Saturday, September 4, 2021

கிறிஸ்துவில் நம் சுதந்திரத்தை பயன்படுத்துவதற்கான ஆலோசனை

வாசிக்க: ஏசாயா 5,6; சங்கீதம் 65; 1 கொரிந்தியர் 10

வேத வசனம்1 கொரிந்தியர் 10: 23. எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.
24. ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.

கவனித்தல்: இந்நாட்களில் தனிநபர் சுதந்திரம் மற்றும் தனிநபர் உரிமை குறித்து நாம் அதிகமாக வாசிக்கவும் பேசவும் செய்கிறோம். அனேகர் தங்களுடைய வாழ்க்கை முறை மற்றும் மற்றவர்களிடம் பழகும் விதம் ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கும் எதையும் கேட்க விரும்புகிறதில்லை. ”என் வாழ்க்கை, என் இஷ்டப்படி நான் வாழ்வேன்” என்ற பிரபலமான சொல்லாடலை சொல்லிக்கொண்டு, தங்கள் செயல்களை நியாயப்படுத்த முயற்சி செய்யக் கூடும். கட்டுப்பாடற்ற வாழ்க்கையானது எல்லையில்லாத மகிழ்ச்சியை தருகிறதா? சுயநல விருப்பங்களை திருப்தி செய்ய விரும்புகிற அனேகர் மற்றவர்களை சுரண்டுவதையும்  கேடு விளைவிப்பவர்களாக இருப்பதையும் நாம் காண்கிறோம். அவர்களின் சிற்றின்பத்தைத் தேடும் முயற்சியில் அவர்கள் நிரந்தர மகிழ்ச்சியைப் பெறுவதில்லை. “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு” என்று தங்கள் உரிமை குறித்து கொரிந்து சபையினர் பவுலுக்கு எழுதினர். பாலியல் ஒழுக்கம் மற்றும் விக்கிரகங்களுக்கு படைக்கப்பட்ட உணவை சாப்பிடுதல் போன்றவற்றில் கொரிந்து சபையில் பிரச்சனை காணப்பட்டது. சரீரப்பிரகாரமாக (அவர்கள் உடலால்) செய்கிற செயல்கள் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை பாதிக்காது என அவர்கள் நினைத்திருப்பார்கள். எல்லாவற்றையில் செய்வதற்கான உரிமையை பவுல் முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. ஆனால், கொரிந்து சபையினர் தங்களுடைய உரிமைகளைப் பயன்படுத்துவதில் சில காரியங்களைக் கருத்தில் கொள்ளும்படி பவுல் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

முதலாவதாக, கொரிந்து விசுவாசிகளுக்கு எல்லாவற்றையும் அனுபவிக்க அதிகாரம் உண்டு என்றாலும், ”எல்லாம் தகுதியாயிராது” என்று பவுல் சொல்கிறார் (1 கொரி.6:12; 10:23). தகுதியாயிராத மற்றும் பயனற்ற ஒரு காரியத்தைச் செய்வது அர்த்தமற்றது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள்.  இரண்டாவதாக, எதையும் அனுபவிப்பதற்கான நம் அதிகாரமாது நம்மை அடிமைப்படுத்துவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது என பவுல் எச்சரிக்கிறார் (1 கொரி.6:12). மூன்றாவதாக, ”எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது” என பவுல் கருதினார். கிறிஸ்தவர்களாகிய நாம், கிறிஸ்துவில் நம் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதில் எச்சரிக்கை உள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவனிடம் இருந்து நம்மை விலக்கி வைத்த (பாவ) வலைகளில் மீண்டும் விழுந்து போவதற்காக கிறிஸ்து நம்மை விடுவிக்கவில்லை. நாம் எல்லாவற்றையும், கிறிஸ்தவ வாழ்க்கைக்குத் தகுதியானதா இல்லையா என்பதை நிதானித்துப் பார்க்க வேண்டும். கிறிஸ்தவர்களாக்  நாம் பக்திவிருத்திக்கேதுவாக இராத, பயனற்ற காரியங்களை செய்யக் கூடாது. கடைசியாக, மற்றவர்களுக்குப் பிரயோஜனமானவைகளைத் தேடி நாடும்படி பவுல் கொரிந்து விசுவாசிகளுக்கு ஆலோசனை கூறுகிறார். சுயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையானது கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கைக்கு எதிரானது ஆகும். மற்றவர்களின் நன்மைக்காக வாழ்வதற்கு இயேசு கிறிஸ்துவே நம் முன்மாதிரி ஆவார். நாம் மற்றவர்களின் நலனை நாடும்போது, அது பரஸ்பர மகிழ்ச்சியை உண்டாக்குகிறது. நாம் இந்த உலகத்திற்கு உப்பாகவும் வெளிச்சமாகவும் மாறுகிறோம்.  மற்றவர்களுக்குப் பிரயோஜனமானவைகளை நாம் கவனத்தில் கொண்டு செயல்படும்போது, கிறிஸ்துவின் பிரமாணத்தை நாம் நிறைவேற்றுகிறோம் (கலா.6:2).  சுயநலமான ஒரு வாழ்க்கையானது ஒருபோதும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதில்லை. மற்றவர்களுக்கு நன்மை செய்கிற ஒரு கிறிஸ்தவர் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்து, அன்பும் இரக்கமும் எங்கும் பரவச் செய்கிறார்.

பயன்பாடு: எதுவும் என்னை அடிமைப்படுத்த நான் அனுமதிக்க மாட்டேன். நான் உலக சம்பிரதாயங்கள், நடைமுறைகள் மற்றும் என் சுயநல எண்ணங்களுக்கு அடிமை அல்ல. நான் மற்றவர்களுக்குப் பிரயோஜனமானவைகளைச் செய்வேன். என் நேரத்தையும் சக்தியையும் ஆக்கப்பூர்வமான, பக்திவிடுத்திக்கேதுவான காரியங்களில் நான் செலவிடுவேன். பவுல் சொல்வது போல, ”கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா.2:20).

ஜெபம்: என் தேவனே, கிறிஸ்துவில் எனக்கு இருக்கிற சுதந்திரத்தை மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக நான் பயன்படுத்துவது எப்படி என்பதைக் காண என் கண்களைத் திறந்ததற்காக உமக்கு நன்றி. இயேசுவே, எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்ய எனக்கு உதவியருளும் (வ.31). ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 247

No comments: