Wednesday, September 29, 2021

இயேசுவின் உண்மையான புகைப்படம்

 வாசிக்க: ஏசாயா 53, 54; சங்கீதம் 89; கலாத்தியர் 4

வேத வசனம்ஏசாயா 53: 4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.
5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

கவனித்தல்:  நாம் செல்பிக்களின் (selfie) காலத்தில் வாழ்கிறோம். ஒரு நாளில் மக்கள் பல முறை தங்களை போட்டோ எடுத்துக் கொண்டு, அவைகளை மற்றவர்களுடனும், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆயினும், அவர்கள் விரும்புகிற அல்லது இருதயத்துக்குப் பிடித்தமான படங்கள் மட்டுமே மற்றவர்களுக்குக் காட்டப்படும்/பகிரப்படும். ஏசாயா 52:13-53:12 இல்,  ஏசாயா புத்தகத்தில் பாடுபடும் ஊழியரைப் பற்றிய நான்காவது மற்றும் கடைசிப் பாடலை நாம் வாசிக்கிறோம். ஏசாயா 53ம் அதிகாரம் இயேசுவைப் பற்றிய ஒரு படத்தை நம் முன் வைக்கிறது. அதில், ”அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம்” அவருக்கு இல்லை (வ.2). ஆயினும், கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த அதிகாரத்தை மிகவும் விரும்பி, அடிக்கடி வாசிக்கவும் விரும்புகிறோம். மாறாக, இயேசுவை மேசியா என்று ஏற்றுக் கொள்ள மறுக்கிற யூதர்கள் இதை வாசிப்பது கூட கிடையாது. யூத ரபிமார்கள் ஏசாயா 53 ஐ வாசிக்கும்படி யூதர்களிடம் சொல்ல மாட்டார்கள். பாடுபடும் ஊழியரைப் பற்றிய குறிப்பில் தனித்துவமானது என என்ன இருக்கிறது?

ஏசாயா 53:4-6 பகுதியானது, வரப்போகிற மேசியாவைப் பற்றி கூறும் ஊழியரைப் பற்றியப் பாடல்களில் (Servant Songs) மிகவும் முக்கியமான வேதபகுதி ஆகும். இங்கே மேசியா நமக்காக என்ன செய்தார் என்பதையும் நம் வாழ்வில் அதனால் வரும் விளைவுகள் என்ன என்பதையும் நாம் வாசிக்கிறோம்.  மேலே உள்ள இரண்டு வசனங்களில், ”நம்முடைய” என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது என்பதைக் கவனியுங்கள்.  மேசியாவாகிய இயேசு நம்முடைய பாடுகள், நம்முடைய துக்கங்கள், நம்முடைய மீறுதல்கள் மற்றும் நம்முடைய அக்கிரமங்கள் அனைத்தையும் சுமந்து தீர்த்தார். நம் வாழ்வில் சமாதானம், மன்னிப்பு மற்றும் குணமாகுதலைக் கொண்டு வரும்படியாக அவைகள் அனைத்தையும் இயேசு அனுபவித்தார். நம்மில் உள்ள அருவருப்பான மற்றும் வேதனையான காரியங்களை எடுத்துக் கொண்டு, அவர் தன் அற்புதமான அன்பை நமக்குத் தருகிறார். அவருடைய பாடுகளின் வேதனையை விவரிப்பதும், அவர் நமக்காக அடைந்த ஆக்கினைத் தீர்ப்பைப் பற்றிக் கூறுவதும் மிகவும் கடினமானது ஆகும் (ஏசாயா 52:14). இது தற்செயலாக நடந்ததோ  அல்லது விபத்தோ அல்ல. வேதம் சொல்கிறபடி, மனிதன் மீதான தேவனுடைய அன்பை இது வெளிப்படுத்துகிறது (யோவான் 3:16). நாம் தேவனுடைய அன்பை ஏற்றுக் கொண்டு, நம் வேதனை, துக்கங்களை, நம் பாவங்கள் மற்றும் அக்கிரமங்களை சுமப்பதற்காக இயேசு தம்மைத்தாமே ஒப்புக் கொடுத்தார் என்று ஏற்றுக் கொண்டு அதை அறிக்கை செய்யும் போது, நாம் தேவனிடத்தில் சமாதானம் உடையவர்களாகவும், ஆவிக்குரிய மற்றும் சரீர குணமாகுதலைப் பெறுகிறவர்களாக இருக்கிறோம். தேவன் நம் பாவங்களை மன்னித்து நம்மை சுத்திகரிக்கிறார்.  ஏசாயா 53:4-5 வசனங்களில் நம்முடைய என்று வரும் இடங்களில் உங்களுடைய பெயரை அல்லது “என்னுடைய” என்று சொல்லி மறுபடியும் வாசித்து, அதை தியானம் செய்யுங்கள்.

பயன்பாடு: பரிசுத்த வேதாகமம் சொல்லும் மிகப்பெரிய உண்மை என்னவெனில், மிகவும் புகழ்பெற்ற இறையியல் வல்லுனர் கார்ல் பர்த் என்பவர் ஒருமுறை சொன்னது போல, ”இயேசு என்னை நேசிக்கிறார், ஏனெனில் வேதாகமம் சொல்வதும் அதுவே” (Jesus loves me this I know, for the Bible tells me so.) தேவன் என் மீது வைத்திருக்கிற அன்பை நான் முழுமையாகப் விளங்கிக் கொள்ள முடியாமல் போகலாம். நான் இந்த தீர்க்கதரிசனத்தையும், இயேசுவில் அதன் நிறைவேறுதலையும் வாசிக்கும்போது, தேவனுடைய அன்பு உண்மையானது என்பதைப் புரிந்து கொள்கிறேன். நான் செய்யக் கூடியதெல்லாம் என்னவெனில், தேவனுடைய அன்பை ஏற்றுக் கொண்டு, இயேசு எனக்காக வைத்திருப்பவைகளை பெற்றுக் கொள்வதுதான். ”கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்” (சங்.116:12).

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, அறிவுக்கெட்டாத உம் அன்புக்காக நன்றி. இயேசுவே, உம் மாபெரும் மற்றும் இரட்சிக்கும் அன்புக்காக நன்றி. பரிசுத்த ஆவியானவரே, தேவனுடைய அன்பை என் இருதயத்தில் ஊற்றுவதற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உம் அன்பில் என்றும் நிலைத்திருக்க எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 271

No comments: