Friday, September 3, 2021

குறிக்கோள் நிறைந்த வாழ்க்கை

வாசிக்க: ஏசாயா 3,4; சங்கீதம் 64; 1 கொரிந்தியர் 9

வேத வசனம் 1 கொரிந்தியர் 9: 26. ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்.
27. மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.

கவனித்தல்:  “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம், சொல்லிய வண்ணம் செயல்” என்று ஒரு பண்டைய தமிழ் புலவர் எழுதி இருக்கிறார். அனேகருடைய வாழ்க்கையில், அவர்கள் பேசும் வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்கும் பெரும் வித்தியாசம் காணப்படுகிறது. நற்செய்தியைப் பிரசங்கித்தல் மற்றும் கிறிஸ்துவுக்காக ஜனங்களை ஆதாயம் பண்ணுகிறதற்கான தன் தாழ்மை குறித்து குறிப்பிட்ட பின்,  கர்த்தருக்கு ஊழியம் செய்வதற்கான தன் அர்ப்பணிப்பைக் குறித்துச் சொல்ல பவுல் பண்டைய உலகில் அனைவருக்கும் பரிட்சயமான இரண்டு விளையாட்டு காட்சிகளை பவுல் குறிப்பிடுகிறார். எந்தவொரு விளையாட்டுப் போட்டியிலும், முதலாவதாக வருகிறவர்கள் மட்டுமே பரிசைப் பெறுவார்கள். ஆனாலும், ஒரு விளையாட்டில் கலந்து கொள்கிற அனைவருமே கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வார்கள். கிறிஸ்தவ வாழ்க்கை அல்லது நம் விசுவாச ஓட்டமானது உலகப்பிரகாரமான போட்டிகளில் இருந்து வேறுபட்டது ஆகும்.  கிறிஸ்தவர்களாகிய நாம் நித்தியமான, அழிந்து போகாத மற்றும் மகிமையான பரிசை கர்த்தரிடத்தில் இருந்து பெறுவோம். விசுவாச ஓட்டப்பந்தயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்கிற அனைவருமே தங்களுக்கு உரிய பரிசைப் பெறுவார்கள்.

பவுலின் உறுதியான இருதயத்தையும், அவருடைய கிறிஸ்தவ வாழ்க்கைக்கான குறிக்கோளையும் பற்றி 1 கொரிந்தியர் 9:26 நமக்குக் கூறுகிறது. ஒரு போட்டிக்காக ஆயத்தப் படாத, உரிய பயிற்சி பெறாத ஒருவரைப் போல பவுல் இருக்க விரும்பவில்லை. பந்தயத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்க்க அவர் தன் சரீரத்தைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறார். வேறுவிதமாகச் சொல்வதானால், தன் வாழ்க்கையை சரீரமானது ஆளுகை செய்ய பவுல் அனுமதிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர் தன் சரீரத்தை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான எல்லா முயற்சிகளையும் அவர் எடுக்கிறார். தன் சரீரத்தை தண்டிப்பது பற்றியோ, துறவற வாழ்வை மேற்கொள்வது பற்றியோ பவுல் கூறவில்லை. மாறாக, தன் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு தான் பிரசங்கித்ததை பின்பற்றவேண்டும் என்ற இருதய விருப்பத்தை அவர் வெளிப்படுத்துகிறார். பவுல் ரோமாபுரியில் உள்ள திருச்சபைக்கு எழுதினது போல, “ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்” (ரோமர் 6:12,13). நாம் நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல, கிரயத்திற்கு வாங்கப்பட்டவர்கள் என்பதை நாம் நினைவுகூர்வோமாக.

பயன்பாடு: ஒரு கிறிஸ்தவராக, நான் மற்றவர்களுக்கு எதைப் பற்றிப் பிரசங்கிக்கிறேனோ அதன்படி வாழ வேண்டும். தேவன் என்னை ஒரு நோக்கத்துடனேயே அழைத்திருக்கிறார். ஆகவே, அவருக்கு உண்மையாக ஊழியம் செய்யும்படி நான் தொடர்ந்து முயற்சி செய்வேன். ஒரு அடிமையானவன் தன் எஜமானனுக்குச் செவிகொடுத்து, கீழ்ப்படிகிறான். அதுபோல, “மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப்” பெறும்படி, இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியவும் அவரை கனப்படுத்தவும் நான் என் சரீரத்தை அடக்கியாள வேண்டும் (1 பேதுரு 5:4).

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என் வாழ்க்கையைக் குறித்த உம் நோக்கத்திற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உமக்கு எப்பொழுதும் கீழ்ப்படியும்படிக்கு என் சரீரத்தை கட்டுப்படுத்தி வாழ எனக்கு உம் பலத்தைத் தாரும். இயேசுவே, நான் உமக்குச் சொந்தமானவனாகவும், கர்த்தருக்கென்று பரிசுத்தமாகவும் வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 246

No comments: