நீங்கள் இந்தக் கேள்விக்கு என்ன சொல்லலாம் என்று நினைக்கும்
இவ்வேளையில், நான் சமீபத்தில் கேட்ட ஒரு கிறிஸ்மஸ் செய்தியில், எங்கள் கல்லூரிக்கு
வந்திருந்த பாஸ்டர் மைக்கேல் தாமஸ் ராஜூ அவர்கள் சொன்னது எனக்கு நினைவுக்கு வருகிறது. கிறிஸ்மஸ் என்றதுமே நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு
முன் மண்ணில் மனிதனாக தோன்றிய இயேசுவின் பிறப்பை, ஏழை மாட்டுத் தொழுவத்தில் அவதரித்த
சிறப்பு மகிழ்வை நினைவு கூர்கிறோம். அவர் சொல்கையில், “கிறிஸ்மஸ் என்பது தேவனுடைய உண்மையை
வெளிப்படுத்துகிற ஒரு நாள். இயேசு பிறப்பதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு, தேவனுடைய
அழைப்புக்குக் கீழ்ப்படிந்த, ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றியதை,
தேவனுடைய உண்மையை நினைவு கூற வேண்டும்” என்றார். பிள்ளையில்லாத ஆபிரகாம், சொந்த இடமில்லாமல்
ஒரு வழிப்போக்கனைப் போல சுற்றித் திரிந்த ஆபிரகாம் என இல்லாமைக்குச் சொந்தக் காரனான
ஆபிரகாம் மூலம் பூமியில் உள்ள அனைவரையும் ஆசீர்வதிக்கும் வார்த்தையை வாக்குத்தத்தம்
பண்ணினவர், மன்னுருவாக வந்த வார்த்தையானவரை நாம் நினைவில் கொள்வது மிகவும் அவசியம்.
ஏனெனில் தேவன் வாக்கு மாறாதவர். ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கு முன் தன் தந்தையின்
வாழ்வில் தேவன் எவ்வாறு இடைபட்டார் என்பதையும், இன்னமும் தேவன் உண்மையுள்ளவராக அவர்கள்
குடும்பத்தில் இருப்பதையும் அவர் சொல்ல மறக்கவில்லை.
நான் இதைப் பற்றி யோசிக்கையில், பகிர்ந்து கொள்கையில், “தேவன்
எதற்காக ஒரு மனிதனாக வந்தார்”, ”தேவன் மனிதனாக வர வேண்டிய அவசியம் என்ன?” என்று முன்
இருந்தவர்களிடம் கேட்டேன். தேவன் ஏன் மனிதனாக வரவேண்டும்? என்பதற்குப் பல பதில்கள்
வந்தன:
1. தேவன் மனிதர்களை நேசிப்பதால்….
2. இந்த உலகத்தில் பாவம் பெருகிவிட்ட படியால…
3. மனிதனைக் காப்பாற்றுவதற்காக…
உங்கள் மனதில் தோன்றும் பதில் என்ன? உடனே ஏதேன் தோட்டம் நினைவுக்கு
வருகிறதா! ஏதேன் தோட்டத்தில் மனிதன் தேவகட்டளையை மீறி பாவம் செய்து தேவனுக்கு தன்னை
மறைத்துக் கொண்டபோது, அவனைத் தேடிவந்த தெய்வம், மனிதனை வஞ்சித்த சர்ப்பத்துக்கு எதிராக,
“அவர் உன் தலையை நசுக்குவார்” எனச் சொல்லி ஆதாம் ஏவாளுக்கு ஒரு வாக்குத்தத்தம் கொடுத்தாரே.
கொடுத்ததும் அல்லாமல் அவர்களுக்காக தோலினாலான ஒரு உடையையும் கேட்காமலே கொடுத்தாரே!
நிற்க.
இங்கே இரு காரியங்களை நாம் அறிந்து கொள்வது நல்லது. ஆதாம் ஏவாளுக்கு உடை கொடுப்பதற்காக ஒரு விலங்கு அடிக்கப்பட்டிருக்க வேண்டும். அது ஆட்டுக்குட்டியானவர்தாம். ஏனெனில் உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என வேதத்தில் வாசிக்கிறோமல்லவா! இப்படி ஒரு விளக்கம் கொடுக்கப்படுவதுண்டு. இதில் முழு உடன்பாடு எனக்கு இல்லை எனினும், பாவம் செய்த மனிதனின் பாவத்தைச் சுமக்க அன்றே, “இதோ” என்று ஒருவர் ஆயத்தமானார் என்று நினைத்துக் கொள்கிறேன்.
இரண்டாவதாக, பாவம் செய்த பிறகுதான் ஆதாம் ஏவாள் பிள்ளை பெற்ற படியால், பாவம் செய்து பிள்ளை பிறந்தது என அனேகர் குழப்பிக் கொள்கின்றனர். திருமணம் என்பது தேவன் உண்டாக்கின ஒரு நியமம். மனிதன் பிறக்கும்போதே பாவத்தில் பிறக்கிறான் என்பது உண்மை. ஆனால், பாவத்தினால் பிறக்கிறான் என்பது தவறான புரிதல் ஆகும். பிறக்கும் குழந்தைகள் அவர்களை அறியாமலேயே, நாம் சொல்லிக் கொடுக்காமலேயே பல காரியங்களைச் செய்வதன் காரணம், பிறக்கும்போதே நாம் பாவ சுபாவம் உள்ளவர்களாக பிறப்பதுதான். இதை ஜென்ம சுபாவம் என வேதம் கூறுகிறது. அனேகர் சங்கீதம் 51:5 ஐ தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். நாம் அவ்வாறு இருக்கலாகாது.
சரி. மீண்டும் நம் செய்திக்கு வருவோம். தேவன் ஏன் மனிதனாகப்
பிறந்தார். வேதத்தின் எனக்கு மிகவும் பிடித்த வேத பகுதிகளில் ஒன்றான எபிரேயர் 2:
14 சொல்வது போல, “பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும்
அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்.” நமக்காக நம்மைப் போலானார்.
ஆபிரகாம் அனேக ஆண்டுகள் காத்திருந்தான். கண்டிப்பாக
அவன் காத்திருந்த அந்த ஆண்டுகள் அவனுக்கு மிகவும் ஏக்கத்தைக் கொடுத்திருக்கும். ஆனால்
அவனை அழைத்தவர் உண்மையுள்ளவர். அவனுடைய முதிர் வயதில் ஏறக்குறைய முப்பது வருடம் கழித்து
அவனுடைய வாழ்வில் வாக்குத்தத்தத்தை நிறைவேறப்பண்ணினார். ஈசாக்கு பெயருக்கேற்றார்ப்
போல அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியை உண்டாக்குகிற ஒரு மகனாக இருந்தான். ஆனால் ஆண்டவர்
இயேசு பிறப்புக்காக, இந்த உலகம் காத்திருந்தது மீக நீண்டதொரு காலம். வேதத்தில் உள்ள
கணக்கின் படி ஏறக்குறைய நான்காயிரம் வருடங்கள். இயேசுவின் கன்னிப்பிறப்பைப் பற்றிய
முன்னறிவிப்பே, அவர் பிறப்பதற்கு 650 வருடங்களுக்கு முன் உரைக்கப்பட்டிருந்தது. சொன்னபடி,
காலங்கள் நிறைவேறினபோது தேவனுடைய ஒரே பேறானவர் மனிதனாகப் பிறந்தார்.
இயேசு மனிதனாகப் பிறந்தபோது, வானில் தோன்றிய தேவதூதர்கள் சொன்னது என்ன? ”இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி” என தேவ தூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார்கள் அல்லவா! இப்படி மிகுந்த சந்தோசத்தை உண்டாக்கும் நற்செய்தியை அறிவித்த தேவதூதர்கள் சந்தோசமடையும் ஒரு தருணம் என்ன தெரியுமா? வேதம் சொல்கிறது போல, “மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது” (லூக்கா 15:7,10). இப்பொழுது சொல்லுங்கள். கிறிஸ்து பிறந்த செய்தியைத் தான் கிறிஸ்மஸ் கீத பவனியாக வீடுகள் தோறும் சொல்கிறோம். ஆனால் மிகவும் வருந்தத்தக்க விதமாக இன்று அவை வெறும் பணம் சேகரிப்பு உத்தியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கிறிஸ்து பிறந்தார் என்பது ஒரு வரலாற்று உண்மை. ஒருவேளை நாம்
கொண்டாடும் டிசம்பர் 25 என்பது சரியான நாளாக இல்லாமலிருக்கலாம். அதற்காக அவர் பிறக்கவில்லை
என்றாகிவிடாதல்லவா! மனிதர்களாகிய நமக்கு உண்மையான கிறிஸ்மஸ், கிறிஸ்து என்று நம் இருதயத்தில்
பிறக்கிறாரோ, நாம் என்று தேவனுடைய குடும்பத்தில் சேர்க்கப்படுகிறோமோ அன்றே உண்மையான
கிறிஸ்மஸ் ஆகும்.
சமீபத்தில் ஒரு வேதாகமக் கல்லூரியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, christmas க்கும் X-mas க்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். இரண்டுமே கிறிஸ்து பிறப்பு பண்டிகையைக் குறிக்கிற வார்த்தைகள். ஆனால் X-mas ல் கிறிஸ்து இல்லை. கிறிஸ்து இல்லாத கிறிஸ்மஸ் உண்மையான கிறிஸ்மஸ் ஆக முடியாது. அதே போலத்தான் கிறிஸ்து இல்லாத கிறிஸ்தவன் X-ian ஆக இருப்பான். அவனால் இந்த சமுதாயத்துக்கு எந்தப் பயனும் இல்லை என்று மாணவர்களிடம் சொன்னேன்.
கிறிஸ்மஸ் என்றாலே வரும் மகிழ்ச்சி, கிறிஸ்துவுக்கு தாலாட்டுப்
பாடுவதுடன் நின்று விடாமல், வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும்,
கிறிஸ்துவைப் பகிர்ந்து, அன்பை வார்த்து சமாதானம் செழிக்க தேவன் நம்மையும் பயன்படுத்துவாராக.