Friday, September 17, 2021

கிறிஸ்துவின் அன்பினால் இயக்கப்படும் ஒரு வாழ்க்கை

வாசிக்க: ஏசாயா 29,30; சங்கீதம் 77; 2 கொரிந்தியர் 5

வேத வசனம்2 கொரிந்தியர் 5: 14. கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;
15.
பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.

கவனித்தல்: ஒரு பழங்கால தமிழ்ப் புலவர், “அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்” என்று கேட்கிறார். அன்பிற்கு எல்லையே கிடையாது என்பதை நாம் அனைவரும் ஒப்புக் கொள்வோம். ஒருவர் வெறித்தனமாக யாராவது ஒருவர் மீது அன்பைக் காண்பித்தால், மக்கள் அவரை பைத்தியம் என்று சொல்வார்கள். பவுலுக்கு எதிராக அவருடைய எதிரிகள் அப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்க வேண்டும் (வ.13). பவுலின் செயல்கள் சுயநலமற்றவை என்பதை அவர் சொல்கிற பதில் காண்பிக்கிறது.  14ஆம் வசனத்தில், தன் தன்னலமற்ற ஊழியத்திற்கு காரணமாக “கிறிஸ்துவின் அன்பை” பவுல் குறிப்பிடுகிறார். இங்கே, கொடுக்கப்பட்ட வார்த்தையானது “கிறிஸ்துவின் மீதான நம் அன்பு” மற்றும் “கிறிஸ்து நம் மீது காண்பிக்கும் அன்பு” ஆகிய இரண்டையுமே குறிக்கும் என்றாலும், சொல்லப்பட்ட சூழலை வைத்துப் பார்க்கும்போது,  இது கிறிஸ்து நம் மீது காட்டும் அன்பைக் குறிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். பவுல் கிறிஸ்துவின் அன்பை ஒரு மாபெரும் அன்பின் செயலாக குறிப்பிடுகிறார் (பார்க்க யோவான் 3:16; 15:13). ”அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்” என்று அப்போஸ்தலனாகிய யோவான் எழுதுகிறார் (1 யோவான் 3:16; 4:10).

கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது” என்று பவுல் சொல்கிறார். அன்பு எவரையாவது கட்டாயப்படுத்துமா? என்று நாம் கேட்கக் கூடும். கிறிஸ்துவின் அன்பை எல்லோருடைய பாவங்களுக்காகவும் கிறிஸ்து மரித்த சிலுவையுடன் இணைத்து பவுல் காண்கிறார். இயேசுவின் தியாகமான, சுயநலமற்ற, மற்றும் நிபந்தனையற்ற அன்பைப் பற்றிய உணர்தல், பவுலை இவ்வாறு சொல்ல வைத்தது. கிறிஸ்துவின் அன்பு பவுலுக்கு  ஒரு நிச்சயமான நம்பிக்கையைக் கொடுத்தது. அது அவருடைய ஊழிய அழைப்புக்குத் தேவையானதைச் செய்யும்படி அவரை நெருக்கி ஏவியது மற்றும் வழிநடத்தினது. இங்கே, உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதைப் பற்றி பவுல் கூறவில்லை. அகாபே அன்பு என்பது ஒருவர் தன் முழு மனதுடன் விரும்பி செய்கிற செயலைக் குறிப்பது ஆகும். கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற ஒவ்வொரு கிறிஸ்தவரும் கிறிஸ்துவுக்காக வாழ வேண்டும் என்று பவுல் வலியுறுத்துகிறார்.  நாம் கிறிஸ்துவைப் போல வாழ வேண்டும் என்று யோவானும் இதே போல சொல்கிறார் (1 யோவான்.2:6; 3:16).  ”அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்” (1 யோவான் 4:19). தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறவைகளைச் செய்யும்படி கிறிஸ்துவின் அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது. எவரும் அல்லது எதுவும் கிறிஸ்துவின் அன்பில் இருந்து நம்மைப் பிரிக்க முடியாது என்பதை நாம் அறிந்திருக்கிறோம் (ரோமர் 8:39).

பயன்பாடு: ”இயேசுகிறிஸ்து தேவனாக இருந்தும் எனக்காக மரித்தார் என்றால், நான் அவருக்காகச் செய்யும் எந்த தியாகமும் பெரிது அல்ல” என்று சி.டி. ஸ்டட் என்ற தேவ மனிதர் ஒருமுறை சொன்னார். நான் சிலுவையைப் பார்த்து, கிறிஸ்து எனக்காக செலுத்தின விலையை உணர்ந்து கொள்ளும்போது, கிறிஸ்துவில் வெளிப்பட்ட தேவனுடைய அன்பை நான் புரிந்து கொள்கிறேன். என் சுயநல லாபங்களுக்காக எதையாகிலும் செய்யும்படி கிறிஸ்துவின் அன்பு ஒருபோதும் என்னைத் தூண்டாது. மாறாக, தேவனுடைய இரட்சிப்பை ஜனங்கள் கண்டு கொள்ளும்படி உதவுகிற தேவனுடைய வேலையைச் செய்வதற்கு அது என்னை உற்சாகப்படுத்துகிறது. நான் தேவனுடைய அன்பை மட்டுப்படுத்த மாட்டேன். நான் அன்புடன் மகிழ்ச்சியாக கிறிஸ்துவுக்காக வாழ்வேன்.

ஜெபம்:  அன்பின் தகப்பனே, இருளின் அதிகாரத்தில் இருந்து என்னை இரட்சித்து, அன்பின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்ஜியத்திற்குள் என்னைக் கொண்டு வந்த உம் அன்பிற்காக நன்றி.  இயேசுவே, தேவ அன்பினால் என் இருதயத்தை நிரப்பி, அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள எனக்கு உதவியருளும். தேவனுடைய மகிமைக்காக நான் வாழும்படி உம் அன்பு என்னைத் தடுத்தாண்டு கொள்வதாக. ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 259

No comments: