Monday, November 8, 2021

எச்சரிக்கை: வழி விலகிச் சென்று விடாதே

வாசிக்க: எசேக்கியேல் 11,12; சங்கீதம் 128;  எபிரேயர் 2

வேத வசனம்  எபிரேயர் 2: 1. ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்.

கவனித்தல்:  ஒரு படகு (கரையில்) மிதக்கும்போது , உறுதியான ஒரு பொருளுடன் கட்டப்படவில்லை எனில், அல்லது நங்கூரம் இல்லை எனில், அந்தப் படகும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி தூரமாக செல்லும் ஆபத்து ஏற்படும். அந்தப் படகு மற்றும் அதில் இருப்பவர்கள் அதினால் பாதிக்கப்படுவார்கள். இங்கே யூத கிறிஸ்தவர்க: தாங்கள் கேட்டவைகளுக்கு முரணான போதனைகள் மற்றும் உபதேசங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்ல எபிரேய நிருப ஆக்கியோன் இப்படிப் பட்ட ஒரு காட்சியைப் பயன்படுத்துகிறார்.  எபிரேயர் 1ஆம் அதிகாரத்தில்,  இயேசுவே தேவனுடைய இறுதி வார்த்த்தை என்று சொல்லி, இயேசுவின் மகத்துவம், அவருடைய தெய்வீகம் மற்றும் அவர் தேவதூதர்களுக்கும் மேலானவர் என்பதை ஆசிரியர் விளக்குகிறார். முத அதிகாரத்தில் இயேசுவைப் பற்றிச் சொல்லப்பட்டவைகளுக்கு நேராக நம் கவனத்தை திருப்பி, ” நாம் கேட்டவைகளை விட்டுவிலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும்” என ஆசிரியர் அழைப்பு விடுக்கிறார். ஒருவர் ஜாக்கிரதையாக இல்லை எனில், அவர் பாதை மாறி செல்ல நேரிடலாம்.

ஆதிச் சபையில், நியாயப் பிரமாணப் போதகர்கள் அல்லது சட்ட நெறிவாதத்தை ஆதரித்தவர்கள், நியாயப்பிரமாணத்திற்கு ஆதரவக இருந்தவர்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தை விட்டு ஜனங்கள் வழிவிலகும்படி செய்து கொண்டிருந்தார்கள். நியாயப்பிரமாணப் போதகர்களின் சூழ்ச்சியில் கிருபையினால் இரட்சிப்பைப் பெற்ற கிறிஸ்தவர்கள் பலர் சிக்கிக் கொண்டனர். அவர்கள் ஜனங்களை கிறிஸ்துவின் கிருபையில் இருந்து விலகப் பண்ணி வேறொரு, வேதத்திற்கு எதிரான சுவிசேஷத்திற்கு நேராக வழிநடத்தினர். கலாத்தியருக்கு பவுல் எழுதின நிருபத்தில், “நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்று பவுல் கூறுகிறார் ( கலா.1:6-8).  இயேசுவின் தெய்வீகத்தை மறுக்கும் வேதாகமத்தின் அதிகாரத்தை புறக்கணிக்கும் அல்லது திரித்துக் கூறும் தவறான போதனையை செய்பவர்களுக்கு ஜனங்கள் செவிகொடுக்க ஆரம்பித்தால் அவர்கள் வழிவிலகிச் செல்வார்கள். கடந்த காலங்களில், ஒரு தேவ தூதனிடம் இருந்து புதிய வெளிப்பாட்டைப் பெற்றதாகக் கூறிக் கொண்டு, புதிய இயக்கங்களை துவங்கி இருக்கின்றனர். மேலும், பில்லி கிரகாம் கூறுவது போல, “தேவன் இல்லாத ஒரு வாழ்க்கையானது நங்கூரம் இல்லாத ஒரு படகுக்கு ஒப்பானது ஆகும்.” இயேசுவே நம் ஆத்தும நங்கூரமாகவும் நம் ஆவிக்குரிய வாழ்வின் அஸ்திபாரமாகவும் இருக்கிறார். நாம் அவருடைய வார்த்தைகளைக் கேட்பதற்கும் அனுதினமும் அதை வாசிப்பதற்கும் தீவிரமாக இருக்க வேண்டும்.

பயன்பாடு:  வேதம் சொல்லாத வேறொரு இயேசுவை முன்னிலைப்படுத்தும் தவறான போதனைகளுக்கு எதிராக நான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நான் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதற்குக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும். அவர் மட்டுமே என்னை முற்றும் முடிய இரட்சிக்க வல்லவராக இருக்கிறார்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, இயேசு கிறிஸ்துவின் மூலமாக நீர் தருகிற இரட்சிப்புக்காக உமக்கு நன்றீ. பரிசுத்த ஆவியானவரே, தேவ வார்த்தையை பகுத்தறிந்து அதற்குக் கீழ்ப்படியவும் தவறான போதனைகளுக்கு உறுதியாக எதிர்த்து நிற்கவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 311

No comments: