Sunday, August 7, 2016

பாடல் பிறந்த கதை - 1

பொதுவாக பிரபலமான பாடல்கள் உருவான கதையை வாசிக்கும் போது, அதன் பின் பிண்ணனி உணர்ந்து பாட ஏதுவாகவும், தேவனின் இடைபடுதலை அறிந்துணர்ந்து அர்த்தம் உணர்ந்து பாடவும் உதவியாக இருக்கிறது. நான் இங்கே சொல்லப் போவது பிரபலமான பாடல்கள் அல்ல, ஏன், இன்னும் சொல்லப் போனால் கிட்டத்தட்ட அனைத்தும் இன்னமும் முறையாக ஒலிப்பதிவு கூட செய்யப்படவில்லை, அதற்கான காலமும் சூழலும் கனிந்து வரவில்லை. ஆயினும் நான் எழுதப் போகும் பாடல் பிறந்த கதைப் பாடல்கள் அனைத்துமே நான் எழுதி இயற்றியவை. இதில் நான் என்று சொல்ல எதுவுமே இல்லை. எல்லாம் தேவ கிருபை. அந்தக் கிருபை பற்றிய கதையை சொல்வதில் எனக்கென்ன தயக்கம்!

2001 ஆம் ஆண்டு வாக்கில், நான் மருத்துவ விற்பனைப் பிரதிநிதியாக பணிபுரிந்த காலம், பேரூந்தில் அன்றைய நாளின் தியான வேதபகுதியைப் பற்றி சிந்தித்துக் கொண்டே பேரூந்தோடு கூட நானும் என் சிந்தனையும் பயணம் செய்து கொண்டு செல்கிறோம். பேரூந்து சேர்மா தேவி எனும் ஊரைத் தாண்டி அம்பாசமுத்திரம் நோக்கி செல்கையில், என் மனதில் அன்று வாசித்த வேதபகுதி அப்படியே ஒரு காட்சியாக தோன்றுகிறது. அன்று காலையில் மூன்று வான சாஸ்திரிகள் இயேசு பிறந்த இடத்திற்கு ஒரு நெடிய பயணதிற்குப் பின் வந்து சேர்ந்து பணிந்து, காணிக்கை படைத்ததைப் பற்றி வாசித்திருந்தேன். அதை நினைத்தவுடனே என் மனதில் வண்ணமயமான அக்காட்சி, ஒரு பாலகன் முன் சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்து கொள்ளும் அந்த சாஸ்திரிகளின் பணிவு மற்றும் தெளிவு நினைக்கவே ஆச்சரியமானதாக இருந்தது. அவர்கள் ஏன் அப்படி அவரைப் பணிந்து கொள்ள வேண்டும்! வாகன போக்குவரத்து தொலைத் தொடர்பு வசதியற்ற அக்காலத்தில் ஒரு நீண்ட பயணம், அதின் சவால்கள், அதின் முடிவில் தங்களையே தாழ்த்தி, மற்றவர்கள் பார்வையில் ஒரு சாதாரண ஏழைப் பிள்ளை முன்பு சாஷ்டாங்கமான பணிதல் - இதிலிருந்து நான் என்ன அறிந்து கொள்கிறேன்? ஏன்? ஏன்! என்ற என் மனதின் கேள்விகள் ஒருபக்கம், இன்னொருபக்கம் உடனே மடை திறந்த வெள்ளமென சில வரிகள் என் மனதில். உடனே எதிலாவது அதை எழுத வேண்டுமே என்று பார்த்தால் என்னிடம் பேப்பர் எதுவும் இல்லை. நான் இவ்வரிகளை மறந்துவிடக் கூடாதே என்ற பதைபதைப்பில், சட்டைப் பையை துலாவினால், ஒரு சிறிய சீட்டு - அந்த பேரூந்து பயணச் சீட்டு. உடனே எதைப் பற்றியும் யோசிக்காமல் அதில் எழுதத் துவங்கினேன்...
தெண்டனிட்டுப் பணிந்திடுவோம்
தேற்றிடுவார் தொழுதிடுவோம்
அண்டி வந்த யாவரையும்
அன்புடனே அரவணைக்கும்
பரலோக தேவசுதன்
பரிசுத்த இயேசு பரன்

மிகச் சிறிதாக நான் வாசிக்கக் கூடிய அளவில் எழுதி முடித்த பின்பு எனக்கே ஆச்சரியமானதாக அந்த அனுபவம் இருந்தது. ஏனெனில் நான் முறைப்படி இசைகற்றவன் அல்ல, ஆலய பாடகர் குழுவில் நான் பல ஆண்டுகள் இருந்தது உண்மைதான் என்றாலும் தாளம் தப்பாமல் பாடுவதில் எப்பொழுதுமே சிரமப் பட்டிருக்கிறேன். ஒருவேளை இதை வாசிக்கும் என் ஆலய பாடகர்குழு நண்பர்கள் இதை நன்கறிவர். வேலை முடிந்ததுமே நேரடியாக நான் பெரிதும் மதிக்கும் என் குடும்ப நண்பர் ஜான் பிரகாஷ் அவர்களிடம் சென்று இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். நண்பர் ஜான் மிகச் சிறந்த அறிவாளி மட்டுமல்ல, நன்கு இசை நுணுக்கங்களை அறிந்தவரும் கூட. நான் பாடல் வரிகளை எழுதும்போதே அதற்கான இராகமும் தானாகவே எனக்குள் உருவாகி இருந்த படியால், அவரிடம் பாடியும் காண்பிக்கிறேன். பாட்டைக் கேட்ட உடனே அவர் ரியாக்சன் என்ன என்று அறிவதில் மிகுந்த ஆசை. என்ன வென்று கேட்டேன். பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு வரியும் துவங்குவதற்கு முன் விடும் ஒரு ப்ரேக் கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது என்று அவர் சொல்கையில் என் மனதில் மிகவும் பரவசம்.

 தொடர்ந்து அவர், ஒரே ஒரு பல்லவி மட்டுமே இருப்பது ஒரு முழுமையான பாடல் அல்ல, இன்னும் சில பல்லவிகள் எழுத முயற்சி செய் என்று சொன்னார். இப்படி ஒரு சவால் இருக்கிறதா, ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்ற வேண்டுதலுடன் ஒரு நோட்டு மற்றும் பேனாவை எடுத்துக் கொண்டு பாடலைப் பாடிக் கொண்டிருக்கிறேன். என்னையுமறியாமல் தொடர்ந்து புதிய வரிகள் உருவாகி பாடிக் கொண்டிருக்கிறேன்...

2. எத்தனையோ துன்பங்கள்
ஏராளம் வேதனைகள்
அத்தனையும் அற்றுப் போகும்
அன்பர் இயேசு திருமுன்
நம் இயேசு சுமந்துவிட்டார்
எல்லாமே தீர்த்து விட்டார்

3. சிலுவை நம் தியானமானால்
செழிக்கும் நம் ஜீவியம்
சோர்வுகள் மறைந்துவிடும்
சோதனைகள் ஜெயிக்கலாமே
சிலுவை சுமந்திடுவோம்
இயேசுவுக்காய் வாழ்ந்திடுவோம்

ஒரே மூச்சில் பாடி எழுது முடித்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி. மறுபடியும் நண்பர் ஜான் அவர்களிடம் முழுமையாக பாடிக் காண்பித்து பாடலை பத்திரமாக மனதில் சேமித்து வைத்தேன், என்றாவது ஒரு நாள் அனைவரும் கேட்கச் செய்யலாம் என்ற விசுவாசத்துடன். 15 வருடங்கள் கழித்து இப்பொழுது இதைப் பற்றி எழுதவாவது செய்ய ஆரம்பித்திருக்கிறேன், சீக்கிரம் முறையான ஒலிப்பதிவாக பார்க்கும் விருப்பத்துடன். பார்க்கலாம்!
விரைவில் மற்றுமொரு பாடல் கதையுடன் சந்திப்போம்.

3 comments:

Pethuru Devadason said...

சீக்கிரம் ஒலிப்பதிவாகி கேட்க ஆவலும் வாழ்த்துக்களும் ஜெபமும்.

Pethuru Devadason said...

சீக்கிரம் ஒலிப்பதிவாகி கேட்க ஆவலும் வாழ்த்துக்களும் ஜெபமும்.

Arputharaj Samuel said...

நன்றி அண்ணா! உங்கள் விருப்பம் சீக்கிரத்தில் கைகூடி வரும் என்று நம்புகிறேன்.