Friday, December 17, 2021

பரலோக ஆராதனை முறைமை

வாசிக்க: ஒபதியா 1; நீதிமொழிகள் 14; வெளிப்படுத்தின விசேஷம் 4

வேத வசனம்:  வெளிப்படுத்தல் 4: 8. அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
9. மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,
10.
இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:
11. கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.

கவனித்தல்: பாரம்பரிய சபைகள் அதன்  ஆராதனை ஒழுங்கு முறைமைகளுக்காக நன்கறியப்பட்டவையாக இருக்கின்றன. பொதுவாக, ஒரு சபையின் குருவானவர் இப்படிப்பட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட ஆராதனைகளை முன்நின்று நடத்துவார்.  இந்த ஆராதனை முறைமைகள் இறையியலின் படி மிகவும் வலிமையானதாகவும், வரலாற்று ரீதியிலான கிறிஸ்தவ விசுவாசத்தை சபைக்கு நினைவுபடுத்துகிறதாகவும் இருக்கிறது. அதிகாரப்பூர்வமாகவோ அல்லது மறைமுகமாகவோ, ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிடினும், விசுவாசிகளை ஆமென் மற்றும் அல்லேலூயா என்று சொல்ல உற்சாகப்படுத்துவதில் இருந்து எழுதப்பட்ட ஆராதனை முறைமைகளை சொல்லவைப்பது வரை,  எல்லா சபைகளுமே தங்களுக்கான ஆராதனை முறைமைகளைப் பின்பற்றுபவைகளாகவே இருக்கின்றன. வெளிப்படுத்தல் 4ஆம் அதிகாரத்தில், பிதாவாகிய தேவனைத் துதிக்கிற மற்றும் சபை ஆராதனை ஒழுங்கு முறைமையில் உள்ள வார்த்தைகளுக்கு ஒத்ததாக இருக்கிற இரு துதிப் பாடல்களை நாம் காண்கிறோம் (வ.8,11).

ஆறு சிறகுகளை உடைய நான்கு ஜீவன்களைப் பற்றிய குறிப்பானது கேருபீன் மற்றும் சேராபீன்கள் பற்றிச் சொல்லப்பட்டவைகளைச் சேர்த்து ஒருங்கிணைந்ததாக இருக்கிறது (ஏசாயா 6:2, எசேக்கியேல் 1:10). ”சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்” என்று அவை இடைவிடாது துதிப் பாடல்களைப் பாடுகின்றன.  பரிசுத்தர் என்று மூன்று முறை திரும்பத் திரும்ப வருவது நம் தேவனின் அளவற்ற பரிசுத்தத்தைப் பற்றி நமக்குக் கூறுகிறது. பிதாவாகிய தேவன், குமாரனாகிய கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவராகிய நம் திரியேக தேவனின் பரிசுத்தத்தை இது நமக்கு நினைவுபடுத்துகிறது. நம் தேவன் பரிசுத்தர் என்று வேதாகமம் மிகவும் அழுத்தமாகக் கூறுகிறது (லேவி.11:44,45). ”இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய” என்பது யாத்திராகமம் 3:14-15 இல் வருகிற தேவனுடைய தெய்வீக பெயரின் விளக்கம் அல்லது விரிவாக்கம் ஆகும். அந்த நான்கு ஜீவன்களும் தேவனைத் துதிக்கும்போதெல்லாம், இருபத்தி நான்கு மூப்பர்களையும் தேவனைத் துதிக்கும்படி அது தூண்டியது. அவர்கள் தேவனுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக அல்லது வணக்கமாய் விழுந்து, அவரை ஆராதித்தார்கள். அந்த நான்கு ஜீவன்களும் தேவனுடைய நித்திய தன்மையைப் பற்றிப் பாடுகையில், மூப்பர்கள் சிருஷ்டிகராகிய தேவனைத் துதிக்கிறார்கள். ஒரு தனித்துவமான முறையில், அந்த நான்கு ஜீவன்களின் துதிப்பாடலுக்கு “ஆமென்” என்று சொல்லி, அவர்களுடன் இணைந்து தேவனை ஆராதிக்கிறார்கள். அவர்கள் தேவன் யார் என்பதை அறிந்திருந்தபடியால், அவர்களுடைய துதியானது இயல்பானதாகவும் தன்னார்வத்துடன் வருவதாகவும் இருக்கிறது.

இங்கு, இடைவிடாத துதியானது இடைவிடாத ஆராதனையை உண்டாக்குகிறது. சிங்காசனத்துக்கு முன்பாக கிரீடங்களை வைப்பதன் மூலம், தங்களுடைய சாதனைகள், வெற்றிகள் ஆகியவை எல்லாம் தேவனிடத்தில் இருந்து வருகிறது என்று மூப்பர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஆகவே, “கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்” என்று சொல்கிறார்கள். நம் தேவன் யார் என்பதை நாம் அறிந்து கொள்ளும்போது, துதியும் ஆராதனையும் நம்மையுமறியாமல் நாம் மனமுவந்து செய்கிற ஒரு செயலாக இருக்கும். நம் உண்மையான ஆராதனையானது  மற்றவர்களிடமும் பரவுகிறதாகவும், அவர்களும் தேவனை ஆராதிக்கும்படி செய்கிறதாகவும் இருக்கிறது.

பயன்பாடு: சர்வ வல்லமையுள்ள தேவன் என் சிருஷ்டிகராகவும் என்னை அன்பு செய்கிறவராகவும் இருக்கிறபடியால் நான் அவரைத் துதித்து ஆராதிக்கிறேன். அவர் பரிசுத்தரும், துதிக்கும் கனத்துக்கும் பாத்திரராகவும் இருக்கிறார். அவரை ஆராதிப்பது என்பது ஒரு பாக்கியமான ஆசீர்வாதம் ஆகும். கர்த்தர் என்னை இரவும் பகலும் பாதுகாத்து வழிநடத்துகிறார். அவர் என்னை ஒருபோதும் மறப்பதில்லை, கைவிடுவதில்லை. நான் அவரை ஆராதிப்பதை மறப்பதெப்படி?

ஜெபம்: பரிசுத்த தேவனே,  ”பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர்” ஒருவருமில்லை. கர்த்தாவே, நீர் எங்கள் துதிக்கும் ஆராதனைக்கும் உரியவராக இருக்கிறீர். உமக்காக பரிசுத்தமாக இருக்கும்படி நான் என்னை உம் முன்பாக அர்ப்பணிக்கிறேன். பிதாவே, பரிசுத்த அலங்காரத்துடனே உம்மை இன்றும் என்றென்றும் தொழுது கொள்ள எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 347

No comments: