Wednesday, November 24, 2021

உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்

வாசிக்க: எசேக்கியேல் 41,42; சங்கீதம் 143; யாக்கோபு 4

வேத வசனம்: சங்கீதம் 143: 10. உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.

கவனித்தல்:  மனம் திரும்புதலின் சங்கீதங்கள் (Penitential Psalms) அல்லது பாவ அறிக்கையின் சங்கீதங்களில் சங்கீதம் 143 ஏழாவதும் கடைசியுமானது ஆகும் (மற்றவை, சங்கீதம் 6;32;38;51;102;130). தாவீது தன் மகனாகிய அப்சலோம் தனக்கு விரோதமாகச் சதி செய்த போது அவனுக்குத் தப்பியோடிய போது இந்த சங்கீதத்தை எழுதினார் என சொல்லப்படுகிறது. இந்த ஜெப சங்கீதத்தில், தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்வதற்காக தாவீது ஜெபிக்காமல், தேவனுக்குப் பிரியமானதைச் செய்ய போதித்தருளும்படி கர்த்தரிடம் அவர் கேட்கிறார். சங்கீதத்தில் குறிப்பிட்டிருக்கிறபடி, சங்கீதக்காரன் துயரத்திலும், தான் சந்தித்த பிரச்சனைகளில் இருந்து வெளிவர மிகவும் தீவிரமாக இருந்திருக்க வேண்டும்.  தாவீது மிகவும் சோர்ந்து போய், தான் முன்பு நன்றாக இருந்த நாட்கள் மறுபடியும் திரும்ப வரவேண்டும் என ஏங்குகிறார். அப்படிப்பட்ட ஒரு நிலையிலும், தன் வாழ்வில் தேவனுடைய சித்தத்தைச் செய்வதின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தார். நாம் மரண இருளின் பள்ளத்தாக்கினூடாக நடந்து செல்லும் போதும் கூட, தேவனுடைய சித்தத்தைச் செய்வதே நாம் செய்யக் கூடிய சிறந்த காரியமாக இருக்கிறது. நாம் தேவனுடைய சித்தத்தைச் செய்யும்போது, அவருடைய பலத்தையும் ஆறுதலையும் பெறுகிறோம். தாவீது இந்த உண்மையை நன்கறிந்திருந்தார். தாவீது தேவனுடனான தன் உறவைக் குறித்த நிச்சயமுள்ளவராகவும், தேவ சித்தத்தைச் செய்ய அவருக்கிருந்த இயலாமைகளையும் அறிந்திருந்தார். ஆகவே, “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும்” என்று அவர் ஜெபித்தார்.

தேவனுடைய சித்தத்தைச்  செய்கிறதற்கு தாவீது தேவனை முற்றிலும் சார்ந்திருந்ததை அவர் ஜெபம் காண்பிக்கிறது. நாம் ஒரு குறைவுமின்றி தேவனுக்குப் பிரியமானவைகளைச் செய்ய தேவன் மட்டுமே நமக்கு உதவ முடியும். எனவே, தாவீது தேவ ஆவியின் வழிநடத்துலை நாடி ஜெபிக்கிறார். தேவன் அவரைச் செம்மையான வழிகளில் நடத்துவார் என அவர் நம்பினார். பரிசுத்த ஆவியானவர் நடத்திச் செல்கிற பாதையானது ஆபத்துகள் இல்லாத பாதுகாப்பானதாக இருக்கும். தேவனுடைய சித்தம் இன்னதென்றும், எது சரி அல்லது தவறு என்றும் நம்மில் பலர் அறிந்திருக்கிறோம். ஆயினும், அவைகளை நம் வாழ்க்கையில் கைக்கொள்ளாமல் சாக்குப்போக்குகளையும்,  நம் பலவீனங்களைச் சொல்லி கொண்டு இருக்கிறோம். தாவீதைப் போல, நாமும் தேவன் தமக்குப் பிரியமானதை நமக்கு போதித்து, அதைச் செய்ய பலப்படுத்தியருளும்படி நாம் ஜெபிக்கலாம். ”சத்திய ஆவியானவர் வரும்போது” அவர் நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறார் (யோவான் 16:13). பரிசுத்த ஆவியானவர் ஒருபோதும் நம்மைத் தவறாக வழிநடத்துவதில்லை, ஏனெனில் அவர் தேவனுக்குரியவைகளை நன்கறிந்திருக்கிறார். நாம் எல்லாவற்றிலும் தேவனை நம்ப முடியும். நாம் நம் வாழ்க்கைப் பிரச்சனைகளால் சூழப்பட்டிருக்கும்போது, நம் யோசனைகளை பயன்படுத்தி அவைகளைச் சரி செய்வதற்குப் பதிலாக, நாம் தேவனுக்குப் பிரியமான சித்தம் இன்னதென்று உணர்ந்து, அதைச் செய்ய தேவன் நம்மை போதித்து வழிநடத்த நாம் அவரிடம் கேட்டு ஜெபிக்கலாம்.

பயன்பாடு: தேவன் என்னை எவ்விதமான ஆபத்துகளிலும் இருந்து காப்பாற்ற முடியும். தேவனைத் தேடி நாடுகிறவர்களுக்கு அவர் நல்லவராகவே இருக்கிறார். தேவன் அவருடைய சித்தத்தை எனக்குப் போதித்து, அதைச் செய்வதற்கு என்னைப் பலப்படுத்துகிறார். மனிதருக்குச் செவ்வையாக தோன்றுகிற வழிகள் மரணத்திற்கு வழிநடத்துகின்றன (நீதி.14:12). ஆனால் தேவன் ஜீவனுக்குள் என்னை வழிநடத்துகிறார். நான் தேவனுடைய போதனைக்குக் கீழ்ப்படிந்து, தேவ ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்றித் தொடரும்போது நான் தேவனுக்குப் பிரியமானதைச் செய்ய முடியும்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் கிருபைக்காகவும், மாறாத உம் வார்த்தைக்காகவும் நன்றி. கர்த்தாவே, உம் வழிகளை எனக்குப் போதித்து, உம் சித்தம் செய்ய என்னைப் பலப்படுத்தியருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவ சித்தம் செய்ய நான் உம்மைச் சார்ந்து இருக்கிறேன்; நான் அனுதினமும் தேவனுக்குப் பிரியமானவைகளைச் செய்யவும் தேவ வார்த்தையின்படி வாழவும் என்னை வழிநடத்தியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 326

No comments: