Monday, December 13, 2021

ஒரு அன்பின் நினைவூட்டல்

வாசிக்க: ஆமோஸ் 1-2; நீதிமொழிகள் 10; யூதா 1

வேத வசனம்:  யூதா 1: 20. நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி,
21.
தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள்.

கவனித்தல்:  இந்நாட்களில், வேதத்திற்குப் புறம்பான பல அந்நிய நூதனமான போதனைகளைக் குறித்து நாம் கேள்விப்படுகிறோம். உடனடி கவனம் மற்றும் புகழைப் பெற விரும்புகிறவர்கள் தங்கள் தவறான போதனை மற்றும் நடத்தைக்கு ஆதரவாக இருக்கும்படி வேத வசனங்களை திரித்துப் பேசி, அனேகரை வழிவிலகப் பண்ணுகிறார்கள்.  இப்படிப்பட்ட கள்ளப் போதகர்கள் திருச்சபைக்கு புதிதானவர்கள் அல்ல. இப்படிப்பட்ட கள்ளப் போதகர்களுக்கும் அவர்களுடைய போதனைகளுக்கும் எதிராக புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்களின் போதனைகளின் பல எச்சரிக்கைகளை நாம் காண்கிறோம். யூதா நிருபம் ஒரு சிறிய புத்தகமாக இருந்தாலும், தேவனை மறுதலிக்கிற தேவ பக்தியற்ற காமவிகாரிகளுக்கு எதிராக பிரத்யேகமாக எழுதப்பட்ட ஒரு புத்தகம் ஆகும். கள்ளப் போதகர்களின் குணாதிசயங்களை யூதா பட்டியலிட்டு, நாம் எதிர்வினையாற்றாமல் உயிர்ப்புடன் செயல்படவேண்டும் என எச்சரிக்கிறார். ”நீங்களோ பிரியமானவர்களே,” என்று யூதா எழுதும்போது, விசுவாசிகள் தேவ பக்தியற்ற கள்ளப் போதகர்களைப் போல இராமல், அவர்கள் செல்ல வேண்டிய வழி என்ன என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்துகிறார்.  கள்ளப் போதகர்களின் தவறான, தந்திரமான, தேவபக்தியற்ற, மற்றும் ஒழுக்கக் கேடான போதனைகள் மற்றும் அவர்களின் நோக்கங்களைக் குறுத்து விசுவாசிகள் அறிந்திருக்க வேண்டும். அவர்களை நாம் எவ்விதத்திலும் பார்த்து ஆச்சரியப்படவோ அல்லது பின்பற்றவோ கூடாது. நாம் தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில், தேவனுடன் நடப்பதற்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நம்மை வழுவாதபடி காக்கும் தேவனுடைய வல்லமையைப் பற்றி எழுதுவதற்கு முன்பு, அப்போஸ்தலர்களின் போதனையை நினைவு கூரும்படி யூதா விசுவாசிகளை உற்சாகப்படுத்தி, கள்ளப் போதனைகள் மற்றும் உபதேசங்களுக்கு எதிரான அவர்களின் தனிப்பட்ட பொறுப்பை நினைவுபடுத்துகிறார். 20, 21 ஆம் வசனங்களில்,  நமது ஆரோக்கியமான ஆன்மீக வாழ்க்கைக்குத் தேவையான மூன்று முக்கியமான காரியங்களை யூதா நினைவுபடுத்துகிறார். முழு வேதாகமத்திலும் ”பரிசுத்தமான விசுவாசம்” என்ற பதத்தை யூதா மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார். அது ”பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட” விசுவாசம் ஆகும் (வ.3). விசுவாசமில்லாமல், ”விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்,” மேலும், விசுவாசத்திற்காக போராடவும் முடியாது. தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினால் விசுவாசம் வரும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (ரோமர் 10:17).  தேவனுடைய வார்த்தையின் மீது கட்டப்பட்ட விசுவாசத்தில் நாம் வளர வேண்டும்.

பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணுதல்” என்கிற மற்றுமொரு தனித்துவமான பதத்தையும் நாம் யூதா நிருபத்தில் காண்கிறோம்.  கென்னத் வுஸ்ட் என்பவர் சொல்வது போல, நம் ஜெபங்கள் “பரிசுத்த ஆவியின் மண்டலத்தில் (ஆளுகை இருக்கிற இடத்தில்), அவரால் தூண்டப்பட்டு, பலப்படுத்தப்பட்டதாக” இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவிக்குள் ஜெபித்தல் என்பதற்கும் மாம்சத்தில் ஜெபித்தலுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. அதன் பின், ”தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்” கொள்ளுங்கள் என்று யூதா நினைவுபடுத்துகிறார்.  “தேவனுடைய அன்பின் மண்டலத்தில் (அன்பு ஆளுகை செய்யும் இடத்தில்) அல்லது அவருடைய ஆசீர்வாதம் இருக்கிற இடத்தில் நிலைத்து இருப்பதை இது குறிக்கிறது (ரோமர் 5:5; 8:39; 1 யோவான் 4:16)” என ஜான் மெக் ஆர்தர் விளக்குகிறார். யூதாவின் மூன்று அறிவுரைகளும் தேவ பக்தியற்ற கள்ளப் போதகர்களின் குணாதிசயங்களுக்கு எதிரானவைகளாக இருக்கின்றன. இவை, விசுவாசிகள் பரலோக சிந்தை உடையவர்களாக இருக்கவும், இயேசு கிறிஸ்துவின் இரக்க்கத்தைப் பெறக் காத்திருக்கையில் கிறிஸ்துவின் தங்கள் வாழ்வின் அர்த்தம் இன்னதென்று கண்டு கொள்ளவும் உதவுகிறது.

பயன்பாடு:  வேதத்தின்படி நடக்காத தேவ பக்தியற்ற எந்த மனிதனையும் அவருடைய போதனைகளையும் நான் பின்பற்ற மாட்டேன்.  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்கு முரண்படுகிற எந்த போதனைக்கும் எதிராக நான் எச்சரிக்கையுடன் இருப்பேன். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தை அறிந்து புரிந்து கொள்ள தேவனுடைய வார்த்தையானது எனக்கு உதவுகிறது. நான் விசுவாசித்து நடக்கிறேன்.  நான் பரிசுத்த ஆவியால் நிரம்பிய, இயக்கப்படுகிற  தேவனுக்கேற்றவைகளை விரும்புகிற ஒரு வாழ்க்கையை தொடர்ந்து வாழ்வேன். தேவ ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படி ஜெபிக்கும்படி என்னைத் தூண்டி வழிநடத்துகிறார். என் ஜெபங்கள் தேவ ஆவியினால் கட்டுப்படுத்தவைகளாக இருக்க வேண்டும். நான் கிறிஸ்துவிலும் கிறிஸ்துவின் அன்பிலும் நிலைத்திருக்கிறேன். அவருடைய வார்த்தைகள் என் இருதயத்தில் இருக்கின்றன. தேவ அன்பு மற்றும் அவருடைய ஆவியினால் நிரப்பட்டிருக்கிற நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரக்கத்தைப் பெற காத்திருக்கையில் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வாழ்க்கையை வாழ வேண்டும்.  

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, உம் சத்தியத்தைப் பற்றிய அன்பின் நினைவூட்டலுக்காக உமக்கு நன்றி; ”உம்முடைய வசனமே சத்தியம்.”  இயேசுவே, என்னைப் பரிசுத்தப்படுத்தும் உம் அன்பிற்காக உமக்கு நன்றி. கர்த்தாவே, உம் ஆவியில் நிரப்பப்படவும், பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணவும் எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, தேவனுக்குக் கீழ்ப்படியவும், கிறிஸ்துவில் நிலைத்திருக்கவும், தேவ அன்பிலும் பரிசுத்த விசுவாசத்திலும் என்றென்றும் வளரவும் உம் வல்லமையைத் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 343

No comments: