Sunday, November 14, 2021

இயேசு விசேஷித்த மேன்மையுள்ளவர்

வாசிக்க: எசேக்கியேல் 23,24; சங்கீதம் 134;  எபிரேயர் 8

வேத வசனம்: எபிரேயர் 8: 6. இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார்.

கவனித்தல்:   கிறிஸ்தவர்கள் உபத்திரவத்தை சந்திக்கும்போது, மற்றவரகளிடம் இருந்து குழப்புகிற, தவறாக வழிநடத்துகிற போதனைகளைக் கேட்கும்போது, விசுவாசம் தொடர்பான கேள்விகள் அவர்கள் மனதில் வரக் கூடும். சில சமயங்களில், அவர்கள் தங்களின் தற்போதைய விசுவாசத்தை விட முந்தைய மத நம்பிக்கை சிறந்ததோ என்று யோசிக்கலாம். யூதக் கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்திருக்கக் கூடும். இயேசு  கிறிஸ்துவின் மீது உள்ள விசுவாசத்தினிமித்தம் அவர்கள் உபத்திரவத்தை அனுபவித்தனர். மோசேயின் நியாயப்பிரமாணத்தை நம்புகிறோம் என்று சொல்லி இருந்தால்,  யூத மார்க்கம் குறித்து பெருமையுடன் இருந்த யூதர்களிடம் இருந்து வரும் உபத்திரவத்தில் இருந்து அவர்கள் தப்பித்திருக்கலாம்.  எபிரேய நிருபத்தின் முக்கியமான கருப்பொருள்களில் ஒன்று என்னவெனில், இயேசுவானவர் தூதர்கள், தீர்க்கதரிசிகள், மோசே ஆகியோரை விட சிறந்தவர் எனப்தாகும். அவருடைய ஆசாரியத்துவம் ஆரோனின் ஆசாரிய ஊழியத்தை விட மேன்மையானது. இயேசுவின் புதிய உடன்படிக்கையானது பழைய உடன்படிக்கையை விட சிறந்தது ஆகும்.  அவருடைய வாக்குத் தத்தங்கள் அதற்கு முந்தைய வாக்குத்தத்தங்களை விட சிறந்தவை ஆகும். எபிரேயர் 8:6 என்பது கிறிஸ்துவின் மேன்மையைச் சுருக்கமாக குறிப்பிடுகிற ஒரு வாக்கியம் ஆகும்.

இயேசு அனைவரிலும் சிறந்தவர் என்று நம்மைச் செய்யத் தூண்டுவது என்ன? இயேசுவின் மூலமாக தேவன் அருளின வெளிப்படுத்தல் மேன்மையானவை. மேலும் அவர் தேவ  குமாரனாக இருக்கிறார் என்பதால் அனைத்து தீர்க்கதரிசிகளையும் விட இயேசு மேன்மையானவராக இருக்கிறார்.  தேவ தூதர்கள் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவை ஆகும். அவர்கள் இரட்சிப்பைப் பெறுகிறவர்களுக்கு  பணிவிடை ஆவிகள் ஆக இருக்கிறார்கள். ஆனால், தேவன் தம் குமாரன் மூலமாக அகில உலகத்தையும் படைத்தார், தேவ தூதர்கள் அனைவரும் அவரை தொழுது கொள்ள வேண்டும். ஆகவே இயேசு தேவ தூதர்களைக் காட்டிலும் மேலானவராக இருக்கிறார். மோசே தேவனுடைய வீட்டில் உண்மையுள்ள ஊழியராக இருந்தார். ஆனால் இயேசுவோ தேவனுக்கு உண்மையுள்ள மகனாகவும் தேவனுடைய வீட்டைக் கட்டுகிறவராகவும் இருந்தார். எனவே, அவர் மோசேயை விடச் சிறந்தவர். அவர் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார். இயேசுவின் ஆசாரியத்துவம் காலம் மற்றும் இடம் ஆகிய வரையறைக்கு அப்பாற்பட்டவை. பாவ நிவாரண பலியிடும் நாளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. தேவனுடன் ஒப்புரவாகும்படியாகவும், நம் பாவங்களுக்கான விலையை செலுத்தும்படியாகவும்  கிறிஸ்து தம்மைத் தாமே பலியாக ஒப்புக் கொடுத்தார். புதிய உடன்படிக்கையின் கீழ் கிறிஸ்துவின் பங்கு மற்றும் பங்களிப்பானது அதை பழைய உடன்படிக்கையை விட சிறந்ததாக காட்டுகிறது. புஅடுத்த உடன்படிக்கையில் புதிய உடன்படிக்கையில் தேவன் தம் வார்த்தைகளை நம் மனதில் இருத்தி வைத்து, இருதயத்தில் எழுதுகிறார்.  பழைய உடன்படிக்கையானது கிரியைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. ஆனால் புதிய உடன்படிக்கையோ தேவ கிருபையின் அடிப்படையிலானதும், ஆகும். மேலும், தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தராக இயேசு இருக்கிறார். இது போல, இயேசுவின் மேன்மை பற்றிய பல வசனங்களை நாம் வாசிக்கக் கூடும். தேவன் நமக்கு ஒரு புதிய மற்றும் சிறப்பான உடன்படிக்கையை தந்திருக்கிறார். இயேசுவின் ஊழியமானது மற்ற எவரது ஊழியத்தை விடவும் சிறந்து ஆகும். இயேசுவின் வாக்குத்த்தங்கள் பழைய ஏற்பாட்டில் உள்ள வாக்குத்த்தங்களை சிறந்தவையாக இருக்கின்றன. நமக்குத் தேவையான எல்லாம் இயேசுவிடம் உண்டு. யூதர்களின் வேதாகமமாகிய பழைய ஏற்பாட்டில் இருந்து மேற்கோள்களைக் காட்டி, எபிரேய நிருபத்தின் ஆக்கியோன் இயேசுவே சிறந்தவர் என்பதை நிரூபிக்கிறார். ”கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” என்று வேதாகமம்  நம்மை அழைக்கிறது (சங்.34:8).

பயன்பாடு: இயேசுகிறிஸ்துவின் மேன்மை மற்றும் மகத்துவம் பற்றி நான் பல காரியங்களைக் குறித்து பேச மற்றும் எழுத முடியும். ஆனால் அது என் இருதயத்தில் இருந்தும் கிறிஸ்துவுடனான என் தனிப்பட்ட உறவில் இருந்தும் வரவேண்டும். ”இயேசுவே சிறந்தவர்” என்று நான் சொல்லும்போது அது ஒரு  வெற்று முழக்கமாக இருக்கக் கூடாது. நான் இயேசுவைப் பற்றிச் சொல்கிறவைகளுக்கு என் வாழ்க்கை சாட்சி பகருவதாக இருக்க வேண்டும்.  தேவனுடைய அன்பு மற்றும் கிருபையை ருசித்து, நான் புதிய உடன்படிக்கையின் கீழ் வாழ்கிறேன்.

ஜெபம்:   தந்தையாகிய தெய்வமே, எங்களை இரட்சிக்க உம் குமாரனாகிய இயேசுவை உலகிற்கு அனுப்பினதற்காக உமக்கு நன்றி. உம்மிடம் இருப்பதிலேயே சிறந்த ஒன்றை எனக்குத் தந்தமைக்காக உமக்கு நன்றி. ஆண்டவரே, உம் அன்பை அதிகமதிகமாக அறிந்து கொள்ளவும் தேவனுடைய வார்த்தைகளை தியானித்து பேசவும் ஜெபிக்கவும் வேண்டும். உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக.“ ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்

+91 9538328573

 Day – 317


No comments: