Thursday, November 25, 2021

எல்லா காலத்திற்கும் ஏற்ற ஒரு வார்த்தை

வாசிக்க: எசேக்கியேல் 43,44; சங்கீதம் 144; யாக்கோபு 5

வேத வசனம்: யாக்கோபு 5: 13. உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.

கவனித்தல்:   ”நான் இதைச் செய்திருந்தால், நான் அதைத் தவிர்த்திருக்கலாம் அல்லது அதைப் பெற்றுக் கொண்டிருப்பேன்” என்று நடக்காத விஷயத்தைப் பற்றி சிலர் பேசுவதுண்டு. சிலர் தங்கள் கடந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்; தங்களுடைய கடந்த கால சிறப்பான வாழ்க்கையை நினைத்து அல்லது கடந்த கால தோல்விகளை நினைத்து வருந்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கடந்த காலத்தில்  முடிந்து போனவைகள் முடிந்து போனவைதான்; அவைகளை நாம் மாற்ற முடியாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நிகழ் காலத்தில் வாழ்கிறவர்களாக இருந்து, எதிர்காலத்திற்காக நம்மை ஆயத்தம் செய்கிறவர்களாக வாழ வேண்டும். யாக்கோபு 5ஆம் அதிகாரத்தில், நிகழ்காலத்தில் வாழ்வதற்கான சில நடைமுறை ஆலோசனைகளை நாம் காண்கிறோம்.  யாக்கோபு சில எளிய கேள்விகளைக் கேட்டு, அப்படிப்பட்ட சமயங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் எனச் சொல்கிறார். ஒருவர் துன்ப்பபட்டால், அவர் உடனடியாக செய்ய வேண்டியது ஜெபம் ஆகும்.  யாக்கோபு 5:13இல், அது என்ன வகையான துன்பம் என யாக்கோபு குறிப்பிடவில்லை. அவருடைய காலத்தில், யூதக் கிறிஸ்தவர்கள் தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்தினிமித்தம் அனேக உபத்திரவங்களையும், பாகுபாடுகளையும், மற்றும் அவமானங்களையும் எதிர் கொண்டனர்.  நாமும் நம் வாழ்வில் பலவிதமான துன்பங்களை எதிர்கொள்ள நேரிடலாம்.  அப்படிப்பட்ட சமயங்களில், நாம் ஜெபிக்கும்போது, நாம் தேவனைச் சார்ந்து இருக்கிறோம் என்பதையும், நம் துன்பத்தை ஜெயிக்க அவருடைய உதவியையும் வல்லமையையும் நாடுகிறோம் என்பதை வெளிப்படுத்துகிறோம்.

நாம் ஜெபிக்கும்போது, ”ஜெபத்தினால் சந்திக்கப்பட முடியாத தேவை மற்றும் ஜெபத்தினால் தீர்க்கப்பட முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை” என்று நாம் தேவன் மீது நம்பிக்கையாக இருக்க முடியும். யாக்கோபு 5:13 எழுதப்பட்ட சூழலைப் பார்க்கும்போது, யாக்கோபு 5:13-18 வரையிலான வசனங்களில் ஜெபமானது முக்கியமான கருப்பொருளாக இருப்பதை நாம் காண்கிறோம்.  இந்த வேதப் பகுதியின் ஒவ்வொரு வசனமும் ஜெபத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. யூசிபியஸ் என்ற மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ தலைவர் யாக்கோபு எப்பொழுதும் ஜெபிக்கும் மனிதராக, ஜெபத்தின் வல்லமையை விசுவாசித்த ஒருவராக வாழ்ந்தார் என எழுதுகிறார். முழங்காலில் நீண்ட நேரன் நின்று மக்களுக்காக அவர் ஜெபித்ததை  அனைவரும் அறிந்திருந்தனர். அவருடைய முழங்கால்களில் ஒட்டகத்திற்கு இருப்பது போல காய்ப்பு இருந்தது. ஆகவே மக்கள் அவரை ”ஒட்டகத்தின் முழங்கால்களை உடைய மனிதர்” என அழைத்தனர்.  யாக்கோபு தன் வாழ்வில் கைக்கொண்டு வந்தவைகளில் இருந்து ஜெபம் செய்ய உற்சாகப்படுத்தி எழுதுகிறார்.

ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது, சங்கீதம் பாட யாக்கோபு அழைக்கிறார். நாம் துன்பப்பட்டாலும், ஆசீர்வாதமாக இருந்தாலும், நாம் ஜெபம் மற்றும் துதிப் பாடல் மூலமாக தேவனிடம் செல்ல முடியும். நம்மை ஆசீர்வதிக்கிற தேவனை நாம் மறந்துவிடக் கூடாது.  ஸ்டீவன் ஜே. கோல் என்பவர் சொல்வது போல, “நம் வாழ்வில் பாடுகள் அல்லது நிறைவான ஆசீர்வாதங்கள் என எவை இருந்தாலும், அது தேவனை நோக்கியதாக, தேவனைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.” யாக்கோபு 1:2,3இல், ”என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போதுஅதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” என்று யாக்கோபு எழுதுகிறார். “பாடுபடுகிறவருக்கும் உற்சாகமாக இருக்கிறவருக்கும் யாக்கோபு கூறும் ஒரே அறிவுரை ”அதைக் கர்த்தரித்தில் எடுத்துச் செல் என்பதே. உண்மையைச் சொல்வதானால், இந்த இரண்டு கட்டளைகளையும் மாற்றிச் சொல்ல முடியும்: பாடுபடுகிறவர்கள் ஜெபிக்கவும், மகிழ்ச்சியாக இருக்கிறவர்கள் பாடவும் வேண்டும்” என பாஸ்டர் டேவிட் கூஜிக் எழுதுகிறார். நம் வாழ்வின் நிகழ்கால சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், நாம் எல்லாவற்றிற்காகவும் தேவனிடம் ஜெபித்து  அவரைத் துதிக்க முடியும்

பயன்பாடு:  நான் என் வாழ்வில் பிரச்சனைகளைச் சந்திக்கும்போதெல்லாம், மற்றவர்களின் உதவியைத் தேடுவதற்கு முன்பு, ஜெபத்தில் தேவனுடைய உதவியை நான் தேட வேண்டும்.   நான் ஜெபிக்கும்போது, நான் எதிர்கொள்கிற பிரச்சனையை கடந்து செல்கிறதற்கான வலிமையை கண்டு கொள்கிறேன். நான் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவருடைய சித்தத்தைச் செய்ய என்னை ஒப்புக் கொடுக்கிறேன்.  நான் ஜெபித்து, தேவனைத் துதிக்கும்போது, என் கவனத்தை தேவனிடம் திருப்புகிறேன்; என் சூழ்நிலைகள் அல்ல, அவர் என் மகிழ்ச்சியின் ஆதாரமாக மாறுகிறார்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீரே என் ”அடைக்கலமும், பெலனும், ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையுமானவர்” (சங்.46:1). கர்த்தாவே, எப்பொழுதும் உம்மைத் தேடவும், உம் வல்லமை மற்றும் பாதுகாப்பின் கீழ் வாழவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 327

No comments: