Friday, December 3, 2021

கிறிஸ்துவின் மகத்துவத்தை நேரில் கண்ட சாட்சிகள்

வாசிக்க: தானியேல் 7,8; சங்கீதம் 150; 2 பேதுரு 1

வேத வசனம்:  2 பேதுரு 1: 16. நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.

கவனித்தல்: அனேகர், குறிப்பாக கடவுள் இல்லை என மறுக்கும் நாத்திகர்கள், மதம் என்பது உண்மைக்குப் புறம்பான ஒரு கட்டுக்கதை என  நினைக்கின்றனர். கிறிஸ்தவமும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்று அவர்கள் சொல்கிறார்கள். தளர்வான கொள்கைகளை உடைய கிறிஸ்தவர்கள் சிலரும் வேதாகம அற்புதங்களை சந்தேகிப்பது வருந்தத்தக்கது ஆகும். இங்கே, விசுவாசிகளுக்கு நினைவுபடுத்த விரும்பியவைகளைக் குறித்து அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகிறார். தான் சீக்கிரத்தில் மரித்துப் போய்விடுவோம் என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே, அவர் சுவிசேஷத்தின் வரலாற்று உண்மைக்கு ஆதாரமாக இரண்டு முக்கியமான கருத்துகளை முன்னிலைப்படுத்தி பேசுகிறார் (2 பேதுரு 1:16-21). பேதுரு தன் விசுவாசமானது ”தந்திரமான கட்டுக்கதைகள்” மீது கட்டப்பட்டது அல்ல என்று சாட்சி பகருகிறார். கிறிஸ்துவின் மகத்துவத்தை கண்ணாரக் கண்டவர்களில் தானும் ஒருவர் என்று அவர் சொல்கிறார். நற்செய்தி சொல்லும் செய்தியானது கற்பனைக் கதையோ அல்லது நம்பமுடியாத கட்டுக்கதையோ அல்ல என்று அவர் கூறுகிறார். இயேசு அனேக அற்புதங்களைச் செய்த போது பேதுரு அவருடன் இருந்தார்; அவர் இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு சாட்சியாக இருந்தார். இயேசுவின் ஊழியம் மற்றும் வாழ்க்கையைப் பார்த்த நேரடி சாட்சிகளில் ஒருவராக பேதுரு இருந்தார். பேதுரு இயேசுவைப் பற்றிய சுவிசேஷத்தைப் பிரசங்கித்த போது, அவர் தான் கண்டதை, கேட்டதை, மற்றும் தன் வாழ்வில் அனுபவித்ததைப் பற்றி பகிர்ந்து கொண்டார். இயேசுவைக் கண்களால் கண்ட நேரடி சாட்சிகள் கிறிஸ்தவ விசுவாசத்தின் வரலாற்றுத் தன்மையை உறுதிப்படுத்துகின்றனர். இயேசுவை விசுவாசிக்க மறுக்கும், கிறிஸ்தவ விசுவாசத்தை மனித கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்டுக்கதை அல்லது கற்பனைக்கதை என்று கருதுபவர்களுக்கு,  நற்செய்திக்கும், கிறிஸ்துவின் வருகைக்கும் ஆதரவான ஒரு வலிமையான சான்றை பேதுரு முன்வைக்கிறார்.

அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே,” என்று பேதுரு சொல்லும்போது, அவர் குறிப்பாக இயேசு மறுரூபமானதைக் குறிப்பிடுகிறார் (மத்.17:1-9; மாற்கு 9:2-7; லூக்கா 9:28-35).  இயேசு மறுரூபமான சம்பவம் தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் மகிமையை வெளிப்படுத்துகிறதாகவும், இயேசுவுடனே மோசேயும் எலியாவும் பேசுகிறவர்களாக காணப்பட்ட சம்பவமாகவும், இயேசு தேவனுக்குப் பிரியமான குமாரன் என்றும், நாம் அவருக்கு செவிகொடுக்க வேண்டும் என்று பரலோகத்தில் இருந்து சொல்லப்பட்ட வார்த்தைகளை சீடர்கள் கேட்ட சம்பவமாகவும் இருந்தது. இயேசு உண்மையில் யார் என்பதை சீடர்கள் புரிந்து கொள்வதற்கு இயேசுவின் மறுரூப அனுபவம் உதவி செய்ததுமன்றி, அவருடைய தெய்வீக மகிமையைப் பற்றிய ஒரு முன்சுவையையும் அவர்களுக்குக் கொடுத்தது.

 அதன் பின், பேதுரு தேவனுடைய வார்த்தையின் சாட்சி, அதன் நம்பகத்தன்மை, மற்றும் தெய்வீக மூலாதாரம் ஆகியவைகளைப் பார்க்க நம் கவனத்தை திருப்புகிறார்.  பேதுரு ஒரு கற்பனை அல்லது கட்டுக்கதையை விசுவாசிக்கவோ அல்லது பிரசங்கிக்கவோ இல்லை. மாறாக, அவர் தான் நேரில் கண்ட சாட்சியாக இருக்கும் சுவிசேஷத்தை விசுவாசித்துப் பிரசங்கித்தார். மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை, சிலுவை மரணம், மற்றும் உயிர்த்தெழுதலில் நிறைவேறுவதால் வேதாகமமானது நற்செய்தியின் உண்மைத் தன்மைக்கு சாட்சி பகருகிறது. கிறிஸ்துவின் மகத்துவமானது அவரையும் தேவனுடைய வார்த்தையையும் விசுவாசித்தவர்கள் மூலமாக பிரகாசித்து ஒளிர்ந்தது. நாம் பரிசுத்த ஆவியைப் பெறும்போது, இயேசுவே தேவனுடைய குமாரன் என்பதைச் சாட்சி பகர்வதற்கான பரலோக வல்லமையை நாமும் பெற்றுக் கொள்கிறோம். நம் மாற்றப்பட்ட வாழ்க்கையானது நம்மைச் சுற்றிலும் இருக்கிறவர்களுக்கு கிறிஸ்துவின் மகத்துவத்தைப் பற்றி சாட்சி பகரும்.

பயன்பாடு:  இயேசுகிறிஸ்துவின் நற்செய்தி என்பது அவருடைய வாழ்க்கை, சிலுவை மரணம், மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிய வரலாற்று உண்மை ஆகும். பேதுரு, இயேசுவின் சீடர்கள், மற்றும் பலர் இயேசுவின் ஊழியத்தையும், அவருடைய அற்புதங்களையும் நேரடியாகப் பார்த்தார்கள். அவர்கள் யாவரும் “தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள்” (லூக்கா 9:43). தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நான் விசுவாசிக்கும்போது, அவர் தேவனுடைய மகிமையையும் நித்திய உண்மையையும் எனக்கு வெளிப்படுத்தி, என் வாழ்க்கையை மாற்றுகிறார். எனக்குள் இருக்கும் கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக எனக்கு இருக்கிறார் (கொலோ.1:27). நான் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றி, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது, நான் கிறிஸ்துவின் மகத்துவத்திற்கு சாட்சியாக இருக்க முடியும். நான் இயேசு கிறிஸ்துவின் மகத்துவத்திற்கு சாட்சி.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, ”கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி”யைப் பார்க்கும்படி நீர் என்னை பலப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் சீடராகவும் மனித வாழ்க்கையை மாற்றும் உம் வல்லமைக்கு சாட்சியாகவும் இருக்கும்படி நீர் என்னை அழைத்ததற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, நீரின்றி என்னால் எதுவும் செய்ய இயலாது; என் இருதயத்தை உம் வல்லமையினாலும் தேவ வார்த்தையினாலும் நிரப்பி, கிறிஸ்துவின் மகத்துவத்திற்கு ஒரு உயிருள்ள சாட்சியாக வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 333

No comments: