Monday, November 29, 2021

தேவனுக்காக வாழ ஒரு தீர்மானம்

வாசிக்க: தானியேல் 1,2; சங்கீதம் 147; 1 பேதுரு 3

வேத வசனம்:  தானியேல் 1:  தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.

கவனித்தல்: ”ஊரோடு ஒத்து வாழ்” என்று ஒரு பழமொழி சொல்கிறது. ஆங்கிலத்தில், “ரோமாபுரியில் இருக்கும்போது ரோமனை போல வாழு” என்று இதே பழமொழி வேறு வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. எவராகிலும் ஒருவர் வித்தியாசமாக வாழ முயற்சித்தால், மற்றவர்கள் அவரை குறை கூறி விமர்சித்து அல்லது எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையை ஏற்றுக் கொண்டு பின்பற்றுமாறு அறிவுரை கூறுவார்கள். ஒருவர் தன் நம்பிக்கைகளில் உறுதியாக இருந்து மற்றவர்களில் இருந்து வேறுபட்டு செயல்பட்டால், அவரை வாழத்தெரியாத பைத்தியம் என்று மக்கள் சொல்வர். பாபிலோன் ராஜாவின் உணவினால் தன்னைத் தீட்டுப்படுத்தாதபடிக்கு தானியேல் தீர்மானித்த போது, அவனைச் சுற்றி இருந்தவர்கள் தானியேலைப் பற்றி இவ்வாறு சொல்லி இருக்கக் கூடும்.  ராஜாவுக்கு வேலை செய்யும்படி மூன்று வருட பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தானியேலும் அவனுடைய நண்பர்களும் இருந்தனர். இந்த இளம் வாலிபர்கள் யூத அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும், அவர்கள் நாடுகடத்தப்பட்டவர்களாகவும் எவ்வித அதிகாரமும் இல்லாதவர்களாகவும் இருந்தனர். ஆயினும், பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் உணவினாலே, “தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி” தானியேல் தன் இருதயத்திலே தீர்மானம் எடுத்தான். இந்த தைரியமான முடிவு ஒரே ஒரு நாளுக்கானது அல்ல என்பதை நாம் பார்க்க வேண்டும். ஆகவே, ”பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனசின்” பயம் புரிந்து கொள்ளத்தக்கது ஆகும்.  ஆனால், ”தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்” (வ.9). நாம் தேவனுக்காக தீர்மானங்களை எடுத்து, பயம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகளை எதிர்கொள்ளும்போது, தேவன் நம் தீர்மானங்களை வெற்றிகரமாக செய்து முடிக்க நமக்கு உதவுகிறார்.

உலகத்தினால் தங்களைக் கறைப்படுத்தாதபடிக்கு/தீட்டுப்படுத்தாதபடிக்கு தீர்மானமாக இருந்த பல தேவ மனிதர்களைப் பற்றி வேதாகமத்தில் நாம் வாசிக்கிறோம். அவர்கள் தங்கள் தேவபக்தியுள்ள வாழ்க்கையில் சமரசம் செய்து கொள்ள மறுத்து, தங்கள் வாழ்வின் சோதனைகள் எல்லாவற்றையும் ஜெயிப்பதற்கான வல்லமையையும் தேவ தயவையும் பெற்றுக் கொண்டார்கள். உதாரணமாக, ”நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி” என்று யோசேப்பு சொன்னார் (ஆதி.39:9). எபிரேயர் 11ஆம் அதிகாரத்தில், ஒரு விசுவாச வீரர்களின் பட்டியலை நாம் காண்கிறோம். ”தேவனுக்காக தன்னை முற்றிலும் அர்ப்பணித்த ஒரு மனிதனைக் கொண்டு தேவன் என்ன செய்வார் என்பது இன்னும் இந்த உலகம் பார்க்கவில்லை” என்று டி.எல்.மூடியிடம் ஒரு நண்பர் சொன்னபோது, தேவனுக்காக அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழும் மனிதனாக நான் இருப்பேன் என மூடி தீர்மானம் செய்து கொண்டார். டி.எல். மூடி மூலமாக  தேவன் என்னவெல்லாம் செய்தார் என்பதை வரலாறு நமக்குக் கூறுகிறது. நம் வாழ்வில், நம் கிறிஸ்தவ நெறிகளை சமரசம் செய்யப்பண்ணுகிற  பலவித சோதனைகள் மற்றும் சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். அப்படிப்பட்ட சமயங்களில், வேத பண்டிதரும் போதகருமான ஜான் மெக்ஆர்தர் சொல்வது போல, “சமரசம் செய்து கொள்ளாமல், தேவன் அவர் விரும்புகிறபடி நீங்கள் வாழ உங்களை அவருடைய கட்டுப்பாட்டில் விட்டுக் கொடுத்து விடுங்கள். அது இந்த உலகத்தில் வாழ்கிற எவருடைய வாழ்க்கையைக் காட்டிலும் பத்து மடங்கு சிறப்பான வாழ்வாக இருக்கும்.” தானியேலையும் அவனுடைய நண்பர்களையும் தேவன் கைவிட்டுவிடவில்லை. அவர்கள் மற்ற எல்லா வாலிபர்களைக் காட்டிலும் முகத்தில்  அதிக களையுள்ளவர்களாகவும் சரீர புஷ்டியுள்ளவர்களாகவும் இருந்தார்கள் (தானி.1:15). நாம் இந்த உலகத்திற்கு ஒத்த வேஷந்தரிக்கக் கூடாது (ரோமர் 12:2). நாம் தேவனையும், அவருடைய வார்த்தையையும் கனப்படுத்துவதற்கு ஒரு தீர்மானம் எடுக்கும்போது, அதைச் செய்வதற்கான பலத்தை அவர் நமக்குத் தருகிறார். ”மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்” என்று இயேசு சொல்கிறார் (லூக்கா 18:27).

பயன்பாடு:  நான் தேவனுக்காக, எதிர்ப்புகள் இருக்கும் இடத்திலும் தேவபக்தியுள்ள ஒருவாழ்க்கையை வாழ முடியும்.   உலகத்தில் இருப்பவனிலும் எனக்குள் இருப்பவர் மிகவும் பெரியவர் (1யோவான் 4:4). நான் கிறிஸ்துவிலும், அவருடைய வார்த்தைகள் எனக்குள்ளும் இருக்கும்போது, நான் கனிகொடுக்கும்படி அவர் என்னைப் பலப்படுத்துகிறார் (யோவான் 15:7-8). உலகத்திலிருந்து வரும் சோதனைகளை ஜெயிக்க பரிசுத்த ஆவியானவர் எனக்கு வல்லமையைத் தருகிறார் (கலா.5:16).  ”நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா.2:20).

 ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உமக்காக வாழ்வதற்கு நீர் தருகிற கிருபை மற்றும் வல்லமைக்காக உமக்கு நன்றி. இயேசுவே, எங்களுக்காக நீர் உலகத்தை ஜெயித்தடஹ்ற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, கிறிஸ்துவின் சாட்சியாக எல்லா இடங்களிலும் எல்லா நாட்களிலும் வாழ்வதற்கு உம் வல்லமையால் என்னை நிரப்பியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 330

No comments: