Saturday, December 25, 2021

தேவனுடன் ஒரு தனிப்பட்ட ஒரு உரையாடல்

வாசிக்க: ஆபகூக் 1-3; நீதிமொழிகள் 21; வெளிப்படுத்தின விசேஷம் 11

வேத வசனம்: ஆபகூக் 1: 12. கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை; கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.
13. தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?

கவனித்தல்:  நம் வாழ்க்கையில் நாம் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது அல்லது அநியாயங்களைப் பார்க்கும்போது, “தேவனே, ஏன் இப்படி நடக்கிறது?” என்று அடிக்கடி கேட்கிறோம். அப்படிப்பட்ட தருணங்களில், நாம் தேவனைச் சந்தேகிக்கவோ அல்லது நம்மைச் சுற்றிலும் நடக்கிற அநியாயங்களைக் குறித்து அவரிடம் முறையிடவோ கூடும்.  ஆபகூக் தீர்க்கதரிசி தன் தேசத்தில் அநியாயத்தையும் தேவன் ஏன் எதுவும் செய்யாமல் இருக்கிறார் என்றும் ஆச்சரியமும் அடைகிறார். யூதா மக்களின் பாவங்களைக் குறித்து முறையிடுகையில், தன் ஜனங்களை துன்மார்க்கரான பாபிலோனியர் மூலம் தேவன் தண்டிப்பார் என்ற வரவிருக்கும் தேவ தண்டனையையும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆபகூக் தீர்க்கதரிசன புத்தகத்தில், தேவனுக்கும் ஆபகூக்குக்கும் இடையிலான தனித்தன்மை நிறைந்த ஒரு உரையாடலை நாம் காண்கிறோம். ஆபகூக் தேவனிடம் தன் கேள்விகளை எடுத்துச் சென்று, தேவன் அவைகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார். அவர் தன் கேள்விகளைக் கேட்பதற்குப் பயப்படவில்லை. முதல் அதிகாரத்தில், தனது அனைத்து “ஏன்” என்ற கேள்விகளையும் வெளிப்படுத்துகிறார். அவர் தன் கேள்விகள் அனைத்திற்கும் பதில்களைப் பெறும்படிக்கு எதிர்பார்ப்புடன் தேவனுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் (ஆபகூக் 2:1). இரண்டாவது அதிகாரத்தில், ஆபகூக்கின் கேள்விகளுக்கு தேவன் தரும் பதில்களைக் காண்கிறோம். மூன்றாவது அதிகாரத்தில், ஒரு ஜெபம் மூலமாக, தேவன் மீதான தன் விசுவாசத்தை ஆபகூக் அறிக்கையிட்டு, தேவன் தன் நியாயத்தீர்ப்பை அனுப்புகையில் தான் என்ன செய்வார் என்பதை வெளிப்படுத்துகிறார்.

தேவனுக்கும் ஆபகூக்குக்கும் இடையிலான இந்த உரையாடலில், எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடிய ஆழமான நடைமுறை உண்மைகளை நாம் காண்கிறோம். தேவனைப் பற்றிய கேள்விகள் அல்லது சந்தேகங்கள் நமக்கு வரும்போது, நாம் தேவனிடம் நேரடியாக சென்று, அவரிடத்தில்  இருந்து பதில்களைப் பெற முடியும். ஏனெனில், அவர் நம் தேவன். சரியான நபரிடத்தில் நம் கேள்விகளைக் கேட்பது உரிய பதில்களைப் பெறுவதற்கு அவசியமானதாகும். ஆபகூக்கைப் போலவே, நாமும் தேவனிடம் நம் கேள்விகளையும் சந்தேகங்களையும் கேட்க முடியும். அனேக நேரங்களில், அனேகர் தேவன் பதில் கொடுக்கும் வரைக் காத்திருப்பதில்லை. தேவன் என்ன பதில் சொல்வார் என்பதைக் கவனித்துக் கேட்கும்படி நாம் அவருக்காக காத்திருக்க  வேண்டும் (ஆபகூக் 2:1). தேவன் ஆபகூக்குக்கு பதில் சொன்ன போது, தேவ ஜனங்களுக்கு எதிராக யார் வந்தாலும், “தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்பதை அவர் புரிந்து கொண்டார். அது எனக்கு என்ன நடந்தாலும், “நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்” என்று ஆபகூக் பாட உதவியது (3:18). தேவன் மீதான நம் சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் நாம் அவரை நன்றாக புரிந்து கொள்ளவும், நம் விசுவாசத்தை அதிகரிக்கவும் நமக்கு உதவ முடியும். கேள்வி என்னவெனில், நாம் நம் கேள்விகளை தேவனிடம் எடுத்துச் செல்கிறோமா என்பதுதான்.

பயன்பாடு:   கர்த்தராகிய தேவன் என் தேவனும் என் பரிசுத்தருமானவர். அவர் என்றென்றைக்கும் இருக்கிற நீதியுள்ள தேவன். அநியாயங்கள், வன்முறை, வேதனைகள் மற்றும் பிரச்சனைகள் என்னைச் சுற்றிலும் பெருகும்போது, என் சூழ்நிலைகள் தேவன் இல்லை என்று அவரை நம்ப மறுப்பதற்கு இடம் கொடாமல், என் கேள்விகள் அனைத்தையும் நான் தேவனிடம் கேட்பேன். அவர் என் கேள்விகள் அனைத்திற்கும் பதில்  தந்து என் சந்தேகங்கள் மற்றும் பயங்களைத் தீர்த்து வைப்பார். ”ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார்” (ஆபகூக் 3:19).  ஏனெனில் நான் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறேன் (2 கொரி.5:7).

 ஜெபம்  பரிசுத்தமுள்ள தேவனே, உம் முன்பாக நான் வரும்படி என்னை தகுதிப்படுத்துகிற உம் அன்பிற்காக உமக்கு நன்றி. விசுவாசத்தை துவக்குகிறவரும் அதில் என்னை நிலை நிறுத்துகிறவருமாகிய கர்த்தராகிய இயேசுவே, எல்லா காலத்திலும் நான் என் விசுவாசத்தில் உறுதியாக இருக்க எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, என் பலவீனங்களை ஜெயிக்கவும், விசுவாசத்தினாலே உலகத்தை ஜெயிக்கவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 354

No comments: