Saturday, December 18, 2021

அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவருக்கு ஒரு புதுப் பாடல்

வாசிக்க: யோனா 1,2; நீதிமொழிகள் 15; வெளிப்படுத்தின விசேஷம் 5

வேத வசனம்:  வெளிப்படுத்தல் 5: 9. தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
10.
எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.

கவனித்தல்:  சங்கீதப் புஸ்தகத்தில் தேவனுடைய விடுதலை மற்றும் இரட்சிப்பைப் புகழ்ந்து புதிய பாடலைப் பாடுதல் என்பது நன்கறியப்பட்ட ஒரு கருப்பொருள் ஆகும். ஒருவராலும் உடைக்கமுடியாது என்று கருதப்பட்ட முத்திரையை உடைத்து புஸ்தகத்தினுள் இருப்பதை ”யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர்” உடைத்து திறந்து பார்க்க முடியும் என்பதை யோவான் கேட்ட பின்பு, நான்கு ஜீவன்களும் இருபத்தி நான்கு மூப்பர்களும் ஒரு புதிய பாடலைப் பாடியதை யோவான் கண்டார். அந்தப் புதியப் பாடலில், அவர்கள் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தையும், எல்லா மனிதர்களையும் மீட்பதற்காக சிலுவையில் அவர் செலுத்திய விலையையும் அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். இயேசுவின் மனு அவதாரத்தின் நோக்கம் என்னவெனில், அனேகரை மீட்கும் பொருளாக அவர் தம் ஜீவனைக் கொடுப்பதாகும் (மாற்கு 10:45).  ஒவ்வொரு விசுவாசியும் பாடும் புதிய பாடலின் கருப்பொருள் கிறிஸ்து அருளும் மீட்பே. சுவிசேஷத்தின் முக்கியமான போதனையும் இது தான்.  ”குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே” நாம் மீட்கப்பட்டோம் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு சொல்கிறார் (1 பேதுரு 1:18,19).”சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து” இயேசு ஜனங்களை இரட்சிக்கிறார்.

அவர்கள் மனித குலத்தின் இரட்சிப்புக்காக இயேசு செய்தவைகளைப் பற்றி மட்டும் பாடவில்லை, கிறிஸ்துவில் தங்களுடைய புதிய அடையாளத்தைப் பற்றியும், பூமி மீதான தங்களுடைய அதிகாரத்தையும் குறிப்பிட்டுப் பாடினார்கள். 10வது வசனமானது யோவான் இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் சொன்னதை உறுதிப்படுத்துகிறது. பிதாவாகிய தேவனுக்கு முன்பாக ஊழியம் செய்யும்படி நாம் ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கப்பட்டிருக்கிறோம் (வெளி.1:6). நம் பாடல்கள் மூலமாக நாம் தேவனைத் துதிக்கும்போது, அவர் நமக்கு என்ன செய்தார் என்பதையும், அவருக்குள் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதையும் நினைவு கூர்ந்து பாடுகிறோம். இந்தப் புதியப் பாடலின் பொருளை ரோட்னி ரீவ்ஸ் என்பவர் பின்வருமாறு ரத்தினச் சுருக்கமாகக் கூறுகிறார்: “அவருடைய கர்த்தத்துவம் நம் சீடத்துவத்தை வெளிப்படுத்துகிறது. அவருடைய ராஜ்ஜியத்தில் நாம் ஆசாரியர்கள். அவருடைய தியாக பலி நமக்கானது. அவர் உலகத்தை ஜெயித்தது போலவே, சகல சிருஷ்டிகளையும் பரலோக நோக்கத்திற்காக மீட்பைப் பெற (இரட்சிப்புக்குள்) வழிநடத்தி, நாமும் இந்த உலகத்தை ஜெயிக்கிறோம்.”

வெளிப்படுத்தல் 5ஆம் அதிகாரத்தில் நாம் தேவ ஆட்டுக்குட்டியானவரைப் பற்றிய கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெருகுகிற துதியைப் பார்க்கிறோம். முதலாவதாக,  நான்கு ஜீவன்களுடன் சேர்ந்து மூப்பர்கள் பாடினர். பின்பு, திரளான தூதர்களின் மத்தியில் அவர்கள் பாடினர் (வ.12).  இறுதியில், சகல சிருஷ்டிகளும்  பிதாவாகிய தேவனையும் குமாரனாகிய் கிறிஸ்துவையும் புகழ்ந்து பாடுவதை நாம் காண்கிறோம் (வ.13). தேவன் தம் அன்பையும், சகல மனிதரையும் இரட்சிப்பதற்கான தம் சித்தத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார் (யோவான் 3:16; 1 தீமோ.2:4). ”இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்” என்பதும் ”பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்” என்பதும் ஒரு தீர்க்கதரிசனம், வாக்குத்தத்தம் மற்றும் நம் நம்பிக்கையும் ஆகும் (ஏசாயா.45:23; ரோமர்.14:11; பிலிப்பியர் 2:10,11). இதுவே நம் வாஞ்சையும் ஜெபமும் ஆகும். இதில் நம் அனைவருக்கும் ஒரு பங்கும் பொறுப்பும் இருக்கிறது.

பயன்பாடு: ஒருவரும் செலுத்த முடியாத விலையை இயேசு கிறிஸ்து என் இரட்சிப்புக்காக செலுத்தி இருக்கிறார். நான் தேவனால் விலைகொடுத்து வாங்கப்பட்டவன். நான் எனக்கு சொந்தமானவனல்ல; கிறிஸ்துவுக்கு சொந்தமானவன்.  நான் தேவனை என் வாழ்க்கையில் உயர்த்தி, அவருக்காக வாழ வேண்டும். அவர் சகல துதிக்கும் ஸ்தோத்திரத்துக்கும் பாத்திரர் ஆக இருக்கிறார்.  இயேசுவே ஆண்டவர் என சாட்சி பகர, அறிவிக்க தேவ ஆவியானவர் எனக்கு பலத்தைத் தருகிறார்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, என் வாயில் நீர் அருளும் புதிய துதிப் பாடலுக்காக உமக்கு நன்றி. தேவ ஆட்டுக் குட்டியானவராகிய இயேசுவே, என்னை மீட்பதற்கு நீர் உம்மையே தியாக பலியாக கொடுத்தீரே, உமக்கு நன்றி.  பரிசுத்த ஆவியானவரே, விசுவாசத்தில் வாழவும், என் சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவுக்கு சாட்சி பகரவும் எனக்கு உதவியருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 348

No comments: