Monday, December 6, 2021

தேவனுடனான நம் ஐக்கியம்

வாசிக்க: ஓசியா 1-3; நீதிமொழிகள் 3; 1 யோவான் 1

வேத வசனம்:  1 யோவான் 1: 3. நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.

கவனித்தல்: அனேக வீடுகளில், மக்கள் தாங்கள் சந்தித்த அல்லது தங்கள் வீட்டுக்கு வந்த பிரபலமான தலைவர்கள் அல்லது பிரபலங்களுடன் தாங்கள் எடுத்த புகைப்படங்களை தொங்கவிடப்பட்டிருக்கிறதை நாம் பார்க்க முடியும். அந்த புகைப்படத்தில் இருப்பவருடன் அவர்களுக்கு எந்த தனிப்பட்ட தொடர்பும் கிடையாது என்றாலும் கூட,  பல வருடங்களுக்குப் பின்னும், அந்த புகைப்படம் எடுக்கப்பட்ட நேரத்தைப் பற்றி சொல்லும்போது அவ் அர்கள் முகம் பிரகாசமடைவதைக் காணலாம். யோவான் தன் முதல் நிருபத்தில், கிறிஸ்துவின் பரமேறுதலுக்குப் பின் சுமார் 60 வருடங்கள் கழித்து இயேசு கிறிஸ்துவுடனான தன் தனிப்பட்ட அனுபவம் பற்றி எழுதுகிறார். இயேசுவை நேரில் கண்ட  ஒரு சாட்சியாக, விசுவாசத்தைப் பற்றிய உறுதியான நிச்சயத்துடன் அப்.யோவான் நற்செய்த்தியைப் பிரசங்கித்தார். முதல் மூன்று வசனங்களில் அப்போஸ்தலாகிய யோவான் திரும்பத் திரும்பக் கூறும் வார்த்தைகளைக் கவனித்துப் பாருங்கள். மேலும், ”நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்” என்று யோவான் சொல்லும்போது, இயேசுவைப் பார்த்த, அவர் சொன்னதைக் கேட்ட பல சாட்சிகள் உண்டு என்பதை அது குறிக்கிறது. “நாங்கள் செவிவழிச் செய்தியை, பாரம்பரியத்தில் இருந்து சொல்லப்பட்ட செய்தியையோ, உறுதியான ஆதாரம் எதுவுமற்ற செய்தியையோ பிரசங்கிக்கவில்லை; நாம் எழுதுகிற பேசுகிறவை அனைத்தையும் பற்றிய முழுமையான நிச்சயம் நமக்கு உண்டு” என ஆடம் கிளார்க் விளக்குகிறார். ”தன் தனிப்பட்ட சாட்சியுடன், இயேசுவைப் பற்றிய சுவிசேஷமானது வரலாற்று உண்மை என்பதற்கு யோவான் சாட்சி கூறி, நற்செய்தியை அறிவிப்பதன் நோக்கத்தைப் பற்றி அவர் கூறுகிறார்.  

கிறிஸ்துடனான தம் அனுபவத்தை தன் வாசகர்கள் அனைவரும் பெறமுடியும் என்ற நம்பிக்கையை யோவான் தருகிறார். முதலாவது அதிகாரத்திலேயே, ஐக்கியம் பற்றி யோவான் நான்கு முறைக் குறிப்பிட்டிருக்கிறார். ஐக்கியம் என்பதைக் குறிக்கும் Koinōnia என்ற கிரேக்க வார்த்தையானது கிறிஸ்துவுடனான விசுவாசியின் ஆவிக்குரிய உறவைக் குறிக்கிறது. வேதாகமத்தின்படி, ஐக்கியம் என்பது ஒரு சமுதாயக் கூடுகையை மட்டும் குறிப்பிடுகிற ஒன்று அல்ல; “பொதுவில் இருக்கிறவைகளை பொதுவாக  வைத்து பங்கேற்பது அல்லது இணைதல்” என்பதே இதன் உண்மையான பொருள் ஆகும். ஜான் ஸ்டாட் சொல்வது போல, ”ஐக்கியம் என்பது தேவ கிருபையில், கிறிஸ்துவின் இரட்சிப்பில் மற்றும் ஆவியானவர் இருதயத்தில் தங்கி வாசம் செய்தல் ஆகியவற்றில் பங்குபெறுகிற  எல்லா விசுவாசிகளுக்குமான ஆவிக்குரிய பிறப்புரிமையாக இருக்கிற ஒரு விசேஷமான  ஒரு கிறிஸ்தவ வார்த்தை ஆகும்.” பிதாவோடும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் ஐக்கியம் கொள்ள மக்கள் வரும்படி யோவான் நற்செய்தியைப் பிரசங்கிக்கிறார். யோவான் இந்த நிருபத்தை எழுதியதன் பிரதான நோக்கம் என்னவெனில், தேவனுடனான விசுவாசிகளின் உறவையும் ஐக்கியத்தையும் பற்றிப் பேசுவதாகும் என அனேக அறிஞர்கள் கருதுகின்றனர். ஐக்கியத்தைப் பொறுத்தவரையில், மனிதர்கள் பொதுவாக மற்றவர்களுடனான தங்கள் உறவைப் பற்றி நினைப்பது வழக்கம். மேல் நோக்கிய அல்லது தேவனை நோக்கிய காரியங்களுக்கு உரிய கவனம் கொடுக்கப்படுவதில்லை. தேவனுடன் நமக்கு ஐக்கியம் இல்லை எனில் சக விசுவாசிகளிடையே ஒருபோதும் எந்தவிதமான ஐக்கியமும் இருக்காது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசு கிறிஸ்து ஆகியோருடனான தேவ ஐக்கியத்தில்,  நாம் கிறிஸ்துவின் சாட்சிகளாக மாறுகிறோம். தேவனுடனான ஐக்கியத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் பங்கு பெற்று, அவருடன் தனிப்பட்ட உறவை உடையவர்களாக இருக்க முடியும். கிறிஸ்துவில் நிலைத்திருப்பதினால் மட்டுமே அதிக கனிகளைக் கொடுக்க முடியும் என்பதை நான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் (யோவான் 15:1-5).

பயன்பாடு:  நீங்கள் ”எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்என்று ஆண்டவராகிய இயேசு சொன்னார் (அப்.1:8). நான் பரிசுத்த ஆவியைப் பெறும்போது, தேவனுக்குச் சாட்சியாக மாறுவதற்கான வல்லமையை நான் பெற்றுக் கொள்கிறேன். தேவனுடன் ஐக்கியம் கொள்ளுவது என்பது தேவனால் வல்லமையாகப் பயன்படுத்தப்படுகிற மிகப்பெரிய கிறிஸ்தவ தலைவர்கள், போதகர்கள், மற்றும் தீர்க்கதரிசிகளுக்கு மட்டுமே உரியது அல்ல. நான் தேவனுடன் ஐக்கியம் பாராட்டி, பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் நான் அனுதினமும் தேவனை என் வாழ்வில் ருசிக்க முடியும். தேவனுடனான என் ஐக்கியத்தின் தொடர்ச்சியாகவே நான் மற்ற விசுவாசிகளுடன் ஐக்கியம் பாராட்டுகிறேன்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,உம்முடனும், உம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுடனும் ஐக்கியம் கொள்ள அழைத்த அழைப்பிற்கும் உம் அன்பிற்கும் உமக்கு நன்றி. இயேசுவே, உம்மில் நிலைத்திருக்கவும், சத்தியத்தின் ஒளியின் நடக்கவும் எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவனுடனான என் உறவில் தொடர்ந்து நிலைத்திருக்க மற்றும் தேவனுடன் ஐக்கியப்பட உம்முடைய பலத்தையும், மற்றும் அனுதினமும் தேவனுடன் ஒரு தனிப்பட்ட அனுபவத்தைப் பெறவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 336

No comments: