியும் சுமார் அரைமணி நேரம் ஜெபிக்க உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். ஜெபம் முடிந்ததும், எளிமையான ஆனால் கருத்துச் செறிவான ஒரு பிரசங்கம் கொடுக்கப்பட்டது. அந்நிய பாஷைகள் அதிகம் இல்லாத, ஜெபத்துக்கும் வேத வசனத்துக்கும் மட்டுமே இடம் கொடுத்த ஒரு உபவாச ஜெபத்தில் அன்றுதான் நான் முதன் முதலாக கலந்து கொண்டேன். திருப்தியாக வெளியே வந்து ஒரு பழஜூஸ் ஒன்றை நண்பரின் செலவில் வாங்கிக் குடித்து, திரும்ப வீடு வந்து சேர்ந்தோம், வீட்டுக்குத் தெரியாமல்.

அதன் பின் பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்களை அடிக்கடி சென்று பார்த்து பேசத் துவங்கினோம்.  ஐயா என்று அவரை மற்றவர்கள் எல்லாம் மரியாதையுடன் அழைத்து, பயந்து பேசவே தயங்கி ஒதுங்கி நிற்கையில், நாங்கள் பயமறியாது, காரணமுமறியாது அவருடன் உரிமையாகப் பேசி பழகி வந்தோம். அவர் என்னை “தம்பி” என்று அழைத்தால், என்னையுமறியாமல் அவரைத் “தாத்தா” என்று கூப்பிட ஆரம்பித்தேன்.  என் ஆவிக்குரிய தகப்பனை பாஸ்டர் தாத்தா என்று அழைத்தேன்.  ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரைக்கும் பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்களின் ஜெப நேரம். அந்நேரத்தில் அவர் ஆண்டவரைத் தவிர வேறு எவருடனும் நேரத்தை செலவிட மாட்டார், பார்த்து பேசவும் மாட்டார். பத்து மணியானதும், யாருடன் பேசிக் கொண்டிருந்தாலும், இது என் ஜெப நேரம் என்று சொல்லி, மெதுவாக மேல்வீட்டறையில் சென்று ஜெபிக்க ஆரம்பித்து விடுவார்.  அவர் ஜெபிக்கும் அவ்வேளைகளில், எவரையும் அவருடன் கூட இருக்க அனுமதிக்கவும் மாட்டார் என்று மற்றவர்கள் சொல்வதுண்டு. ஆனால் எப்படியோ என்னையும் என் நண்பரையும் சில வேளைகளில் அவர் ஜெபிக்கும்போது எங்களையும் கூட இருந்து ஜெபிக்கச் சொல்வார். அப்பொழுதெல்லாம் ஐந்து நிமிடம் ஜெபிப்பது என்பதே எனக்கு எட்டாக் கனி.  மூன்று மணி நேரம் தொடர்ந்து ஜெபம் எப்படி என்று கேள்வியுடனே போய் அமர்வோம். அங்கே சென்றதும் அவர், தன் கண்களை வானத்துக்கு நேரே ஏறெடுத்து, “பிதாவே” என்று ஜெபிக்க ஆரம்பித்து விடுவார். ஆரம்பத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த நான், கொஞ்சம் கொஞ்சமாக தேவனுடன் தனித்திருந்து ஜெபிக்கும் பழக்கம் வந்தது.  எப்படி ஜெபிக்க வேண்டும் என்பது அனுபவ பாடத்தில் இருந்து கற்றுக் கொண்டேன்.  ஒரு மணிக்கு ஜெபம் முடிந்ததும், பாஸ்டர் தாத்தா வீட்டிலேயே நல்ல உணவும் கிடைக்கும். ஆவியும் ஆத்துமாவும் ஜெபத்தில் பசியாறிய பின், சரீரத்திற்கும் திருப்தியான உணவு என்ன ஒரு வரப்பிரசாதம்!

இப்படியாக ஏறக்குறைய 10 வருடங்கள், 1998 க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தில் பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்களை அடிக்கடி சந்தித்து, பேசி, ஜெபித்து மற்றும் கற்றுக்கொண்டவைகள் மறக்க முடியாதவை. இடைப்பட்ட நாட்களில் தூரம் கருதி ஸ்ரீவைகுண்டத்திற்குப் பதிலாக செய்துங்கநல்லூரில் உள்ள கிளைச்சபைக்குச் சென்ற போதிலும் அதை ஊக்கப்படுத்தி, அன்பு மாறாமல் எப்பொழுதும் இன்முகத்துடன் வரவேற்று பேசி, உற்சாகபடுத்தி, கிறிஸ்துவை விட்டு தூரமாகக் கிடந்த என்னை, அவருக்குச் சமீபமாக, கிறிஸ்துவுடனான தனிப்பட்ட வாழ்வில் வளரவும், ஒரு ஊழியக்காரனாகவும் உருவாக தேவன் பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்களைப் பயன்படுத்தினதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்கள் அதிகம் பேசுகிறவர்களைக் காட்டிலும், ஜெபிப்பவர்களையே நம்புவார். அந்நிய பாஷைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், ஆவியோடும் கருத்தோடும் பேசவேண்டும், ஜெபிக்க வேண்டும் என சபையில் அடிக்கடிச் சொல்வார். சிலர் ஜெபத்தில் அழும் அழுகை கூட உண்மையா அல்லது போலியா என்பதை எப்படிக் கண்டுகொள்ளலாம் என்பதை தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் சொல்வார். ஆராதனை என்றால் தான் மட்டுமே பேசவேண்டும் என்று நினைக்காமல், சபையில் அனேகர் ஊழியர்களாக எழும்பவேண்டும் என்று பலருக்கும் பத்து நிமிட பிரசங்க வாய்ப்பு கொடுப்பார். மூத்த விசுவாசிகளும், ஊழிய ஆர்வமுள்ளவர்களும் எப்பொழுது சொன்னாலும் பிரசங்கிக்க ஆயத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது அவரின் கொள்கை. அதே போல் பத்து நிமிடத்திற்கு மேல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால், தயங்காது அவரை பேசி முடிக்க வைத்துவிடுவார்.  பத்து நிமிடத்தில் ஒரு முழு பிரசங்கம் என்பது மிகவும் சுவராசியமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.  அவர்கள் பேசி முடித்ததும், பாஸ்டர் கே.ஜெ ஆபிரகாம் அவர்கள்  பத்து நிமிட பிரசங்கங்களைப் பற்றி சில வார்த்தைகளைச் சொல்லி, அதன் பின் அவரும் சுருக்கமாக ஒரு பிரசங்கம் செய்து முடிப்பார். ஆரம்பத்தில் பத்து நிமிட பிரசங்கங்கள் செய்பவர்கள் தடுமாறினாலும், போகப் போக அவர்கள் அப்பயிற்சியில் தேறி, முழுநேர ஊழியர்களாக ஆகிவிடுவர். கிளைச் சபைகளில் உள்ள போதகர்கள் அனைவருமே இப்பயிற்சி பெற்றவர்கள் தாம்.  பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்கள் நல்ல தீர்க்கதரிசன வரம் உடையவர்கள். பலர் இவருடன் பேசப் பயப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.  ஜெபத்தின் வல்லமையை பேசுவதுடன் மட்டும் அல்லாது, தன் தனிப்பட்ட வாழ்விலும், ஊழியத்திலும் பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்கள் செயலில் காட்டினார்கள்.

பாஸ்டர் கே.ஜெ ஆபிரகாம் அவர்கள் குறையே இல்லாத ஒரு தேவ மனிதர் அல்ல, ஆனால் தன் முன் மாதிரியான வாழ்க்கையினால் நல்ல ஒரு மாதிரியை விசுவாசிகள் மற்றும் ஊழியர்கள்  மனதிலும் வாழ்க்கையிலும் விதைத்திருக்கிறார். ஸ்ரீவைகுண்டம் வந்த புதிதில் சாப்பாட்டுகே வழியில்லாமல் பட்டினி கிடந்த இவரின் குடும்பத்தில், இவருடைய மகன் அமெரிக்காவில் மிக உயர்ந்த வேலை செய்த போதிலும் அந்த சிறிய ஊரை விட்டுப் பிரியாமல், கடைசி வரை அழைப்பில் உண்மையுடனும், ஏழை விசுவாசிகளுக்கு உதவி செய்வதில் நேர்மையுள்ளவராகவும் இருந்தார் என்று என்னால் சொல்ல முடியும்.

 அது மட்டுமல்ல, இவர் மூலமாக உருவான, உருவாக்கப்பட்ட, பயனடைந்த ஊழியர்கள் எத்தனையோ பேர். அவர்களின் பெயரையும், அவர்கள் சொன்ன விவரங்களையும், என் அனுபவங்களையும் எழுத இங்கு இடம் போதாது. இவர் ஸ்ரீவைகுண்டம் வந்த புதிதில், புதன் வேதபாடவகுப்புக்கு 50க்கும் அதிகமானவர்கள் தவறாமல் தூர இடங்களில் இருந்தும் வருவதுண்டு, அவர்களில் பலர் இன்று பெரிய ஊழியக்காரர்கள். ஆனால் அக்காலத்தில் ஞாயிறு ஆராதனை வரும் விசுவாசிகள் மிகவும் சொற்பமாகவே இருந்தனர். இன்றும் கூட ஒரு பெரிய பிரமாண்டமான சபை என்று சொல்ல முடியாது. ஒரு ஊரில் இருந்து அதிகம் விசுவாசிகள் வந்தால், அவர்களில் ஒருவரை ஊழியராக பயிற்சி கொடுத்து உள்ளூரிலேயே ஒரு சபையை ஆரம்பிக்கச் செய்வதுதான் பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் கற்றுக் கொடுத்த நல்ல பழக்கம்.
வேதத்துக்கும், ஜெபத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்த பாஸ்டர் கே.ஜெ. ஆபிரகாம் அவர்களைக் கொண்டு தேவன் தமிழகத்திலும் மற்றும் பல இடங்களிலும் தாம் செய்ய நினைத்ததைச் செய்து முடிக்க கிருபை செய்து, ஓட்டத்தை முடிக்கவும், நீதியின் கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளவும் தேவன் அவரை தம்முடன் கூட இருக்கும்படி, ஏப்ரல் 22, 2017 அன்று அவருடைய 91வது வயதில் எடுத்துக் கொண்டார். தேவன் இவரைக் கொண்டு விதைத்த தேவ வசனம் வெறுமையாகத் திரும்பாமல், ஒன்று முப்பதும், அறுபதும் நூறுமாக பலன் கொடுத்து, வழுவாமல் சத்தியத்தின் படி வாழவும், பிரசங்கிக்கவும் தேவன் இன்னும் அனேகரை எழுப்புவாராக.