Friday, November 19, 2021

இயேசு ஒருபோதும் மாறாதவர்

வாசிக்க: எசேக்கியேல் 33,34; சங்கீதம் 139; எபிரேயர் 13

வேத வசனம்: எபிரேயர் 13: 8. இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.

கவனித்தல்: மாற்றங்கள் நிறைந்த இந்த உலகத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள மக்கள் புதிய வாழ்க்கைமுறை, தொழில்நுட்பம், மற்றும் பிரபலமாக இருக்கிற நடைமுறைகளுக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். நேற்றுவரை மிகவும் பிரபலமான இருந்து கொண்டாடப்பட்டவை இன்று காலாவதியான, வழக்கொழிந்த, பயனற்றவையாக கருதப்படுகின்றன. ஆயினும், குறிப்பிட்ட சில காரியங்கள் ஒரு போதும் மாறுவதில்லை. அவை மாறுமெனில், அது இந்த முழு உலகத்தையும் பாதிக்கும். எபிரேயர் 13:8இல், இயேசுவைப் பற்றிய காலத்தால் அழியாத உண்மை ஒன்றை நாம் வாசிக்கிறோம். மனிதர்கள், காலங்க, தொழில்நுட்பங்கள், சூழ்நிலைகள், கலாச்சாரங்கள், மற்றும் நாகரீகங்கள் மாறினாலும், இயேசு ஒருபோதும் மாறுவதில்லை. இயேசுவைப் பற்றிய நற்செய்தியானது 2000 ஆண்டுகளுக்கு முன்பு வல்லமையாக இருந்தது போலவே இன்றும் வல்லமை நிறைந்ததாக  இருக்கிறது. "வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை” என்று இயேசு சொன்னார் (மத்.24:35). இயேசுவின் மாறாத தன்மை என்பது வேதாகமத்தின் மிகப்பெரும் உண்மை மற்றும் வாக்குத்தத்தங்களில் ஒன்று ஆகும்.

இயேசுவின் மேன்மை, மகத்துவம் பற்றி எழுதிய பின், எபிரேய நூலாசிரியர், “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்று எழுதுகிறார். இந்த வசனம் எழுதப்பட்ட சூழ்நிலையைக் கவனித்துப் பார்க்கும்போது, விசுவாச முன்னோடிகளான விசுவாச வீர்கள் அனைவரும் மரித்துவிட்டனர்; தேவனுடைய வார்த்தையை அறிவித்தவர்களும் இப்போது இல்லை. ஆனால் இயேசு இப்போதும் மாறாமல், உயிரோடே இருக்கிறார் என்று  நாம் வாசிக்கிறோம். அதன் பின்னர், “பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள்” என்று ஆசிரியர் வாசகர்களை எச்சரிக்கிறார் (வ.9). இயேசுவைப் பற்றிய ஒரு புதிய வெளிப்பாடு தங்களுக்குக் கிடைத்ததாக,  இக்கால உலகிற்குச் சொல்வதற்கு ஒரு புதிய செய்தி கிடைத்ததாக  பலர் கூறிக்கொள்ளலாம். ஆனால், இயேசுவின் நற்செய்தியானது ஒரு போதும் மாறுவதில்லை. நியாயப்பிரமாணப்போதகர்கள் யூதக் கிறிஸ்தவர்களை தங்களுடைய தவறான போதனைகள் மற்றும் உபதேசங்களினால் வழிவிலகப் பண்ண முயன்றார்கள்.பவுல் வேறொரு சுவிசேசத்தை பிரசங்கித்த கள்ளப் போதகர்கள் பற்றி கலாத்தியரை பவுல் எச்சரித்தார் (கலா 1:6-10). இயேசுவின், மற்றும் சுவிசேஷத்தின் மாறாத தன்மையானது  அற்புதங்களைச் செய்து ஜனங்களிடையே விடுதலையை உண்டாக்கி இன்றும் தொடர்ந்து செயல்படுகிறார் என்ற வாக்குத்தத்தமாக, இயேசுவைப் பற்றிய இறையியல் உண்மையாக இருக்கிறது. தேவன் ஒருபோதும் மாறுவதில்லை (சங்.102:26; மல்கியா 3:6. “புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்” (ஏசாயா 40:8). :  ”இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமான ” இயேசு இன்றும் மாறாதவராக நம் மத்தியில் இருக்கிறார் (வெளி.1:4). இயேசுவின் மீது நம் கண்களை வைத்து, நம் விசுவாசத்தில் உறுதியாக இருப்போம்.

பயன்பாடு :  இயேசு எப்போதும் என்னுடனே கூட இருக்கிறார். என் இரட்சிப்புக்குத் தேவையான அனைத்தையும் இயேசு ஏற்கனவே செய்து முடித்து விட்டார். இப்போதோ அவர் பிதாவின் வலது பக்கத்தில் அமர்ந்து கொண்டு எனக்காக பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். இயேசு விரைவில் மீண்டும் வருவார். நான் அவருக்காக வாழவும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும் தேவையான சக்தியை அவர் எனக்குத் தருகிறார். நான் அனைவருக்கும் சுவிசேஷத்தை பிரசங்கிப்பதற்கு எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

ஜெபம்: இயேசுவே, உம் மாறாத அன்பு மற்றும் நித்திய ஜீவனைத்தரும் வார்த்தைகளுக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உம் அன்பில் உறுதியாக நிலைத்து நிற்கவும், உம் அழைப்புக்கேற்ற ஒரு வாழ்க்கையை வாழவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 322

No comments: