Friday, September 3, 2021

வழக்காடுவோம் வாருங்கள்

வாசிக்க: ஏசாயா 1,2; சங்கீதம் 63; 1 கொரிந்தியர் 8

வேத வசனம் ஏசாயா 1: 18. வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.
19. நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள்.

கவனித்தல்: நீதிமன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்படும்போது, மனுதாரரும் பிரதிவாதியும் தங்கள் தரப்பு நியாயத்தை ஒரு வழக்கறிஞர் மூலமாக முன்வைப்பார்கள். அதன் பின், நீதிபதி தன் முன் வைக்கப்பட்ட சான்றுகளின் அடிப்படையில் தீர்ப்பை வழங்குவார். இந்த நடைமுறையை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஏசாயா 1ம் அதிகாரத்தில், சர்வ லோக நியாயாதிபதியாகிய ஆண்டவர் தன் ஜனங்களை வழக்காடுவோம் வாருங்கள் என்று அழைக்கிறார். இதற்கு முன்பாக, இஸ்ரவேலருடைய கீழ்ப்படியாமையைப் குறித்து அவர்களைக் கண்டித்து, பாவங்களை கழுவி சுத்திகரித்துக் கொள்ளும்படி அவர்களை அழைக்கிறார். மனம் திரும்புதல் மற்றும் தேவனுக்குக் கீழ்ப்படிதலுக்கான தன் அழைப்பின் ஒரு பகுதியாக, இப்பொழுது வழக்காடவும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளவும் அழைக்கிறார்.  பாவங்களில் இருந்து தங்களை சுத்திகரித்துக் கொண்டு, தங்கள் வழிகளை திருத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு தேவனுடைய ஜனங்களுக்குக் கொடுக்கப்படுகிறது. பாவமானது மனிதனை தேவனிடம் இருந்து பிரித்து, மனிதனுக்கும் தேவனுக்குமிடையேயான அன்பின் உறவை சீர்குலைத்துப் போடுகிறது. ஆனால் பாவத்தில் விழுந்து போன மனிதன் தேவனுடனான தன் உறவை சரிசெய்து, அதை மீட்டெடுக்க அன்பின் தேவன் தன் மன்னிப்பையும் கிருபையையும் அவனுக்கு அருளுகிறார்.

தேவனுடைய பாதுகாப்பின் கீழ் வாழ்தலின் ஆசீர்வாதமான தன்மையையும், தேவனுடன் வாழாமல் இருக்கும்போது உண்டாகும் வெறுமை, தவிப்பு மற்றும் தனிமையையைக் குறித்து தேவ ஜனங்கள் சிந்திக்க வேண்டும். நாம் தேவனுடன் வழக்காடி, தெளித்த சிந்தனையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கலாம். தேவன் குருட்டு விசுவாசத்திற்கு நம்மை அழைக்க வில்லை. மாறாக, முழு மனதுடன் கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கு நம்மைத் தூண்டும் அறிவார்ந்த அல்லது பகுத்தறிந்து முடிவெடுக்கும் விசுவாசத்திற்கு  அவர் நம்மை அழைக்கிறார். நம் பாவங்கள் ”சிவேரென்றிருந்தாலும்” மற்றும் “இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும்,” தேவன் நம் பாவக்கறைகளைக் கழுவி சுத்திகரித்து கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்களாக நம்மை மாற்ற முடியும். நம் மீது தேவன் கொண்டிருக்கும் அன்பு நிபந்தனையற்றது ஆகும். ஆயினும், அவர் அருளும் மன்னிப்பைப் பெற நிபந்தனை உண்டு. நாம் நம் பாவங்களை அறிக்கையிட்டு, மனம் திரும்பி, கர்த்தருக்குக் கீழ்ப்படியவேண்டும் (வ.19). தேவனால் மன்னிக்கமுடியாத பாவம் என்று எதுவும் இல்லை.  ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு இரங்குகிறது போல கர்த்தர் நமக்கு இரங்குகிறார் (சங்.103:13). நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.  நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோவான் 1:8,9).   

பயன்பாடு: நான் தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்ட பாவி என்பதை நான் ஒருபோதும் மறந்து விடக் கூடாது. திரளான பலிகள் மற்றும் காணிக்கைகள் மூலமாக நான் தேவனைப் பிரியப்படுத்த முடியாது. ”தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்” (சங்.53:17). நான் என் பாவங்களை அறிக்கையிட்டு, தேவன் என் இருதயத்தை சுத்திகரிக்க அனுமதிக்கும் நேரத்தில், தேவன் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்பதை நான் கற்றுக் கொண்டு, அவருக்கு நான் கீழ்ப்படிய வேண்டும். (ஏசாயா 1:17).  தேவனுடன் வழக்காட எனக்கு ஒரு மத்தியஸ்தர் தேவை இல்லை. நீதிபரரான இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனுடன் எனக்காக பரிந்து பேசுகிறார். நாம் தேவனுடைய உதவியைப் பெற தைரியமாக கிருபாசனத்திற்கு அருகில் செல்லலாம் (எபி.4:16).

ஜெபம்: கிருபையும் இரக்கமுள்ள தேவனே, என்னை ஏற்றுக் கொண்டு, எல்லா பாவங்களில் இருந்தும் என்னை சுத்திகரிக்கிற உம் அன்புக்காக உமக்கு நன்றி. இயேசுவே, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவும், அதன்படி வாழவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 245

No comments: