Friday, December 31, 2021

நாளைய தினத்தைக் குறித்து நமக்கு என்ன தெரியும்?

வாசிக்க:  சகரியா 7-8; நீதிமொழிகள் 27; வெளிப்படுத்தின விசேஷம் 17

வேத வசனம்:  நீதிமொழிகள் 27: 1. நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.

கவனித்தல்:   இன்றைய வாட்சப் தலைமுறையில், மக்கள் வேகமாக ஒன்றில் இருந்து மற்றொரு காரியத்திற்கு மாறி விடுகிறார்கள். தொழில்நுட்பங்கள் மற்றும் அது தொடர்பான தேவைகள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கின்றன. மக்கள் தங்கள் எதிர்காலத்தைக் குறித்து திட்டமிடும் முறை மிகப்பெரிய அளவில் மாறி இருக்கிறது. மக்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்கள் அல்லது கடந்த கால சாதனைகளின் அடிப்படையில் பெருமை பாராட்டிக் கொள்வதை நாம் காண்கிறோம். எதிர்காலத்தைப் பற்றிய நம் மனிதப் புரிதல் ஒரு எல்லைக்குட்பட்டது என்றாலும், அதைப் பற்றி நமக்கு எவ்வித நிச்சயமும் கிடையாது என்றாலும் கூட, அனேகர் தாங்கள் எதிர்காலத்தில் எப்படி இருப்போம் அல்லது அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி சொல்லி தங்கள் எதிர்காலத்தைப் பற்றி பெருமையாக பேசிக் கொள்கிறார்கள். பரிசுத்த வேதாகமம் எவ்வித பெருமையையும் எதிர்த்து நம்மை எச்சரிக்கிறது. இங்கே அதற்கான காரணம் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது—”ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.” லூக்கா 16ஆம் அதிகாரத்தில், அனேக ஆண்டுகள் நான் உயிர்வாழ்வேன் என்று நினைத்த ஐசுவரியவானாக இருந்த மூடனைப் பற்றி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு உவமையைக் கூறினார்.  அனேகர் இந்த உலகத்தில் நீண்ட காலம் உயிர்வாழ்வோம் என்று நம்பி கொண்டு, அதிகமதிகமாக செல்வங்களையும் உலகப் பொருள்களையும் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறமோ, நாம் பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டும் என இயேசு நமக்கு போதித்திருக்கிறார்.

நாளைய தினத்தைக் குறித்து, மத்தேயு 6:25-34 இல், இயேசு எதற்கும் கவலைப்படவேண்டாம் என உற்சாகப்படுத்துகிறார். வாழ்க்கையின் கவலைகள் நம்மை அழுத்தும்போது, இயேசுவின் வார்த்தைகளையும் தேவன் நம் மேல் வைத்திருக்கிற கரிசனையையும் நாம் நினைத்து வாழ வேண்டும். “என் காலங்கள் உம்முடைய கையில் இருக்கிறது” என்று சங்கீதக்காரனாகிய தாவீது பாடுகிறார்.  நம் எதிர்காலமானது தேவனின் கரங்களில் பாதுகாப்பாக இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுதலுக்கு எதிராக வேதம் போதிக்கிறது என்று சிலர் தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். மாறாக, வேதாகமானது நாம் தாழ்மையாக இருந்து, நம் வாழ்வில் தேவனைச் சார்ந்து நாம் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்த நம்மை உற்சாகப்படுத்துகிறது. ”ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்” (யாக்கோபு 4:13-16) என யாக்கோபு மிகவும் எச்சரிக்கையுடன் பேசுகிறார்.. கிறிஸ்துவில், தேவன் நம் கடந்த கால தோல்விகளை மேற்கொள்ளவும், நமக்காக மிக அழகிய எதிர்காலத்தையும் வாக்குப்பண்ணி இருக்கிறார். பெருமையினால் நாம் அவைகளை சுதந்தரித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார். நாம் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையுடன் இருக்கும்போது, எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு தேவன் தம் கிருபையை தந்து நம்மைப் பெலப்படுத்துகிறார். தேவனை நம்பி, நாம் எதையும் எதிர்கொள்ளமுடியும்.  தேவனை நம்பி, நான் எதையும் எதிர்கொள்ள முடியும். எதிர்காலத்தைக் குறித்த நம் பார்வையை பிசாசு மங்கலாக்க முயற்சி செய்யும்போது, தேவன் ஆட்சி செய்கிறார் என்பதையும் எதிர்காலத்திற்கான திறவுகோல்களை இயேசு கைகளில் வைத்து இருக்கிறார் என்பதையும் பார்க்கும்படி நம் கண்களை தேவன் பிரகாசப்படுத்துகிறார். நம் எதிர்காலத்தைப் பற்றி அனைத்தும்  நமக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.  ஏனெனில் அது வாழ்க்கையின் சுவராசியமான தன்மையை இழந்து போகச் செய்து சலிப்படையச் செய்து விடும். நம் தேவனுடைய கரங்களில்  நாமும் நம் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்பது நாம் நாளைய தினத்தைக் குறித்து நிச்சயமாக அறிந்திருக்கிற ஒரு காரியம் ஆகும்.

பயன்பாடு: எதையாகிலும் குறித்து பெருமை பாராட்டும்படி என் சிந்தனைகள் என்னைத் தூண்டும்போது, நான் தாழ்மையாக இருக்கும்படி தேவனையும் அவருடைய வார்த்தைகளையும் நான் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.  தேவன் மீது என் கவலைகள் அனைத்தையும் நான் வைக்கும்போது, அவர் என்னைக் கருத்தாய் விசாரித்தறிகிறார். நான் என் எதிர்காலத்தைக் குறித்து பேசும்போது, நான் அதைப் பற்றி அறிந்திருக்கிறவைகளை மட்டுமே பேசுவேன். இயேசு அனைத்தையும் அறிந்திருக்கிறார். தேவனுடைய சித்தத்தின்படி  நான் காரியங்களைச் செய்து வாழ்வேன்.

 ஜெபம்: தந்தையாகிய தெய்வமே,   என் எதிர்காலத்திற்காக நீர் தந்திருக்கிற அற்புதமான வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம் வார்த்தைகளை விசுவாசித்து, அதன்படி வாழ என்னைப் பலப்படுத்தியருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவன் பார்க்கிறபடி நான் எல்லாவற்றையும் பார்ப்பதற்கும் தேவ கிருபையில்  தாழ்மையுடன் வாழ்வதற்கும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 360

No comments: