Sunday, September 19, 2021

நம்மை சுத்திகரித்துக் கொள்வோம்

வாசிக்க: ஏசாயா 33,34; சங்கீதம் 79; 2 கொரிந்தியர் 7

வேத வசனம்  2 கொரிந்தியர் 7: 1. இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.

கவனித்தல்:  “சுத்தமாக இருப்பது என்பது தேவபக்தியுடன் தொடர்புடையது” என்ற பழமொழியானது சுத்தமாகவும் பரிசுத்தமாகவும் இருப்பவர்கள் தேவனுக்கு நெருக்கமாக அல்லது அருகில் இருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. சுத்தமாக இருத்தல் என்பதைப் பற்றிப் பேசும்போது, ஜனங்கள் பொதுவாக வெளிப்பிரகாரமான அல்லது சரீர சுத்தம் குறித்தே பொதுவாகப் பேசுவார்கள். 2 கொரி.7:1ல், பரிசுத்தமாகுதலுக்கு கொரிந்து சபை விசுவாசிகளை அழைக்கிறார். சுத்திகரித்தலுக்கான தன் அழைப்பிற்கு முன்பு, தேவன் தம் ஜனங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தங்களை பவுல் நினைவுபடுத்துகிறார். 2 கொரி.6:16-18ல், குறைந்தது ஏழு பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிற வாக்குத்தத்தங்களை நாம் பார்க்கிறோம். தேவன் நமக்கு என்ன செய்கிறார் என்பதையும், அவர் நமக்கு யார் என்பதையும், நாம் தேவனில் யாராக இருக்கிறோம் என்பதையும் பற்றிய ஒரு சித்திரத்தை இந்த வாக்குத்தத்தங்கள்  நமக்குத் தருகின்றன. நம்முடனே நடக்கிற, வாழ்கிற மற்றும் நம்முடன் உறவாடுகிற தேவனை உடையவர்களாக இருப்பது எவ்வளவு பாக்கியமானது!  சுத்திகரிப்பின் செயலுக்கான பவுலின் அழைப்புக்கு உற்சாகப்படுத்தும் இசையாக இந்த வாக்குத்தத்தங்கள் இருக்கின்றன.  தேவன் நம்மிடம் வரும்போது, கர்த்தருக்கென்று நம்மை சுத்தமாகவும் பரிசுத்தமாகவும் வைத்துக் கொள்ளும் பொறுப்பு நமக்கு உண்டு.  இல்லையேல், தேவன் நம் மத்தியில் இருப்பதை நாம் பார்க்கமுடியாமல் போகலாம் (மத்.5:8).

”நம்மை சுத்துகரித்து: கொள்வோம் என பவுல் கொரிந்து  விசுவாசிகளை அழைக்கிறார்.  நாம் தேவனிடம் நம்மை ஒப்படைக்கும்போது, சரணடையும்போது அவர் நம்மை சுத்திகரிக்கிறார் என சில கிறிஸ்தவர்கள் நினைக்கலாம். ஆம் இது உண்மைதான். நாம் நம் எல்லா பாவங்களையும் அறிக்கை செய்யும்போது தேவன் நம்மை மன்னித்து, அவைகளில் இருந்து நம்மை சுத்திகரிக்கிறார். ஆயினும், கர்த்தருக்கு விரோதமாக நம்மைப் பாவம் செய்ய வைக்கும் காரியங்களில் இருந்து நம்மை விலக்கி வைக்க வேண்டியது நம் பொறுப்பு ஆகும். நாம் கர்த்தருக்கு முன்பாவும், ”மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க” நம்மைச் சுத்திகரிப்பதற்கும் திறந்த மனதுள்ளவர்களாக இருக்க வேண்டும். இது என் பலவீனமான பகுதி, இது யாரையும் பாதிப்பதில்லை, நான் சொன்னாலொழிய யாருக்கும் தெரியாது என்பன போன்ற சாக்குபோக்குகளை நாம் சொல்லக் கூடாது. ”நம்மை சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு” ஓட வேண்டும் என்று எபிரேய நிருப ஆக்கியோன் வலியுறுத்துகிறார் (எபி.12:1). நம் வாழ்க்கையில் இருந்த்து தூர எறிந்து போட வேண்டிய காரியம் என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்கிறோம். நாம் புறம்பான காரியங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்தால், தேவனை நேசிக்காமல், நியாயப்பிரமாணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த பரிசேயர்களைப் போல சட்ட நெறிவாதம் செய்கிறவர்களாக நாம் மாறிவிடுவோம் (லூக்கா 11:42). இங்கே, “எல்லா” என்பது நம் மாம்சத்தையும் ஆவியையும் கறைபடுத்துகிற அனைத்தையும் குறிக்கிறது. நம் மாம்சம் மற்றும் ஆவி ஆகியவற்றின் சுத்திகரிப்பு குறித்து நாம் சம அளவு கரிசனை உள்ளாவர்களாக நாம் இருக்க வேண்டும்.

பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” என்று பவுல் சொல்கிறார். இது சுத்திகரிப்பு செய்யும் செயலானது ஒரு தடவையுடன் முடிந்து விடுகிற ஒரு காரியம் அல்ல, பரிசுத்தமாவதற்கு நாம் தொடர்ந்து செய்ய வேண்டிய ஒரு காரியம் என்பதை நமக்கு இது நினைவூட்டுகிறது. நாம் களைகளைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும் (மத்.13:25-27). கடைசியாக, இந்த சுத்திகரிப்பை நாம் தேவ பயத்தோடே செய்ய வேண்டும். தேவனைப் பற்றிய பயபக்தியானது நம்மை சுத்திகரித்துக் கொள்வதற்கான பலத்தை நமக்குத் தந்து, மனிதரைப் பற்றிய பயத்தை நீக்குகிறது.  கிறிஸ்துவில், வாக்குத்தத்தத்தின்படி, நாம் தேவனுடைய பிள்ளைகளும் சுதந்தரருமாக இருக்கிறோம்.

பயன்பாடு: நான் தேவனுடைய பிள்ளை. என் சரீரம் எனக்குள் வசிக்கும் பரிசுத்த ஆவியானவரின் ஆலயம் ஆகும் (1 கொரி.6:19). நான் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்துப் போடக் கூடாது (1 கொரி.3:16-17). நான் தேவனுடைய பரிசுத்த ஜனத்தில் ஒருவனாக இருக்கும்படி அழைக்கப்பட்டிருக்கிறேன்.   தேவனுடனான என் உறவைப் பாதிக்கும் எதையும் நான் அனுமதிக்கமாட்டேன். 

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, உம்மைப் போல பரிசுத்தமாக வாழும்படியான பரிசுத்த அழைப்புக்காக உமக்கு நன்றி.  என் தேவனே, துணிகரமான பாவங்களுக்கு என்னை விலக்கிக் காத்துக் கொள்ளும். இயேசுவே, என் சரீரத்தையும் ஆவியையும் அசுத்தப்படுத்தும் எல்லாவற்றிலும் இருந்து சுத்திகரித்துக் கொள்ள என்னைப் பலப்படுத்தியருளும். பரிசுத்த ஆவியானவரே, நான் அனுதினமும் தேவனை நேசித்துக் கீழ்ப்படிய அவரைப் பற்றிய பயபக்தியுடன் வாழ எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 261

No comments: