Sunday, September 12, 2021

வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்வின் இரகசியங்கள்

வாசிக்க: ஏசாயா 19,20; சங்கீதம் 72; 1 கொரிந்தியர் 16

வேத வசனம்1 கொரிந்தியர் 16: 13. விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள்.
14. உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது.

கவனித்தல்: கொரிந்தியருக்கு எழுதிய முதல் நிருபத்தில், கொரிந்து சபையில் இருந்த சில பிரச்சனைகள் மற்றும் விசுவாசிகளின் கேள்விகளுக்கு பவுல் பதிலளிக்கிறார். கொரிந்து விசுவாசிகளிடையே பிரிவினைகள், வழக்குகள், பாலியல் ஒழுக்கக் கேடுகள், பாவ சோதனைகள், ஆவிக்குரிய வரங்கள் மற்றும் உயிர்த்தெழுதல் குறித்த தவறான புரிதல்கள் போன்ற பல பிரச்சனைகள் இருந்தன. முந்தைய 15 அதிகாரங்களில் பவுல் அவை அனைத்திற்கும் பதில் கூறுகிறார்.  இங்கே தன் நிறைவுரையில், கொரிந்து சபையினருக்கு ஐந்து காரியங்களை நினைவுபடுத்தி கட்டளையாகக் கூறுகிறார்.  கொரிந்து விசுவாசிகள் முக்கியமானவைகளுக்கு முதலிடம் கொடுத்து செயல்பட வேண்டும்.

13ஆம் வசனத்தில், வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு உதவும் நான்கு காரியங்களை நாம் காண்கிறோம். இந்த நான்கு  கட்டளைகளும் இராணுவக் கட்டளைகள் போல இருக்கின்றன.  முதலாவது கட்டளையான ”விழித்திருங்கள்” என்பது, நம் வாழ்க்கையில் நமக்கு என்ன நேர்ந்தாலும் எதைச் சந்தித்தாலும் கிறிஸ்தவராக நம் பொறுப்பை நிறைவேற்றி முடிப்பதற்கு கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதை நமக்கு நினைவு படுத்துகிறது. நாம் நம் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும். ஏனெனில், “கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறபிசாசானவனுக்கு எதிர்த்து நிற்பதற்கு இது உதவியாக இருக்கிறது (1 பேதுரு 5:8,9).  இயேசுகிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தில் உறுதியாக நிலைத்து நிற்கிற ஒரு விசுவாசிக்கு எதிராக சாத்தான் எதுவும் செய்ய முடியாது.  குழந்தைகளைப் போல இராமல், தேறினவர்களாக (அல்) முதிர்ச்சியடைந்தவர்களாக சிந்தித்துச் செயல்படும்படி பவுல் கொரிந்து விசுவாசிகளை எச்சரித்தார் (1 கொரி.3:1; 13:11; 14:20).  நாம் குழந்தைத்தனமாக இராமல், தேறின கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும். நாம் விழாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் (1 கொரி.10:12). நமக்குத் தேவைப்படுகிற பலமானது கிறிஸ்துவிடம் இருந்து வருகிறது. ”கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும்” நாம் எப்பொழுதும் பலப்பட வேண்டும் (எபே.6:10). இந்த நான்கு காரியங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையது ஆகும். மேலும், ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு முக்கியமானதும் ஆகும். கடைசியாக, 14ம் வசனத்தில், எல்லாவற்றையும் அன்புடனே செய்யும்படி பவுல் நினைவுபடுத்துகிறார். 13ம் அதிகாரத்தில், அன்பின் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் பற்றிய பவுலின் குறிப்பை நாம் வாசிக்கிறோம். தேவனிடத்தில் அன்பு கூர்தல் மற்றும் ஒருவரோடொருவர் அன்பு கூர்தல் என்பது பிரதானமான கட்டளைகள் மட்டுமல்ல, இயேசு கிறிஸ்துவின் சீடராக வாழ விரும்பும் ஒவ்வொரு கிறிஸ்தவரின் வாழ்க்கை முறை ஆகும்.

பயன்பாடு: ஒரு கிறிஸ்தவராக, நான் உலக பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளுக்கேற்ப வாழக் கூடாது. நான் ”இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” வாழ வேண்டும் (ரோமர் 12:2). கர்த்தருடனான என் வாழ்க்கை குறித்து விழிப்புடனும், என் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்தும் நான் நிற்க வேண்டும். இயேசு ஏற்கனவே உலகத்தை ஜெயித்துவிட்டார். எதிரியான பிசாசை எதிர்த்து தைரியமாகவும் உறுதியாகவும் நிற்பதற்குத் தேவையான பலத்தை இயேசு எனக்குத் தருகிறார்.  நான் ” நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டு” இருக்கிறேன் (ரோமர் 6:14). பாவத்திற்கோ சாத்தானுக்கோ என் மேல் எந்த அதிகாரமும் இல்லை. தேவனுடைய அன்பானது சகலத்தைலும் அன்பில் செய்வதற்கு என்னைப் பலப்படுத்துகிறது.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, ஒரு உண்மையுள்ள கிறிஸ்தவனாக வாழ்வதற்கான இரகசியங்களைக் கற்றுத்தருகிறதற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, நான் என் வாழ்க்கையில் ”இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்” வாழ இன்றும் என்றும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 254

No comments: