Monday, November 1, 2021

கிறிஸ்தவ வாழ்க்கை முறை

வாசிக்க: எரேமியா 51,52; சங்கீதம் 120; 2 தீமோத்தேயு 2

வேத வசனம்  2 தீமோத்தேயு 2: 4. தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்.
5. மேலும் ஒருவன் மல்லயுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.
6. பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும்.

கவனித்தல்:  “ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையானது” என்பது நாம் ஏராளமான மற்றும் கடினமான விஷயங்களையும் ஒரு படம் மூலமாக எளிதில் சொல்ல முடியும் என்பதைக் குறிக்கும் வாக்கியம் ஆகும். 2 தீமோத்தேயு 2:4-6 வசனங்களில், பவுல் வித்தியாசமான வேலை செய்யும் மூன்று பேரைப் பற்றிய வார்த்தை சித்திரத்தை நம் முன் வைத்து, அவர்களின் உதாரணத்தைப் பின்பற்ற அறிவுருத்துகிறார். முதலாவதாக, ஒரு போர்வீரனைப் பற்றி அவர் கூறுகிறார். ஒரு போர்வீரனின் முதன்மையான நோக்கம் எப்படியாகிலும் தன் அதிகாரியின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாக இருக்கும். அந்நாட்களில், ரோம போர்வீரர்கள் சமுதாயத்தில் மற்ற வேலைகளைச் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. அவர்கள் உலகக் காரியங்களினால் தங்கள் கவனம் சிதறி விடாமல், தங்கள் பணியில் முழு கவனத்துடன் இருக்க வேண்டும். அப்படி எனில், ஒரு போர்வீரன் தன் வேலையைத் தவிர வேறெந்த வேலையும் செய்யக் கூடாது என்று பொருள் அல்ல. மாறாக, அவன் தன் வேலையைப் பாதிக்கிற மற்ற காரியங்களில் தலையிட்டு சிக்கிக் கொள்ளக் கூடாது. ஒரு விளையாட்டு வீரரும் (வசனத்தின் படி மல்யுத்தம் பண்ணுகிறவன்) கூட  கடினமான உடற்பயிற்சிகள் மற்றும் பயிற்சிகளினால் தன் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொண்டு, போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற தன்னை தயார் செய்து கொள்வார். போட்டிக்கு பல மாதங்கள்/வருடங்களுக்கு முன்பே, விளையாட்டு வீரர்கள் தங்களை ஆயத்தப் படுத்திக் கொள்ளவும், தங்கள் பயிற்சியாளரின் ஆலோசனைகளைப் பின்பற்றவும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள். பரிசு பெறும் நோக்கத்துடன் அவர்கள் விளையாட்டு விதிகள் அனைத்தையும் முழுமையாக கற்றறிந்து, அவைகளைப் பின்பற்றுகிறார்கள். சுய-கட்டுப்பாடு, தியாகம் செய்ய விருப்பம், சுய-வெறுப்பு, தொடர்ச்சியான பயிற்சி, சரீரத்தை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுதல், மற்றும் தாங்கள் ஈடுபட்டிருக்கிற வேலையில் அர்ப்பணம் ஆகியவை ஒரு போர்வீரர்  மற்றும் விளையாட்டு வீரரிடம் காணப்படும் இயல்புகள் ஆகும். ஒரு போர்வீரர் மற்றும் விளையாட்டு வீரரைப் போல, இதே விதத்தில், நாம் கிறிஸ்துவை முழு மனதுடன் பின்பற்ற வேண்டும். கிறிஸ்துவைப் பின்பற்றுதல் என்பது பகுதி நேர வேலை அல்ல. நம் கிறிஸ்தவ வாழ்க்கையானது கிறிஸ்துவுக்காக முழு நேரமும் சேவை செய்ய அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை  ஆகும்.  நம்மை பலனற்றவர்களாக ஆக்கிவிடுகிற  “உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கம்” ஆகியவைகளுக்கு எதிராக கிறிஸ்தவர்களாகிய நாம் கவனமாக இருக்க வேண்டும் (மத்.13:22).

விவசாயிகள் நம் நாட்டில் உரிய கனம் மற்றும் புகழ்ச்சியைப் பெறாத கதாநாயகர்கள் ஆவார்கள். அவர்களின் கடின உழைப்பு இல்லையேல், நம் எவருக்கும் உணவு கிடைக்காது. உழவு முதல் அறுவடை வரைக்கும் நாள் முழுதும் தங்கள் வயல்களில் விவசாயிகள் கடினமாக ஓய்வின்றி உழைக்கின்றனர்.  அவர்களின் மனமும் நினைவுகளும் எப்போதும் பயிர்களைப் பற்றியே இருக்கும். ஒரு விவசாயியின் வேலை ஒருபோதும் முடிவில்லாத வேலை ஆகும். அவன் கடினமாக உழைத்தாலும், அவன் பூமியின் நற்பலனை அடையும்படி பொறுமையுடன் காத்திருக்கிறான் (யாக்கோபு 5:7). அவனுடைய கடின உழைப்பானது விரும்பிய அறுவடையைப் பெற தேவனைச் சார்ந்து இருக்கிறது. இங்கே, ஒரு போர் வீரர், விளையாட்டு வீரர், மற்றும் விவசாயியின் வேலையைக் குறிப்பிட பவுல் நிகழ்கால வினைச்சொற்களைப் பயன்படுத்துகிறார். இது அவ்ர்களின் வேலையானது தொடர்ச்சியாக செய்யப்படவேண்டிய ஒன்று என்பதைக் குறிக்கிறது. நாம் வாழும் உலகில் ஒரு  போர்வீரர், விளையாட்டு வீரர், மற்றும் விவசாயியின் வேலைக்கான பலன் அல்லது பரிசு குறித்து எந்த உத்திரவாதமும் கிடையாது. ஒரு  போர்வீரர், விளையாட்டு வீரர், மற்றும் விவசாயியின் வேலையைக் காட்டிலும் அதிகமாக, கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுகிறிஸ்துவை உண்மையாக சேவிக்க வேண்டும். தேவன் நம்மிலும் நம் மூலமாகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தேவனிடத்தில் இருந்து நமக்குரிய என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும் பரிசை நாம் பெறுவோம் என்று வேதாகமம்  உறுதிப்படுத்துகிறது (1 கொரி.9:25). நாம் இயேசுவை எப்படிப் பின்பற்ற வேண்டும், அவருக்காக வாழ்வது எப்படி என்பதை அவர் நமக்கு முன்னமே போதித்திருக்கிறார்—நாம் நம்மை நாமே வெறுத்து, அனுதினமும் நம் சிலுவையை எடுத்துக் கொண்டு, கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் (மத்.16:24; லூக்.9:23; மாற்கு 8:34). நாம் இந்த வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்ப்போம். இவைகள் எல்லாவற்றிலும் நமக்குத் தேவையான சிந்தனையை கர்த்தர் பேசுவார் (வ.7).

பயன்பாடு:  ஒரு கிறிஸ்தவனாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பிரியப்படுத்துகிறா ஒரு வாழ்க்கையை நான் வாழ வேண்டும். நான் பெற்ற அழைப்பு, கிறிஸ்துவின் நற்செய்தி, மற்றும் கர்த்தருக்குப் பிரியமான காரியங்கள் இவைகளுக்கு எதிரான காரியங்களில் நான் சிக்கிக் கொள்ளக் கூடாது. நான் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட, கிறிஸ்துவினால் இயக்கப்படுகிற வாழ்க்கையை வாழ வேண்டும். நான் இயேசு கிறிஸ்துவுக்கும் அவரின் வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிய விருப்பம் உள்ளவனாக இருக்க வேண்டும். என் வாழ்நாளெல்லாம் நான் அவருக்கு ஊழியம் செய்வேன். தேவன் அவரிடம் இருப்பதிலேயே சிறந்ததை எனக்குத் தந்தார். ஆகவே, நான் என்னில் சிறந்ததை அவருக்குக் கொடுப்பேன்.

ஜெபம்:    தகப்பனே, இன்று நீர் காண்பிக்கும் கிறிஸ்தவ வாழ்க்கை முறைக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உலக ஆதாயத்துக்காக அல்ல, உமக்காகவே என்று உண்மையுடன் உமக்கு ஊழியம் செய்ய ஒப்புக்கொடுத்து என்னை அர்ப்பணிக்க விரும்புகிறேன். கர்த்தாவே, பயிற்சி தாரும், போதித்தருளும், வழிநடத்தியருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவனுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ இன்று எனக்கு உம் பலத்தைத் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 303

No comments: