Tuesday, December 21, 2021

சுகமாகத் தங்க பாதுகாப்பான ஒரு இடம்

வாசிக்க: மீகா 3,4; நீதிமொழிகள் 18; வெளிப்படுத்தின விசேஷம் 8

வேத வசனம்: நீதிமொழிகள் 18: 10 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.

கவனித்தல்:  பண்டைய காலங்களில், அரணான பட்டணங்களில் வாழ்ந்தவர்கள் எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து மற்றவர்களைக் காட்டிலும் பாதுகாப்பாக இருந்தார்கள். ஏனெனில், எதிரிகள் முற்றுகை போடும்போது பத்திரமாக இருக்கும்படியாக, உறுதியான மதில் சுவர்கள் மற்றும் சேமிப்பு கிட்டங்கிகள் உள்ளவைகளாக கோட்டைகள் கட்டப்பட்டன. இன்றும் கூட, ஒரு பயங்கர நிகழ்வு அல்லது இய்ற்கைப் பேரழிவு வரும்போது, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஜனங்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடுவார்கள். செல்வந்தர் மற்றும் ஏழைகள், படித்தவர் மற்றும் படிக்காதவர், மற்றும் பாலின, சமுதாய, மற்றும் பொருளாதார வித்தியாசங்கள் எதையும் பொருட்படுத்தாமல், ஒரு பாதிகாப்பான இடத்தில் அவர்கள் தஞ்சமடைவார்கள். நீதிமொழிகள் 18:10 இல், ”கர்த்தரின் நாமம் பலத்த துருகம்” என்று நாம் வாசிக்கிறோம். ”கர்த்தருடைய நாமம்” என்கிற சொற்றொடரானது நீதிமொழிகள் புத்தகத்தில் இந்த ஒரு இடத்தில் மட்டுமே வருகிறது. கர்த்தருடைய நாமம் என்பது கர்த்தரைக் குறிக்கிற ஒன்றாக இருக்கிறது.

கர்த்தருடைய நாமம் என்பது தேவனுடைய தன்மை மற்றும் குணாதிசங்களை வெளிப்படுத்துகிறது. தேவனுடைய பெயரை மோசே கேட்ட போது, ”இருக்கிறவராக இருக்கிறேன்” என்று தேவன் பதில் சொன்னார் (யாத்.3:14-15). இது தேவன் தம் குணாதிசயம், நம்பகத்தன்மை, மற்றும் உண்மையைப் பற்றி சுயமாக வெளிப்படுத்துகிற பெயராக இருக்கிறது. சிருஷ்டிகராகிய தேவன்  மனிதர்களின் தேவைகளைச் சந்திக்கவும், அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் தம் பெயரை அவர் வெளிப்படுத்துகிறார். கர்த்தருடைய நாமத்தை அறிந்து கொள்வது அவருடனான தனிப்பட்ட உறவில் வளருவதற்கு நமக்கு உதவுகிறது. தேவனுடனான நம் உறவானது தொடர்ச்சியான மற்றும் தொடர்ந்து வளருகிற உறவாக, அனுதினமும் அவரைப் பற்றி அதிகமதிகமாக அறிந்து கொள்கிற ஒன்றாக இருக்கிறது. கர்த்தருடைய நாமமானது கர்த்தரைப் போன்றே உறுதியானதாக இருக்கிறது. எல்லா காலத்திலும் நம்பத்தக்கதாக அது இருக்கிறது. தேவையுள்ள நேரங்களில்,  ஆபத்து மற்றும் அவசரக் காலத்தில், நாம் அதை நோக்கி ஓட முடியும். நாம் எவ்வளவு துரிதமாக மற்றும் விரைவாக தேவனை நோக்கி ஓடுகிறோமோ, அவ்வளவு சீக்கிரமாக அவர் நமக்காக செயல்படுகிறார். தன்னிடம் வருகிற அனைவரையும் தேவன் வரவேற்று ஏற்றுக் கொண்டு, தப்புவிக்கிறார். சிலர் தங்களால் சமாளிக்க முடியாத முடியாத பிரச்சனை அல்லது தேவை வரும்போது மட்டுமே தேவனைத் தேடுகின்றனர். நாம் எப்பொழுதும் அவரை நாடி, நம்ப வேண்டும். சில நேரங்களில், புயல்கள், தோல்விகள், பிரச்சனைகள், உறவு சார்ந்த பிரச்சனைகள், வியாதிகள், மற்றும் பயங்கர நிகழ்வுகள் ஆகியவை நம் வாழ்வில் தேவன் இருக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு நினைவுபடுத்துகின்றன.  கர்த்தர் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள் மாறாக எழுந்து நிமிர்ந்து நிற்பார்கள் என சங்கீதம் 20:7-8 நமக்கு நினைவுபடுத்துகிறது. நாம் தேவனை விட்டு விலகி ஓடுகிறோமா? அல்லது தேவனை நோக்கி ஓடுகிறோமா? கர்த்தருடைய நாமத்தை நோக்கி நாம் எப்படி ஓடுகிறோம் என்பதை நம்மை நாமே நிதானித்து அறிவோமாக. உன்னதமானவரின் மறைவில் நாம் தங்கி வாழ்வோமாக. ”கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக” (கொலோ.3:16). ” எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது” (சங்.91:9,10).

பயன்பாடு:  தாவீது பாடுவது போல, “நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார்” (சங்.34:4). என் தேவன் யார் என்பதை கர்த்தருடைய நாமம்  எனக்கு நினைவுபடுத்துகிறது. அவர் எனக்கு யாராக என்னவாக இருக்கிறார் என்பதை நான் அறிந்திருப்பதால் நான் எதற்கும் கவலைப்பட மாட்டேன். ”நானே” என்று சொன்ன மகத்துவமுள்ளவர் எனக்குள் இருக்கிறார். எனக்குத் தேவையான அனைத்தையும் இயேசு எனக்குத் தருகிறார். கிறிஸ்துவுக்குள் நான் புதிய சிருஷ்டியாக இருக்கிறேன். “பழையவைகள் ஒழிந்தன, எல்லாம் புதிதாயின.” நான் கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும். நான் அவருடைய வார்த்தையை அனுதினமும் வாசித்து, விசுவாசித்து, அதற்குக் கீழ்ப்படிய வேண்டும். நான் எவ்வளவு அதிகமாக அடிக்கடி அவரை நோக்கி ஓடுகிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் அவரைப் போல மாறுகிறேன்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, நான் எப்பொழுதும் வந்தடையத் தக்க கன்மலையாக இருப்பதற்காக உமக்கு நன்றி. இயேசுவே, என் பலவீனங்களில் பரிபூரணமாக விளங்குகிற உம் கிருபைக்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, கர்த்தருடைய நாமத்தை நினைவு கூர்ந்து, அதை நோக்கி ஓடவும், எப்பொழுதும் உம் சிறகுகளின் நிழலில் பத்திரமாக இருக்கவும் உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 351

No comments: