Tuesday, September 21, 2021

தேவனுக்கு உண்மையாக இருக்க ஒரு அழைப்பு

 வாசிக்க: ஏசாயா 37,38; சங்கீதம் 81; 2 கொரிந்தியர் 9

வேத வசனம்: சங்கீதம் 81: 8. என் ஜனமே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும்.
9. உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ நமஸ்கரிக்கவும் வேண்டாம்.
10. உன்னை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்.

கவனித்தல்:   நம் ஞாயிறு ஆராதனைகள், கிறிஸ்தவ கூடுகைகள், மற்றும் தனி ஜெபங்களில் தேவன் உண்மையுள்ளவராக இருப்பதை நினைவுகூர்ந்து, தொடர்ந்து தேவன் நம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என வேண்டுகிறோம்.  தேவனுடைய இரட்சிப்பின் செயல்களை நினைவுகூர்தல், நாம் எந்த சூழ்நிலையில் இப்பொழுது இருந்தாலும், நமக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையைத் தருகிறது. பண்டிகை காலத்தில் பாடப்படுகிற சங்கீதம் 81 மூன்று காரியங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறது: கடந்த காலத்தில் தேவன் இஸ்ரவேலர்களுக்கு செய்தவைகள், ஒரு புதிய அர்ப்பணிப்பிற்கான தேவனுடைய அழைப்பு, இஸ்ரவேலர்கள் தேவனுக்கு செவி கொடுக்கும்போது அவர்களுக்கு அவர் என்ன செய்வார் என்பதை பற்றிய வாக்குத்தத்தம். இஸ்ரவேலரின் வரலாற்றில், இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமை மற்றும் தேவனுக்கு உண்மையில்லாமல் இருத்தல், அவர்களுடைய விக்கிரக வழிபாடு, தேவனுடைய தண்டனை மற்றும் எதிரிகளினால் வரும் கஷ்டங்கள், காப்பாற்ற வேண்டி இஸ்ரவேலரின் ஜெபம், மற்றும் தேவனுடைய விடுதலை போன்றவை திரும்பத் திரும்ப வரும் நிகழ்வுகள் ஆகும். இங்கு, 8ம் வசனமானது இஸ்ரவேலரின் கீழ்ப்படியாமை பற்றி தேவனுடைய அதிருப்தியையும், உண்மையாக இருப்பதற்கு அவர் விடுக்கும் அழைப்பையும் பற்றிக் கூறுகிறது.

ஷேமா (The Shema) ஜெபமானது இஸ்ரவேலர்கள் தேவனை அன்புகூர்ந்து அவருக்காக வாழும்படி உற்சாகப்படுத்துகிறது (உபா.6:4-9).  பத்துக் கற்பனைகளில் முதலாவது கற்பனை இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தரைத் தவிர வேறு எந்த கடவுளையும் வணங்குவதற்கு எதிரானது ஆகும் (யாத்.20:1-3).  தனக்கு செவிகொடுக்கும்படி இஸ்ரவேலரை தேவன் அழைக்கும்போது, ”உன் தேவனாகிய கர்த்தர் நானே” என்று தேவன் அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார். தேவ ஜனங்கள் தங்களை இரட்சித்த தேவனை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. தேவனுக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை வேறு எதற்கும் கொடுக்கவும் கூடாது. நம் உலக சிநேகம், பொருளாசை, மற்றும் உலகப் பிரகாரமான ஆசைகள் கர்த்தரிடத்தில் இருந்து நம்மை விலக்கி, இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தானை மறைமுகமாக வழிபட வைத்துவிடக் கூடும். நாம் தேவனுக்கு செவிகொடுத்து, அவருக்குக் கீழ்ப்படியும்போது, நம் தேவைகள் அனைத்திற்கும் நாம் அவரை நம்ப முடியும். ”கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது” என்று வேதம் சொல்கிறது (சங்.34:10). நாம் நம் வாயைத் திறந்து நம் தேவைகளை தேவனிடம் கேட்கும்போது, அவர் தம் அபரிதமான ஆசீர்வாதங்களினால் நம்மை நிரப்புகிறார்.  81ஆம் சங்கீதத்தின் கடைசி வசனங்களில், தேவன் தம் ஜனங்களுக்கு தருகிற வாக்குத்தத்தத்தைக் காண்கிறோம்.  நமக்கு வாக்குப்பண்ணின தேவன் உண்மை உள்ளவராக இருக்கிறார். நாம் அவருக்கு செவிகொடுத்துக் கீழ்ப்படியும்போது, அவர் சீக்கிரத்தில் சாத்தானை நம் கால்களின் கீழ் நசுக்கிப் போடுவார். எல்லா ஆசீர்வாதங்களினாலும் நம்மை திருப்தியாக்குவார். நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்னவெனில், தேவன் உண்மையுள்ளவராக இருப்பதை நாம் நினைவுகூர்கிற நேரங்கள் நாம் கீழ்ப்படிதலுள்ள இருதயத்துடன் தேவனுக்கு செவிகொடுக்க நம்மை மறுபடியும் அர்ப்பணிக்கிற நேரங்கள் ஆகும். தேவனுடைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறதற்காக நாம் இதைச் செய்யக் கூடாது. ஏனெனில், அவரே நம் கர்த்தராகிய தேவன், அவரைப் போல வேறு எவருமில்லை.

பயன்பாடு:  நான் தேவனுக்கு எப்பொழுதும் செவிகொடுத்து, அவருக்கு உண்மையுடன் கீழ்ப்படிவேன். அவருடைய கிருபை எனக்குப் போதும். எனக்கு ஒரு குறைவுமில்லை. என் தேவன் என்னை இரட்சித்து தம் ஆசீர்வாதங்களினால் என்னை திருப்தியாக நடத்துகிறார். அவரைத் தவிர வேறெதுவும் எனக்குத் தேவை இல்லை. நான் அவரை அன்பு செய்து, அவருக்காக வாழ்வேன்.

ஜெபம்: என் இரட்சகராகிய தேவனே, என் ஜெபங்கள் அனைத்திற்கும் நீர் உண்மையுடன் பதில் தருவதற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உம் வார்த்தையில் உள்ள சத்தியத்தைக் காண என் கண்களையும், உமக்குச் செவிகொடுக்க என் காதுகளையும், உம்மைத் துதிக்க என் வாயையும் திறந்தருளும். பரிசுத்த ஆவியானவரே, இன்றும் என்றும் தேவனுக்கு உண்மையாக  இருக்க என்னை வழிநடத்தியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 263

No comments: