Tuesday, November 9, 2021

நாம் தேவனுடைய வீடு

வாசிக்க: எசேக்கியேல் 13,14; சங்கீதம் 129;  எபிரேயர் 3

வேத வசனம்: எபிரேயர் 3: 5. சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்.
6. கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம்.

கவனித்தல்:  யூத மார்க்கத்தில் மோசே மிகவும் அதிகமாக மதிக்கப்படுகிற ஒரு தலைவர். ”கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை” என்று வேதம் சொல்கிறது ( உபா.34:12). மோசே சந்தேகத்திற்கிடமின்று தேவனுடைய உண்மையுள்ள ஊழியக்காரன் ஆக இருந்தார்; ”என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்” என்று தேவன் தாமே மோசேயைக் குறித்து சாட்சி கொடுத்தார் (எண்.12:7).  மோசே மூலமாக தேவன் கொடுத்த நியாயப்பிரமாணத்திற்கு யூதர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். எபிரேயர் 3ஆம் அதிகாரத்தில் இயேசுவை மோசேயுடன் நூலாசிரியர் ஒப்பிட்டு, ” மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திரராயிருக்கிறார்” என்று கூறுகிறார் (வ.3). 5 மற்றும் 6ஆம் வசனங்களில், அவர் குறிப்பாக இரண்டு காரியங்களைச் சுட்டிக் காண்பிக்கிறார்: மோசே ஒரு பணிவிடைக் காரனாக இருந்தான், கிறிஸ்துவோ குமாரனாக இருக்கிறார் (இங்கு மோசேக்கு கடந்த காலத்திலும், இயேசுவுக்கு நிகழ் காலத்திலும் சொல்லப்பட்டிருக்கிறதைக் கவனியுங்கள்); மோசே தேவனுடைய வீட்டில் இருந்தான். கிறிஸ்துவோ தேவனுடைய வீட்டிற்கு மேற்பட்டவராக இருக்கிறார். உண்மையுள்ள ஊழியர் நிச்சயம் பரிசு பெறுவார். ஆனால் அந்த ஊழியர் உட்பட அனைத்தும் குமாரனுக்கு உரியது ஆகும். மோசே தேவனுடைய வீட்டில் ஒரு அங்கமாக இருந்தான். கிறிஸ்துவோ வீட்டை உண்டு பண்ணுகிறவராக, அனைத்தையும் உருவாக்குகிறவராக இருக்கிறார் (வ.3).  இயேசு மெய்யாகவே அதிக மகிமைக்குப் பாத்திரராக இருக்கிறார். ”அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார்” என்று நாமும் சேர்ந்து சொல்லலாம்” (வெளி.5:12).

நாம் தேவனுடைய வீட்டின், குடும்பத்தின் ஒரு அங்கமாக இருக்கிறோம் என்று வேதாகமம் கூறுகிறது (எபே.2:19; 1 பேதுரு 2:25). தேவனுடைய இரட்சிப்பைப் பெறுகிற அனைவரும் தேவனுடைய பிள்ளைகளாகவும் தேவனுடைய வீட்டின் உறுப்பினருமாகிறோம். மோசே மற்றும் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுவதைக் காட்டிலும் இயேசுவைப் பின்பற்றுவது சிறந்தது என்று எபிரேய நிருப ஆக்கியோன் சுட்டிக்காடுகிறார்.  யூதக் கிறிஸ்தவர்கள் கடுமையான உபத்திரவங்கள் மற்றும் பயமுறுத்தல்களை யூதர்களிடம் இருந்து அனுபவித்து வந்தனர். மோசேயையும் நியாயப்பிரமாணத்தையும் மறுபடியும் கைக்கொள்ள திரும்பி வந்தால் உபத்திரவம் எதுவும் இருக்காது என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டிருக்கும்.  எனவே, “நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில்” என்று நூலாசிரியர் எழுதுகிறார். சிலர் தங்கள் கிறிஸ்தவ வாழ்வின் ஆரம்பத்தில் சிறப்பான துவக்கத்தை உடையவர்களாக இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் விசுவாசத்தை உறுதியாக பற்றிக் கொள்வதில்லை. அவர்கள் பிரச்சனைகள், அழுத்தங்கள், மற்றும் உபத்திரவங்களைச் சந்திக்கும்போது, தங்கள் விசுவாசத்தை கைவிட்டு விடுகிறார்கள். “முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்” என்று இயேசு நமக்குப் போதித்திருக்கிறார் (மத்.10:22). நாம் எவ்வளவு சிறப்பான துவக்கத்தை உடையவர்களாக இருந்தோம் என்பதல்ல, நம் ஓட்டத்தை ஓடி முடிக்கிறோமா என்பதே தேவனுக்கு முக்கியமானது ஆகும். ”நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்” (வ.14). தேவன் நமக்கென வைத்திருக்கும் பரிசை எதற்காகவும் இழந்து விடாதபடிக்கு நாம் கவனமாக இருக்க வேண்டும். ”நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்” (எபி.10:39).

பயன்பாடு:  தேவனுடைய வீட்டில் பல உண்மையுள்ள ஊழியர்கள் இருக்கலாம். ஆனால் தேவனுடைய உண்மையுள்ள குமாரனுக்கு சமமானவர் எவரும் இல்லை. நான் முடிவுபரியந்தம் அல்லது அவர் வரும் வரைக்கும் கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும்

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, உம்மைச் சேவிப்பதற்கு நீர் தந்திருக்கிற பரிசுத்த பரலோக அழைப்பிற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, என் கண்களையும் சிந்தனைகளையும் இயேசுவின் மீது வைக்க எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, உண்மையுடனும் வெற்றிகரமாகவும் என் விசுவாச ஓட்டத்தை ஓடி முடிக்க என்னைப் பலப்படுத்தியருளும். ஆமென்.  

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 312

No comments: