Tuesday, September 14, 2021

சாத்தானின் திட்டங்களுக்கு இடம் கொடாதிருங்கள்

வாசிக்க: ஏசாயா 23,24; சங்கீதம் 74; 2 கொரிந்தியர் 2

வேத வசனம் 2 கொரிந்தியர் 2: 10. எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன்.
11. சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.

கவனித்தல்: சாத்தான் ஒரு பொய்யன் என்றும், வஞ்சிக்கிறவன் என்றும், தேவனுடைய ஜனங்கள் மேல் குற்றம் சாட்டுகிறவன் என்றும் நம்மில் பலர் நன்கறிந்திருக்கிறோம். ஆனால், “சாத்தான் எப்படி இருப்பான்?” என்று யாராவது நம்மிடம் கேட்டால், நாம் ஒரு தீய, கொடூரமான, பார்க்கவே அருவருப்பான முகத்தை உடைய ஒரு நபரை நினைக்கக் கூடும். 16ம் நூற்றாண்டு ஓவியரான ரஃபேல் அவர் வரைந்த “சாத்தானை ஜெயிக்கும் பிரதான தூதனாகிய மிகாவேல்” என்ற படம் கிறிஸ்தவர்களிடையே மிகவும் பிரபலம். சில கிறிஸ்தவர்கள் அந்தப் படத்தை தங்கள் வீட்டு வாசல்களில் தொங்க விட்டு, பிசாசின் தாக்குதல்களில் இருந்து அது அவர்களைப் பாதுகாக்கும் என நினைக்கின்றனர்.  2 கொரிந்தியர் 2:11 இல், சாத்தானின் தந்திரங்களை நாம் அறிந்திருக்கிறோம் என்று பவுல் சொல்கிறார். பிசாசின் தந்திரங்கள் எவை என்று அவர் வெளிப்படையாக குறிப்பிடவில்லை. ஏவாளை வஞ்சித்த போது பிசாசு வந்த அதே வடிவத்தில் எல்லா சமயங்களிலும் அவன் வருவதில்லை. ஒளியின் தூதனுடைய வேடத்தை சாத்தான் தரித்துக் கொள்வான் என்று பவுல் பின்னர் எழுதுகிறார் (2 கொரி.11:14). நாம் தேவனுடைய வார்த்தையை வாசிது, அதை நம் வாழ்வில் பயன்படுத்தும்போது, நாம் பிசாசானவன் எந்த வடிவத்தில் வந்தாலும் உடனே அடையாளம் கண்டு கொள்ள முடியும்.

2 கொரி.2:5-8 இல், பாலியல் பாவத்தில் ஈடுபட்ட நபரைக் குறிப்பிட்டு (1 கொரி.5:1-5), தன் ஒழுக்கக் கேட்டினால் சபையின் தண்டனையைப் பெற்ற அந்நபரை  மன்னித்து, அவரிடம் அன்பு காண்பிக்கும்படி கூறுகிறார். அந்த மனிதனை சாத்தானின் கைகளில் ஒப்புவிக்கும்படி (1 கொரி.5:5) முன்பு சொன்ன பவுல், அந்நபரை மன்னித்து அன்பு செய்யும்படி இப்பொழுது சொல்கிறார். பவுல் அந்நபர் மீது தனிப்பட்ட வெறுப்பை மனதில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. சபையானது அந்த மனிதனையும், அவனுடைய பாவத்தையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று பவுல் ஒருபோதும் சொல்லவில்லை. தண்டனைக்குப் பின்பு, பவுலின் வார்த்தைகள் வெளிப்படுத்துவது போல, அந்த மனிதன் தன் பாவத்தில் இருந்து மனம் திரும்பி இருக்க வேண்டும். இப்போது, சபையானது அந்த மனிதனை அன்புடன் ஏற்றுக் கொள்ள திறந்த மனதுள்ளதாக இருக்க வேண்டும்.  மன்னிக்காமல் இருக்கும் தன்மையானது கசப்பை உண்டாக்கும். கசப்பானது அனேக பிரச்சனைகளை உருவாக்கும் (எபி.12:5). சபையானது சாத்தானுக்கு எந்தவொரு வாய்ப்பையும் கொடுக்கக் கூடாது. தண்டிக்கப்பட்ட நபரை மன்னிக்கும்படி சபையைக் கேட்டுக் கொள்வதற்கு முன்பாக, பவுல் முதலாவதாக அந்நபரை மன்னித்தார். “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்று எபேசியர் 4:31-32ல் பவுல் எழுதுகிறார்.  சபையில் பிரிவினையை உண்டாக்கி, அனேக பிரச்சனைகளை உருவாக்குவதற்கு நாம் சாத்தானுக்கு ஏன் இடம் கொடுக்க வேண்டும்? ”அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே.

பயன்பாடு: என் தனிப்பட்ட வாழ்க்கையின் மற்றும் சபையின் பரிசுத்தம் குறித்த காரியங்களில், கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்கிற நபருக்கு நான் எதிர்த்து நிற்க வேண்டும்.  அவர் யாராக இருந்தாலும், அவருடன் நான் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.  ஆயினும், அவர் தன் பாவத்தில் இருந்து மனம் திரும்பி வரும்போது, நான் அவரைப் புறக்கணிக்கவோ அல்லது வெறுக்கவோ கூடாது. கிறிஸ்து என்னை மன்னித்ததுபோல, நான் அவரை மன்னித்து (கொலோ.3:13), அவரிடம் நான் அன்பைக் காண்பிக்க வேண்டும்.  நான் சாத்தானுக்கு கொஞ்சமும் இடம் கொடுக்கக் கூடாது/கொடுக்க மாட்டேன். மன்னிப்பைப் பற்றிய இயேசுவின் போதனையை நான் நினைவில் கொண்டு (மத்.18:22; லூக்கா 17:3-4), மன்னிக்கவும் அன்பு செய்யவும் நான் ஆயத்தமாக இருக்க வேண்டும்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என்னை மன்னித்து உம் சொந்தமாக ஏற்றுக் கொண்டதற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, மனம் திரும்ப விரும்புகிற ஒருவரை கண்டுகொள்ளாமல் இருப்பதன் பின் விளைவுகளைப் புரிந்து கொள்ள எனக்கு நீர் உதவுகிறதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, தேவனுடைய அன்பினால் என் இருதயத்தை நிரப்பி, சாத்தானைத் தோற்கடிக்க எனக்குதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 256

No comments: