Wednesday, December 15, 2021

நான் உன்னை அறிந்திருக்கிறேன்

வாசிக்க: ஆமோஸ் 5-6 நீதிமொழிகள் 12; வெளிப்படுத்தின விசேஷம் 2

வேத வசனம்:  வெளிப்படுத்தல் 2: உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.

கவனித்தல்: நம்மில் பலரும் நம் கிராமங்களில் அல்லது சொந்த ஊரில் அல்லது நாம் வளர்ந்த ஊரில் உள்ள சிறிய தேவாலயம் அல்லது சபை பற்றிய இனிமையான நினைவுகளை உடையவர்களாக இருக்கிறோம். சிறிய சபைகளில் சில விஷயங்கள் தனித்தன்மை வாய்ந்ததாகவும், அருமையானதாகவும் இருக்கிறது; அவைகளை நாம் பல பெரிய பிரமாண்டமான தேவாலயங்களில் காண்பதரிது.  நீங்கள் இதுவரை எந்த சிறிய கிராம அல்லது கிராமப்புறங்களில் உள்ள சபைக்கு நீங்கள் செல்ல வில்லை எனில், கிராம சபையின் ஐக்கியம் மற்றும் அன்பை நேரடியாகப் பெறும்படிக்கு நீங்கள் அதற்கு திட்டமிடலாம். இங்கே, வெளிப்படுத்தல் 2ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற மற்ற சபைகளுடன் ஒப்பிடும்போது, அதிக முக்கியம் இல்லாத சிறிய சபையாக அன்று இருந்த தியத்தீரா சபையின் தூதனுக்கு எழுதும்படி ஆண்டவர் யோவானுக்குக் கூறுகிறார். பண்டைய தியத்தீரா பற்றி அதிக விவரங்கள் நம்மிடம் இல்லை. தியத்தீராவில் உள்ள மக்கள் “சூரியக் கடவுளாகிய தைரிம்னஸ்” ஐ வணங்கி வந்தனர். ஆனால் அங்கு வசித்த விசுவாசிகளோ “தேவ குமாரன்” இயேசுவை ஆராதித்தனர் (வ.18). வெளிப்படுத்தல் புத்தகத்தில் தேவ குமாரன் என்ற பதம் வெளி.2:18ம் வசனத்தில் மட்டுமே வருகிறது என்பது சுவராசியமான தகவல் ஆகும்.

ஒவ்வொரு சபையையும், அதன் கிரியைகள், கடின உழைப்பு, பொறுமை, பாடுகள், வறுமை, அன்பு, மற்றும் விசுவாசத்தைக் குறித்தும் ஆண்டவர் அறிந்திருக்கிறார். 2ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிற மற்ற சபைகளைப் போலல்லாது தியத்தீரா சபையானது சிறியதாக இருந்தாலும், ஆண்டவர் அதைப் பற்றி அறிந்திருக்கிறார். ஒரு தனி நபரின் அல்லது சபையின் அளவு,எண்ணிக்கை, மற்றும் பின்புலம் ஆகியவற்றை தேவன் பார்ப்பதில்லை. தியத்தீரா சபையின் நற்செயல்கள், அன்பு, விசுவாசம், ஊழியம், மற்றும் பொறுமை பற்றி ஆண்டவர் புகழ்ந்து பேசுகிறார். வேறு விதமாகக் கூறுவதானால், அவர்கள் நற்காரியங்களைச் செய்வதற்கும், பரிசுத்த ஆவியின் கனியை உடையவர்களாக இருப்பதற்கும் தங்களை அர்ப்பணித்திருந்தார்கள் (தீத்து 3:8; 14; கலாத்தியர் 5:16). ”நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறது” என்று கூறி ஆண்டவர் மற்றுமொரு பாராட்டை தியத்தீரா சபைக்கு கொடுக்கிறார். இதன் பொருள் என்னவெனில், அவர்கள் தொடர்ந்து தங்கள் ஆவிக்குரிய வாழ்விலும், கிறிஸ்துவில் சாயலில் இருப்பதிலும், கர்த்தருக்காக அவர்கள் செய்யும் காரியங்களிலும் நாளுக்கு நாள் வளர்ந்தார்கள் என்பதைக் குறிக்கிறது. மொத்தத்தில், பலவிதங்களில் தியத்தீரா சபையானது மற்ற சபைகளைக் காட்டிலும் மிகச் சிறந்த சபையாக இருந்தது.  ஆயினும், அதிலும் குறைகள் இல்லாமல் இல்லை. புற மத சடங்குகளையும் பழக்க வழக்கங்களையும் ஏற்றுக் கொள்ளும்படி செய்து பலரையும் தவறாக வழி நடத்தின கள்ள உபதேசத்தைக் குறித்து தியத்தீரா சபையானது சகிப்புத்தன்மையுடன் இருந்ததைப் பற்றி கர்த்தர் கடிந்து கொள்கிறார். அவர்கள் தங்கள் தேவ பக்திக்குரிய அன்பின் நிமித்தம், யேசபேலின் கள்ள உபதேசத்தைக் கவனியாமல் இருந்திருக்கக் கூடும். ஆயினும்,  அந்த கள்ள உபதேசகர்கள் மற்றும் போதகர்களுக்கு உரிய இடம் மற்றும் தண்டனை பற்றி இயேசு தெளிவாகக் கூறி இருக்கிறார். தன் இரண்டாம் வருகையைப் பற்றி தியத்தீரா சபைக்கு நினைவுபடுத்தி, ”உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்” (வ.25) என்று கர்த்தர் சொல்கிறார். ஆண்டவர் நம்மைப்பற்றிய சகலத்தையும் அறிந்திருக்கிறார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஏழு சபைகளில் மிகவும் சிறிய சபையான தியத்தீரா சபையானது கர்த்தரிடம் இருந்து மிக நீண்ட கடிதத்தைப் பெறுகிறது. கிறிஸ்துவிலும், விசுவாசத்தினால் கிருபையிலும் தொடர்ந்து வளர, கர்த்தராகிய இயேசுவை ஆராதிப்பதற்கு கவனமாக இருந்து, தேவ பக்தியற்ற போதனைகள் நம் கிறிஸ்தவ வாழ்க்கையையும் ஐக்கியத்தையும் சீர்குலைத்துப் போட நாம் அனுமதிக்கக் கூடாது.

பயன்பாடு:  மற்றவர்கள் முன்பு நான் சிறிதாக அல்லது எவ்வித முக்கியத்துவமும் இல்லாத ஒருவராக இருந்தாலும், இயேசு என்னைப் பற்றியும் சகலத்தையும் அறிந்திருக்கிறார். கள்ள உபதேசங்களைக் குறித்து எச்சரித்து, தேவபக்தியற்ற, ஒழுக்கக் கேடான, மற்றும் கள்ளப் போதகர்களிடம் இருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள வழிநடத்துதலை இயேசு தருகிறார். இயேசு ஒரு போதும் நம்மால் முடியாத மனிதர்களால் செய்யவே முடியாத காரியங்களைச் செய்யும் படி நமக்குக் கட்டளையிடுவதில்லை. நான் ஜெயம் பெறுகிறவராகவும், என் வாழ்விற்கான தேவ சித்தத்தை செய்து முடிக்கவும் இயேசுவின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்.

ஜெபம்: இயேசுவே, நான் வளருகிற கிறிஸ்தவனாகவும் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்கவும் வேண்டும் என நினைவுபடுத்துவதற்காக உமக்கு நன்றி. அன்பின் தேவனே,  என்னைப் பற்றி அறிந்திருக்கிற உம்மைப் புரிந்து கொள்ள என் செவிகளையும் கண்களையும் திறந்தருளும். பரிசுத்த ஆவியானவரே, உம் ஆவியின் வல்லமையால் ஜெயம் பெற்றவனாக நிற்க எனக்கு உதவியருளும்.  ஆண்டவரே, இன்றும் என்றும் நான் கிறிஸ்துவில் வளரவும், விசுவாசத்தில் நிலைத்திருக்கவும்  எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 345

No comments: