Wednesday, December 1, 2021

கடினமான தருணங்களில் ஜெபித்தல்

வாசிக்க: தானியேல் 5,6; சங்கீதம் 149; 1 பேதுரு 5

வேத வசனம்:  தானியேல் 6: 10. தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

கவனித்தல்: வாழ்க்கையில் எல்லாம் நன்றாக இருக்கும்போது, நாம் வழக்கமாக செய்யும் வேலைகளை குறைவின்றி செய்வது எளிதானதாக இருக்கும். ஆயினும், ஒரு பிரச்சனை வரும்போது அப்படி செய்வது சவாலானதாக மாறுகிறது. ஒரு காரியத்தை நாம் தொடர்ந்து செய்யும்போது, அது பழக்கமாக மாறிவிடுகிறது. அதன்பின், அந்த குறிப்பிட்ட காரியத்தை எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் செய்வது எளிதானதாக இருக்கும். தானியேல் 6:10 இல், தானியேலின் வழக்கமான ஜெபப் பழக்கத்தைப் பற்றி நாம் வாசிக்கிறோம். தானியேல் 5:29-30 இல் நாம் வாசிப்பது போல, பாபிலோன்ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரி”யாக தானியேல் இருந்தான். தேசாதிபதிகள் அனைவரும் தானியேலின் நேர்மை மற்றும் வேலையில் உண்மையுள்ளவனாக இருந்ததை அறிந்திருந்தார்கள்.  அவனிடத்திலே அவர்களால் எந்த குற்றத்தையும் கண்டுபிடிக்க இயலவில்லை (வ.4). தானியேல் அந்த சமயத்தில் சுமர் 80 வயது நிறைந்தவனாக இருந்தான் என வேத அறிஞர்கள் கூறுகின்றனர். அப்படியானால், தாவீது சுமார் 65 ஆண்டுகள் பாபிலோனில் வேலை செய்திருக்கிறான். இங்கே தேசாதிபதிகள் தானியேலுக்கு எதிராக அவனை பதவியில் இருந்து அகற்றுவதற்காக அவனைச் சிக்க வைக்க ஒரு அரச சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். நம்மை சிக்கவைப்பதற்காக அல்லது அழிப்பதற்காக ஒரு சட்டம் அமல் செய்யப்பட்டால், நாம் எப்படி நடந்துகொள்வோம்? நாம் நம்மை ஒளித்துக் கொண்டு அல்லது நம் செயல்களை மற்றவர்கள் பார்க்காதபடி மறைத்துக் கொண்டு சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்ளாதபடி இருக்க முயற்சி செய்வோம். தானியேலைப் பொறுத்தவரையில், அந்தப் புதிய சட்டமானது தானியேலின் பக்தியுள்ள ஜெப வாழ்வில் எந்த மாற்றத்தையும் உண்டு பண்ண வில்லை.

அந்த புதிய சட்டத்திற்கு தானியேல் கொடுத்த பதில் என்னவெனில், “தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க,” ஜெபித்தான். அதன் பின்விளைவுகளை அறிந்திருந்த போதிலும், தன் ஜெப வாழ்க்கையை மறைத்து வைக்க அவன் முயற்சி செய்யவில்லை.  அனுதினமும் மூன்றுவேளை முழங்கால் படியிட்டு ஜெபிக்கும் பழக்கத்தை உடையவனாக தானியேல் இருந்தான். தானியேல் ஜெபித்தபோது, அவன் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான் என வாசிக்கிறோம். அதுவே அவனுடைய ஜெப வாழ்வின் இரகசியம். நம்மில் பலர் ஜெபிக்கும்போது, நம் தேவைகளையே சொல்லிச் சொல்லி தேவனிடம் ஜெபிக்கிறோம். நம் வாழ்வில் நாம் சந்திக்கிற பிரச்சனைகளுக்காக நாம் தேவனுக்கு நன்றி சொல்கிறோமா? ஜெபிக்கும் கிறிஸ்தவர்கள் எல்லாவற்றிற்கும் எல்லாவற்றிலும் எப்பொழுதும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவார்கள். ஏனெனில், அவர்கள் தேவனுடைய மாட்சிமையான ஆளுகை அதிகாரத்தை விசுவாசிக்கிறார்கள். தானியேலின் எதிர்கள் தங்கள் திட்டத்தில் வெற்றி பெற்றதாக நினைத்து, தானியேலைக் கொல்ல விரைந்தார்கள்.  ராஜாவாகிய தரியு கூட தானியேலைக் காப்பாற்ற முடியவில்லை. ஆயினும், இந்தக் கதையானது இத்துடன் முடிந்து விடவில்லை.

தானியேலை சிங்கங்களின் வாய்க்கு இரையாகாமல் தேவன் பாதுகாத்தார். அதன்பின் ராஜாவாகிய தரியு தன் ஆளுகையின் கீழ் உள்ள அனைவருக்கும் மாற்றப்பட முடியாத ஒரு சட்டத்தை இயற்றி, ”யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது” என்று உத்தரவு பிறப்பித்தார் (வ.26). தேவன் சூழ்நிலையையும் அந்த 120 தேசாதிபதிகளின் திட்டத்தையும்  மாற்றினார். அவர்கள் அழிந்து போனார்கள். ”தேவன் இன்னமும் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார், நாம் அவருடைய பாதப்படியில் நாம் இருக்கிறோம். அவருக்கும் நமக்கும் இடையில் உள்ள தூரம் முழங்காலளவு தூரமே” என ஜிம் எலியட் என்ற மிஷனெரி கூறுகிறார். நாம் சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் செய்ய வேண்டும் என நம் ஆண்டவராகிஅய் இயேசு நமக்குப் போதித்திருக்கிறார் (லூக்கா 18:1). ”இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” என்று வேதம் நம்மை உற்சாகப்படுத்துகிறது (1தெச.5:17). நம் ஜெபங்கள் வல்லமையுள்ளவையாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. காரியங்கள் மிகவும் மோசமாகும்போது, நாம் ஜெபத்தில் தேவனிடம் சென்று, அவரில் நாம் நம்பிக்கை கண்டு கொள்ளலாம். ஏனெனில், ”அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்” (தானி.6:26).

பயன்பாடு:  என் ஜெபங்களுக்கு பதிலளிக்கிற தேவனை நான் ஆராதிக்கிறேன். அவர் என் தேவைகளையும் என் இருதயத்தையும் அறிந்திருக்கிறார். நான் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போதும் கூட ஜெபிக்கும்படி வேதம் எனக்கு போதிக்கிறது. நான் ஜெபிக்கும்போது, தேவனை சார்ந்து நான் இருப்பதையும், அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் அனைத்தும் இருக்கிறது என்ற என் விசுவாசத்தையும் நான் வெளிப்படுத்துகிறேன்.  சில வேளைகளில் நான் ஜெபித்து முடித்ததும் உடனடி மாற்றங்களை நான் காணாமல் போகலாம். ஆனால் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்கிறதற்கும், எல்லாவற்றிற்கும் தேவனை நம்புவதற்கும் தேவையான வலிமையை ஜெபம் எனக்குத் தருகிறது. அரசாங்கங்கள், ஆட்சியாளர்கள் மாறலாம்; “கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்” (1 பேதுரு 1:25). தேவன் ஒருபோதும் மாறுவதில்லை. தேவனையும் அவருடைய வல்லமையையும் நம்பி, நான் ஜெபத்தில் அவரிடம் சென்று, எல்லாவற்றிற்கும் நான் அவரை ஸ்தோத்தரிக்க முடியும்.

ஜெபம்: அப்பா பிதாவே, என் ஜெபங்கள் எல்லாவற்றிற்கும் பதில் தருகிறதற்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் ஜெப முன்மாதிரியைப் பின்பற்ற எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, என் பலவீனங்களில் எனக்கு உதவி செய்து, “வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு” எனக்காக வேண்டுதல் செய்கிறதற்காக உமக்கு நன்றி. என் தேவனே, என் வாழ்க்கையை உம் கரங்களில் அர்ப்பணிக்கிறேன். உம் விருப்பப்படி, உம் சித்தத்தின்படி எனக்கு செய்தருளும். இயேசுவின் நாமத்தில், ஜெபம் கேளும் நல்ல பிதாவே. ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 332

No comments: