Saturday, November 13, 2021

திறப்பில் நின்று ஜெபித்தல்

வாசிக்க: எசேக்கியேல் 21,22; சங்கீதம் 133;  எபிரேயர் 7

வேத வசனம்:   எசேக்கியேல் 22: 30. நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.

கவனித்தல்: கிறிஸ்தவர்களை மற்றவர்களுக்காகவும் தேசத்துக்காகவும் பரிந்துரை ஜெபங்களைச் செய்யும்படி உற்சாகப்படுத்தவும், அது பற்றிய ஒரு சவாலை முன் வைக்கவும் எசேக்கியேல் 22:30 அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. எசேக்கியேலின் காலத்தில் கர்த்தர் தனக்கு முன் திறப்பிலே நின்று ஜெபிப்பதற்கு ஒருவரையும் காணவில்லை. அந்நாட்களில் கள்ள தீர்க்கதரிசிகள்  தேசத்தில் இருந்த அநீதி மற்றும் கர்த்தருக்கு விரோதமான காரியங்களின் மேல் ”சாரமற்ற சாந்தைப்” பூசி, ”அபத்தமானதைத் தரிசித்து, பொய்ச்சாஸ்திரத்தை” மக்களிடம் சொல்லி  பொய்யான நம்பிக்கையை கொடுத்துக் கொண்டிருந்தார்கள் (வ.28). எசேக்கியேல் 22:30 க்கு அதிகமாக அறியப்படாத அல்லது சொல்லப்படாத விளக்கம் என்னவெனில், தேவன் தம் ஜனங்கள்  மனம் திரும்பி அவரிடம் செல்ல வேண்டும் என அழைக்கிறார் என்பதாகும். தேவன் எசேக்கியேலை ”இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக” (ஜாமக்காரன்) வைத்தார் (எசேக்.3:17; 33:1-7). தேவனால் நியமிக்கப்பட்ட ஒரு காவலாளியின் முக்கியமான வேலை என்னவெனில், தேவனுடைய வார்த்தைகளைச் சொல்லி, ஜனங்கள் தங்கள் பொல்லாத வழிகளை விட்டு விலகி தேவனிடம் மனம் திரும்ப வேண்டும் என்பதாகும். மேலும், ஒரு காவலாளி என்பவன் தூரத்தில் எதிரிகளோ அல்லது ஆபத்துகளோ வருவதைக் கண்டால் உடனடியாக மக்களிடம் அது பற்றிச் சொல்லி எச்சரிக்கை செய்வான். எசேக்கியேல் மூலமாக, பாபிலோனில் இருந்து வரும் அழிவு பற்றிச் சொல்லி மனம் திரும்ப வேண்டும் என தேவன் தம் ஜனங்களை எச்சரித்தார். ஆனால், அவர்களோ கள்ளத் தீர்க்கதரிசிகளின் தேன் தடவிய வார்த்தைகளைக் கேட்டு நம்புவதில் தீவிரமாக இருந்து, எசேக்கியேலின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்கவில்லை. அனேகர் ஆசீர்வாதமான வார்த்தைகளை மட்டுமே கேட்க விரும்புகின்றனர், அவர்களைக் கண்டித்துணர்த்தி தேவனிடம் மனம் திரும்ப அழைக்கிற வார்த்தைகளைக் கேட்க விரும்புவதில்லை. நாம் அப்படி இருக்கலாகாது; நாம் தேவனுக்கு செவிகொடுத்து அவருக்குக் கீழ்ப்படிய எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

நாம் மற்றவர்களுக்காக பரிந்து ஜெபிக்கும்போது, தேவன் அவைகளைக் கவனித்துக் கேட்கிறார். அவர் நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்கிற தேவன். லோத்துவுக்காக ஆபிரகாம் செய்த ஜெபம் துவங்கி (ஆதி.18), வேதாகமத்தில் பரிந்துரை ஜெபங்களுக்கு அனேக உதாரணங்களை நாம் காண முடியும். யாத்திராகமம் 32 மற்றும் சங்கீதம் 106இல், இஸ்ரவேலர்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்த போது, மோசே அவர்களுக்காக பரிந்து பேசி செய்த ஜெபத்தைப் பற்றி வாசிக்கிறோம். தேவன் முற்பிதாக்களுக்குச் செய்த வாக்குத்தத்தத்தை நினைவுகூர்ந்து, ஜனங்களுக்கு தேவன் இரங்க வேண்டும் என மன்றாடி ஜெபித்தான்.  தேவனுக்கு “முன்பாகத் திறப்பின் வாயிலே” நின்று, தன் ஜனங்களை அழிவில் இருந்து மோசே காப்பாற்றினான் (சங்.106:23). மற்றவர்களுக்காக பரிந்து பேசி ஜெபிக்க ஒருவரும் இல்லை எனும்போது, தேவன் திகைத்து ஆச்சரியப்படுகிறார் (ஏசாயா 59:16; 63:5) நம் மகா பிரதான ஆசாரியராகிய இயேசு நமக்காக எப்போதும் பரிந்து பேசு ஜெபம் செய்கிறார் என எபிரேயர் 7:26இல் நாம் வாசிக்கிறோம். கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகிய நாம், நம் தேசத்துக்காகவும், மக்களுக்காகவும் அவர்கள் அழிவில் இருந்து தப்பும்படி ஜெபிக்க வேண்டும்.

பயன்பாடு:   தன் ஜனங்களுக்காக பரிந்து பேசி திறப்பிலே நின்று ஜெபிக்க எவரேனும் இருக்கிறாரா என்று தேவன் பார்க்கும்போது,  ”இதோ, நான் இருக்கிறேன்” என்று நான் சொல்வேன். என் ஜனங்களிடையே இருக்கும் அநீதி மற்றும் அவபக்தியான காரியங்களை நான் கண்டும் காணாதது போல இருக்கக் கூடாது.  ஜனங்கள் இரட்சிப்பைப் பெற்று, தேவனுடைய இளைப்பாறுதலைக் கண்டடைய வேண்டும் என நான் ஜெபிக்க வேண்டும். தேவனுடைய வார்த்தையை அறிவிப்பதில் நான் அவருக்கு உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, என் ஜெபங்களைக் கேட்டு பதில் தருகிறதற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, நான் என் ஜனங்களுக்காக திறப்பிலே நின்று ஜெபிக்க விரும்புகிறேன்.  கர்த்தாவே, ”கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும்” என் மீது ஊற்றும் (சகரியா 12:10), ”எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் செய்ய” எனக்கு உதவியருளும் (எபே.6:18). ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 316

No comments: