Wednesday, December 29, 2021

நான் உன்னுடனே இருக்கிறேன்

வாசிக்க:  சகரியா 3-4; நீதிமொழிகள் 25; வெளிப்படுத்தின விசேஷம் 15

வேத வசனம்:  சகரியா 4: 6 செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
7. பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்.

கவனித்தல்:   புத்தாண்டு ஆராதனைகளில் நாம் அந்த ஆண்டுக்கான தேவனுடைய வாக்குத்தத்தத்தை கேட்க விரும்புகிறோம். நாம் பிரசங்கங்களில் கேட்கிற மற்றும் வாக்குத்தத்த அட்டைகளில் பார்க்கிற பெரும்பாலான வாக்குத்தத்த வசனங்கள்  பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசன புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். அவை தேவனுடைய ஜனங்கள் அல்லது தனிநபர்கள் தேவனிடம் திரும்ப அல்லது நம்புவதற்கு அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக முதலாவதாக சொல்லப்பட்டவைகள் ஆகும். ஒரு வசனம் சொல்லப்பட்ட சூழ்நிலையை வாசித்தறிவது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தேவன் பேசிய வார்த்தைகளின் மூலமாக இன்று நம்முடன் பேச விரும்புவது என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு எப்போதுமே பயனுள்ளதும் அவசியமானதும் ஆகும். இங்கே, தாவீதின் வம்சத்தைச் சேர்ந்த செருபாபேல் சிறையிருப்பில் இருந்து திரும்பி வந்து தேவ ஆலயத்தை மறுபடியும் எடுத்துக் கட்ட ஆரம்பித்தார். ஆனால், யூதர்களின் எதிரிகள் அந்த வேலையை தடுத்து நிறுத்த எல்லா முயற்சிகளையும் செய்தனர். மக்கள் தேவனுடைய ஆலயத்தைக் கட்டுவதற்குப் பதிலாக தங்கள் வீடுகளைக் கட்ட ஆரம்பித்த படியால் இந்த எதிரிகள் சில வெற்றிகளை அடைந்தனர். ஆனால் தேவன் தம் ஜனங்களையும் அவர்களின் தலைவர்களையும் தன் தீர்க்கதரிசிகளான ஆகாய் மற்றும் சகரியா மூலமாக ஆலயத்தை மறுபடியும் கட்டி முடிக்கும்படி உற்சாகப்படுத்தினார். 16 வருடங்களுக்கு முன்பாக மூலைக்கல்லை போட்ட செருபாபேல் தலைக்கல்லையும் கொண்டு வந்து வேலையை செய்து முடிப்பார் என தேவன் வாக்குப்பண்ணினார்.

செருபாபேல் தாவீதின் அரச வம்சத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருக்கு அதிகாரமோ இராணுவமோ இல்லை; அவர் அந்நிய தேச மன்னர்களால் அனுப்பப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட தேசாதிபதிகாக இருந்தான். ஆளுகை செய்கிறதற்கான அவனுடைய வலிமை  மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகவும், மறுபடியும் ஆலயத்தை எடுத்துக் கட்டி முடிக்க  போதிய அளவு உதவுகிறதாகவும் இல்லை. ”பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும்” என்று தேவன் செருபாபேலுக்கு வாக்குத்தத்தம் பண்ணினார். தேவனுடைய ஆவியின் வல்லமையினால், செருபாபேல் தேவனுடைய வேலையை செய்து முடிக்க முடியும். வேலைக்குத் தடையாக இருந்த அனைத்து எதிர்ப்புகளும், அவை உயரமான ஒரு மலையைப் போல பெரிதாக இருந்தாலும், தேவனால் அபிசேகம் செய்யப்பட்டவர்களுக்கு முன்பாக ஒன்றுமில்லாமல் போகும். தேவனுடைய தீர்க்கதரிசிகளான ஆகாய் மற்றும் சகரியாவின் ஊக்கமான வார்த்தைகளினால் எருசலேம் தேவாலய மறுகட்டமைப்புப் பணி துரிதமாக செய்து முடிக்கப்பட்டது. தேவன் நம் வேலையை ஆசீர்வதிக்கும்போது, நாம் தேவனுடைய பலத்தைப் பெறும்போது, நடைபெற சாத்தியமில்லாதவை என்று கருதப்படுகிற அல்லது தாமதமாகிக் கொண்டிருக்கும் வேலைகள் நடைபெறக் கூடியவைகளாக மாறுகின்றன. நாம் தேவனுடைய சித்தத்தில் வாழ்ந்து அவர் செய்ய வேண்டும் என விரும்புகிறவைகளைச் செய்யும்போது, நாம் எதைக் குறித்தும் பயப்படத் தேவையில்லை. டான் மோயன் எனும் ஆராதனை வீரர் பாடுகிறது போல, “வழியே இல்லை என்று தோன்றுகிற இடங்களிலும் தேவன் பாதையை உண்டாக்குவார்.”  ஒரு மலை போன்ற பெரிய தடை முன்பாக நாம் நிற்கும்போது, தேவனை நம்பி, நாம் விசுவாச வார்த்தைகளைப் பேச முடியும்.  நம் முன் இருக்கும் மலைகளை எதிர்கொள்வதற்கான பலத்தை தேவன் நமக்குத் தருகிறார். செருபாபேலுக்கு உதவின அதே தேவன் நாம் அவருடைய சித்தத்தையும் வேலையையும் செய்யும்போது நமக்கும் உதவ முடியும். தேவனை விசுவாசிக்கிறவர்களுக்கு எல்லாம் கூடும். ஏனெனில், “நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று அவர் வாக்குப் பண்ணி இருக்கிறார்.

பயன்பாடு:   தங்களுடைய பலம், அறிவு, சமுதாய நிலைமை, மற்றும் கடின உழைப்பு ஆகியவை எந்த சவாலான வேலையையும் செய்து முடிக்க உதவும் என சிலர் நம்புகின்றனர். அவை எல்லாம் சற்று பலனளிக்கிறவையாக இருக்கின்றன. ஆயினும், “கர்த்தர் கட்டாவிடில்” நம் அனைத்து முயற்சிகளும் வீணாகி விடலாம். செருபாபேலைப் பலப்படுத்தின அதே தேவன் இன்று அவருடைய வேலையைச் செய்து முடிக்க எனக்கு உதவி செய்ய முடியும்.  நான் தேவனுடைய ஆவியின் வல்லமையை விசுவாசித்து, என் வாழ்வில் அவருக்கு சாட்சியாக இருக்க முடியும். தேவன் என்னுடன் இருக்கிறார்.

 ஜெபம்தந்தையாகிய தெய்வமே, உன்னதத்தில் இருந்து நீர் அருளுகிற பலத்துக்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, முடிவு வரை உமக்கு உண்மையாக இருந்து உம் வேலையை செய்து முடிக்க எனக்கு உதவியருளும். ஆமென்.  

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 358

No comments: