Monday, September 20, 2021

தளர்ந்த போன கைகளையும் முழங்கால்களையும் திடப்படுத்துங்கள்

 வாசிக்க: ஏசாயா 35,36; சங்கீதம் 80; 2 கொரிந்தியர் 8

வேத வசனம்: ஏசாயா 35: 3. தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
4. மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.

கவனித்தல்:  பயம் மற்றும் மன அழுத்தத்தினால் நாம் பாதிக்கப்படும்போது, அதிர்ச்சியான அல்லது/மற்றும் தாங்க இயலாத செய்தியைக் கேள்விப்படுகையில் நம்மில் பலர் நிலைகுலைந்து, சரீரப்பிரகாரமாகவும் மனதளவிலும் பலவீனமடைந்து விடுகிறோம்.  வலிமையான மனிதர்களும் அப்படிப்பட்ட சமயங்களில் நோய்வாய்ப்பட்டு, தங்களுடைய வழக்கமான வாழ்க்கையை வாழ பலமில்லாதவர்களாகி விடுவதை நாம் பார்த்திருக்கலாம். சமயங்களில்,  ஒரு தலைவரின் மரணம் அல்லது வழிகாட்டியாக இருப்பவரின் மரணம் அல்லது நெருங்கிய உறவினரின் மரணம் ஆகியவை நம்மைப் பலவீனப்படுத்தக் கூடும்.  இங்கே, ஏசாயாவின் வார்த்தைகள் அசீரியர்களால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலர்களுக்கு சொன்ன வார்த்தைகள் ஆகும். இஸ்ரவேலர்கள் எதிர்காலத்தைப் பற்றிய தங்கள் நம்பிக்கையனைத்தையும் இழந்திருக்கக் கூடும். அவர்கள் தங்களுடைய தளர்ந்த கைகளையும் தள்ளாடுகிற முழங்கால்களையும் திடப்படுத்தும்படி ஏசாயா உற்சாகப்படுத்துகிறார். வேறு விதமாகச் சொல்வதானால், இஸ்ரவேலர்கள் ஜெபத்தில் தேவனைத் தேடும்படி அவர்களிடம் கூறுகிறார். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து, “நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்” என்று சொல்லி உற்சாகப்படுத்தும்படி ஏசாயா இஸ்ரவேலர்களிடம் சொல்கிறார். வேதாகமம் எங்கிலும் நாம் இந்த இரு சொற்றொடர்களைக் காண முடியும். இவ்வார்த்தைகள் மூலமாக, பலம், நம்பிக்கை மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய வாக்குத்தத்தம் ஆகியவை மிகவும் தேவைப்படுகிறவர்களாக இருக்கிறவர்களுக்கு தேவன் அவைகளைக் கொடுக்கிறார்.

கஷ்டங்களை அனுபவிக்கிறவர்களிடம் ”பயப்படாதிருங்கள்”  மற்றும் ”திடன் கொள்ளுங்கள்” என்பன போன்ற வார்த்தைகளை உலக மக்களும் சொல்வதை நாம் காண்கிறோம். பெரும்பாலான நேரங்களில், அவை வெறுமையானவைகளாகவும், தேவையில் உள்ளவர்களுக்கு எந்த நம்பிக்கையையும் கொடுக்காதவைகளாகவும் இருக்கின்றன. ஆனால், தேவனுடைய வார்த்தையோ ஜீவனும் வல்லமையும் உள்ளதாக இருக்கிறது. கர்த்தருடைய வார்த்தை ஒருபோதும் வெறுமையாகத் திரும்புவதில்லை. இங்கே, இஸ்ரவேலர்களைக் காப்பாற்றி, அவர்களுக்கு நியாயம் செய்கிற மேசியாவின் வருகையைக் குறித்து ஏசாயா அவர்களிடம் கூறுகிறார். அது வரப்போகிற மேசியாவைப் பற்றிய வாக்குத்தத்தம் மட்டுமல்ல,  அவர் தம் ஜனங்களுக்கு என்ன செய்வார் என்பதைப் பற்றிய வாக்குத்தத்தமும் ஆகும். தேவன் வந்து, இந்த உலகத்தை நியாயம் தீர்ப்பார்; அவர் தம் ஜனங்களை இரட்சித்து, யாக்கோபிலிருந்து அவபக்தியை அகற்றிடுவார் (சங்.96:11-13; 98:7-9; ரோமர் 11:26). பாடுகள் மற்றும் உபத்திரவத்தின் மத்தியில் வாழ்ந்த கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்த எபிரேய நிருப ஆக்கியோன் ஏசாயா 35:3 ஐப் பயன்படுத்துகிறார் (எபி.12:12). கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருவரையொருவர் தாங்கி, தேவனுடைய வார்த்தையினால் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும். நாம் பலவீனரை அவர்களுக்கு உதவி தேவைப்படும் காலத்தில் ஏற்றுக் கொண்டு உதவி செய்ய வேண்டும் (அப்.20:35; ரோமர் 14:1; 15:1). இயேசு சீக்கிரம் வரப்போகிறார்.

பயன்பாடு: பலவீன கிறிஸ்தவர்களுக்கு நான் ஏமாற்றத்தையும் விரக்தியையும் அதிகரிக்கக் கூடாது. மாறாக, பலம் கொண்டு  பயமின்றி அவர்கள் இருக்கும்படி நான் தேவனுடைய வார்த்தையினால் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். நான் “கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும்” பலப்பட வேண்டும் (எபே.6:10). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சீக்கிரம் வந்து, இந்த பூமியை நியாயம் தீர்ப்பார் என்பதை நினைவில் கொண்டு, மற்றவர்களுக்கு அதை நினைவுபடுத்த வேண்டும். அவர் வரும்போது, நான் அவருடனே கூட இருப்பேன்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, எனக்கு நம்பிக்கையையும், என் வாழ்விற்கு அர்த்தத்தையும் கொடுக்கும் உற்சாகமளிக்கும் உம் வார்த்தைகளுக்காக நன்றி. இயேசுவே, உம் வருகைக்கு ஆயத்தமாக இருக்க உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவனுடைய வார்த்தையினால் பலவீனரை உற்சாகப்படுத்த என்னைப் பலப்படுத்தியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 262

No comments: