Monday, September 27, 2021

ஒரு தாயிலும் மேலானவர்

 வாசிக்க: ஏசாயா 49, 50; சங்கீதம் 87; கலாத்தியர் 2

வேத வசனம்: ஏசாயா 49: 15. ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
16. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.

கவனித்தல்:  அன்னையின் அன்புதான் சுயநலமற்ற, கரிசனை மிகுந்த, தியாகமான, மற்றும் நிபந்தனையற்ற மனித அன்பின் மிகச் சிறந்த வடிவம் என்பதை அனைவரும், கடவுளை நம்பாதவர்களும் கூட ஒப்புக் கொள்வர். தன் குழந்தை மீது அன்புகாண்பிக்காத ஒரு தாயை காண்பது மிகவும் அரிது. ஏசாயா 49:16இல், தேவன் தம் ஜனங்கள் மீது கொண்டிருக்கும் அன்பை விளக்குவதற்காக அனைவருக்கும் பதில் தெரிந்த ஒரு கேள்வியைக் கேட்கிறார். உன்னை நேசிக்கும் தாய் மறந்தாலும் கூட, “நான் உன்னை மறப்பதில்லை” என்று தேவன் கூறுகிறார். சில சமயங்களில், குறிப்பாக நாம் கடினமான காலங்களினூடாகச் செல்கையில், ஒருவரும் நம்மை நேசிக்கவில்லை என்று நாம் நினைக்கக் கூடும். இங்கே கடவுள் நான் உன்னை நேசிப்பதுடன், உன்னை மறக்க மாட்டேன் என்றும் சொல்கிறார். எரேமியா 31:20இல், “எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப்பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” ”என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்” என்று சங்கீதக்காரனைப் போல  நாம் உறுதியாக இருக்க முடியும் (சங்.27:10).

பொதுவாக, எதிர்காலத்தையும், வெற்றிகளையும் முறையாக அணுகுவதற்கு தங்கள் வாழ்க்கையைக் குறித்த ஒரு தெளிவான வரைபடத்தை  உடையவர்களாக இருக்க வேண்டும் என ஜனங்கள் விரும்புகின்றனர். ”நீங்கள் திட்டமிடத் தவறினால், தோல்வியடைவதற்காக நீங்கள் திட்டமிடுகிறீர்கள்” என அவர்கள் சொல்கிறார்கள். தோல்விகளையும், ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளும்போது, நாம் கர்த்தரைப் பார்த்து, “ஏன் என்னை மறந்தீர்?” என்று கேட்கக் கூடும் (சங்.42:9). ஆனால் தேவனோ நம்மை அவர் தம் உள்ளங்கைகளில் வரைந்திருப்பதாகச் சொல்கிறார். வசனத்தைக் கவனமாகப் பாருங்கள். அடிக்கடி மறந்து போகிற இயல்புடையவர்கள் பெயர்களை அல்லது குறிப்பிட்ட காரியங்களை தாங்கள் நினைவுகூரும்படி எழுதி வைத்துக் கொள்வார்கள். ஆனால் தேவனோ நம்மை உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார். நம் எதிர்காலத்தைக் குறித்த திட்டத்தை நாம் தேவனிடம் கேட்டால், அவர் நம்மிடம் கவலைப்படாதே என்று சொல்லி, தம் அன்பினைப் பற்றிய உறுதிப்படுத்த ஆணிகள் கடாவிய கரங்களைக் காண்பிப்பார்.  நம் எதிர்காலத்தைக் குறித்து தேவன் ஒரு திட்டம் வைத்திருக்கிறார்; அது நம்முடைய திட்டங்களைக் காட்டிலும் சிறந்தது ஆகும் (எரே.29:11). கடைசியாக, நம் வாழ்க்கை மீதான அவருடைய ஆளுகை மற்றும் பாதுகாப்பைப் பற்றி தேவன் நமக்கு நினைவூட்டுகிறார். பண்டைய காலத்தின் மதில் சுவர்கள் நகரத்திற்குள் வாழ்ந்தவர்களைப் பாதுகாத்ததைக் காட்டிலும் அதிகமாக தேவன் நம்மைப் பாதுகாக்கிறார், பராமரிக்கிறார், தேவைகளைச் சந்திக்கிறார். தேவன் பரலோகத்தில் இருந்து நம்மைப் பார்க்கிறார்; அவரிடத்தில் இருந்து நமக்கு ஒத்தாசை வருகிறது. நம் வாழ்க்கையைப் பற்றின தேவனுடைய தனித்துவமான, ஆச்சரியமான, ஆறுதலளிக்கும் வாக்குத்தத்தங்கள் நம்மிடம் உண்டு. நாம் எதையாவது குறித்து ஏன் கவலைப்படவேண்டும்! ஒரு தாயிலும் மேலாக, தேவன் நம்மை நேசிக்கிறார். அவர் கிருபை நமக்குப் போதுமானதாக இருக்கிறது.

பயன்பாடு:  தேவன் சகலத்தையும் குறித்து என்னை பார்க்கிலும் சிறப்பாக அறிந்திருக்கிறார்.  ஆகவே, கவலைப்படுவதற்குப் பதிலாக, தேவனையும் அவருடைய திட்டத்தையும் நாம் நம்பிட முடியும். ஏனெனில் அவர் என்னை நேசிக்கிறார். இயேசு எனக்காக தம் ஜீவனைக் கொடுத்ததினாலே, அன்பு இன்னதென்று நான் அறிந்திருக்கிறேன். தேவன் மீதான என் அன்பை நான் வசனத்தினாலும் நாவினாலும் மட்டுமல்ல,  கிரியையினாலும் உண்மையினாலும் என் அன்பை வெளிப்படுத்த வேண்டும் (1 யோவான் 3:16-18).

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் என் மேல் காட்டிவருகிற மாபெரும் அன்பிற்காக உமக்கு நன்றி.  கர்த்தாவே, நீர் என்னை விட்டு விலகுவதுமில்லை. என்னைக் கைவிடுவதுமில்லை. தேவனே, உம் அன்பில் எந்நாளும் நான் நிலைத்திருக்க எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 269

No comments: