Saturday, November 6, 2021

இந்த வார்த்தை உண்மையுள்ளது: நற்கிரியை செய்ய ஆயத்தமாயிருங்கள்

வாசிக்க: எசேக்கியேல் 5,6; சங்கீதம் 125; தீத்து 3

வேத வசனம்தீத்து 3: 8 இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.

கவனித்தல்:  ”உங்கள் கிறிஸ்துவை நான் நேசிக்கிறேன், ஆனால் உங்கள் கிறிஸ்தவத்தை அல்ல” என்று இந்தியாவில் தேசத்தந்தை என்று அன்புடன் நினைவுகூரப்படும் காந்திஜி அவர்கள் சொன்னதாக சொல்லப்படுகிறது.  கிறிஸ்தவர்களின் கிறிஸ்தற்ற வாழ்க்கை முறையை சுட்டிக்காட்டுவதற்காக ஜனங்கள் இது போன்ற வாக்கியங்களை சொல்கின்றனர். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைப் போல இருப்பார்கள் என மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இயேசு தன்னையும் தான் முன்வைத்துப் போன மாதிரியையும் பின்பற்றும்படி நமக்கு போதித்திருக்கிறார் (மத்.16:24-25; யோவான் 13:15). இன்றைய வேதபகுதியில்,  வசனம் 4-7 வரை உள்ள வசனங்களில் இரட்சிப்பு பற்றி விளக்கியவைகளையும், நற்கிரியைகளைச் செய்வது பற்றியும் வலியுறுத்துமாறு தீத்துவிடம் பவுல் கேட்கிறார். ”இந்த வார்த்தை உண்மையுள்ளது” என்ற சொற்றொடர் பவுலின் போதக நிருபங்களில் மட்டுமே காணப்படுகிற ஒன்று ஆகும். பவுல் இதை தன் போதனைகளை எடுத்துக் காட்ட ஐந்து முறை  இதை பயன்படுத்தி இருக்கிறார் (1 தீமோ.1:15; 3:1; 4:9; 2 தீமோ. 2:11; தீத்து 3:8). இவ்வசனங்கள் கிறிஸ்துவின் மனு அவதாரத்தின் நோக்கத்தையும், தேவ பக்தியின் ஆசீர்வாதமான பலன்களையும், நம் நம்பிக்கை பற்றியும், கிறிஸ்துவுடன் பாடுபடுதலினால் வரும் மகிமை, மற்றும் நன்மை செய்ய ஒரு ஆலோசனை  போன்ற பல காரியங்களை முறையே கூறுகின்றன.

தீத்து 3:3இல், கிறிஸ்துவை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு விசுவாசிகள் இருந்த நிலையைப் பற்றி பவுல் நமக்குக் கூறுகிறார். தீத்து  4-7 வரையிலான வசனங்கள் நாம் இரட்சிப்பைப் பெறும் முறையைப் பற்றி விலக்குகின்றனர்.  நான் முன்பு நம் பாவங்களில் மரித்தவர்களாக இருந்தோம்; நம் நீதி எல்லாம் அழுக்கான கந்தை போல இருக்கின்றன. நாம் இரசிப்பைப் பெற தகுதியற்றவர்களாக இருந்தோம். ஆனால் தேவன் தம் கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு நம்மை இரட்சித்தார். தேவன் கிருபையினாலே நம்மை நீதிமானாக்கி இரட்சித்தார். நம் நற்செயல்கள் தேவனுடைய இரட்சிப்பைச் சம்பாதிக்க பலமில்லாதவை. இரட்சிப்பைப் பற்றிய ஆரோக்கியமான உபதேசத்தைப் பற்றி விளக்கின பின்பு, பவுல் கிறிஸ்தவ கடமை பற்றி பேசுகிறார். தேவனை நம்புகிற/விசுவாசிக்கிற அனைவரும் நற்கிரியைகளைச் செய்ய வேண்டும். நல்லவைகளைச் செய்வது என்பது நாம் வேண்டுமென்றால் தேர்வு செய்து செய்கிற ஒன்று அல்ல, அது நமக்கான கடமை ஆகும். இது நம் இரட்சிப்பின் காரணமாக நாம் செய்கிற ஒன்று ஆகும். தேவன் மீதான் நம் அன்பு மற்றும் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்த நாம் நற்கிரியைகளைச் செய்கிறோம். ”ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்” என்று எபேசியர் 2:10ல் பவுல் கூறுகிறார். நாம் செய்கிற நற்செயல்கள் மனிதர்கள் முன்பாக நம் பரலோக தகப்பனை மகிமைப்படுத்துகின்றன (மத்.5:16).  இருளில் வாழும் ஜனங்களின் வாழ்வை செழிப்படையச் செய்ய நாம் உலகில் உப்பாகவும் வெளிச்சமாகவும் இருக்க வேண்டும். அப்.பவுல் சொல்வது போல, “இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.” நற்செயல்களைச் செய்யாமல் இருப்பதற்கு நாம் நொண்டிச்சாக்குகளைச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.  நாம் உதடுகளினால் மட்டுமல்ல, உள்ளத்தினாலும் தேவனுக்கு சேவை செய்வோம் ( ஏசாயா 29:13; மத்.15:8-9).

பயன்பாடு:  தேவன் நான் செய்த கிரியைகளினால் அல்ல, கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு என்னை இரட்சித்தார் என்பதை நான் நினைவில் கொள்ள வேண்டும். இயேசுவை என் ஆண்டவரும் இரட்சகருமாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பு, நான் உலகப் பிரகாரமாக, தேவனற்ற தேவ பக்தியற்ற வாழ்க்கையை நான் வாழ்ந்திருக்கலாம். இப்போதோ, கிறிஸ்துவின் அன்பு தேவனுக்காக வாழ என்னை நெருக்கி ஏவுகிறது. நான் செய்யும் நற்செயல்கள் மற்றவர்கள் தேவனுடைய அன்பை ருசிக்கவும், அறிந்து கொள்ளவும்  ஒரு வாய்ப்பாக இருந்து, கிறிஸ்துவில் இரட்சிப்பைக் கண்டு கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கலாம். கிறிஸ்துவானவர்  என்னைச் செய்யத் தூண்டுகிற நற்செயல்கள் எதுவாக இருந்தாலும் அதைச் செய்வதற்கு நான் ஆயத்தமாக இருக்க வேண்டும்.   

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என்னை இரட்சித்த உம் அன்பிற்காக நன்றி. கர்த்தாவே, உம் நற்கிரியைகளைச் செய்யும்படி என்னை நீர் தேர்ந்தெடுத்ததற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, வார்த்தையினாலும் கிரியையினாலும் தேவ மகிமைக்காக வாழ, அனைவரிடமும் அன்பைக் காண்பிக்க என்னைப் பலப்படுத்தியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 308

No comments: