Tuesday, December 28, 2021

எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க ஒரு அழைப்பு

– நம் இருதயத்திற்கு தேவையான ஒரு செய்தி

வாசிக்க:  சகரியா 1-2; நீதிமொழிகள் 24; வெளிப்படுத்தின விசேஷம் 14

வேத வசனம்:  நீதிமொழிகள் 24: 32. அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன்.
33. இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
34.
உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.

கவனித்தல்:  முந்தின தலைமுறைகளைப் போலல்லாது, கிடைக்கக்  கூடிய தொழில்நுட்பங்கள், மற்றும் நம் வேலையை எளிதாக்கும் புது கருவிகள் நிமித்தம் மனித வாழ்க்கையானது எளிதானதாக மாறி இருக்கிறது. ஒரு இடத்தில் இருந்து நகராமலேயே நாம் பல காரியங்களை இப்போது செய்ய முடியும். ஆயினும், இதனால் வரும் தீய விளைவு என்னவெனில், இது பல சரீர சுகம் சார்ந்த பிரச்சனைகளை நம் வாழ்வில் கொண்டு வருகிறது. அதிக உடல் உழைப்பு இல்லாமல், இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேலை அல்லது காரியங்களைச் செய்ய விரும்புதல் என்பது சோம்பேறித்தனம் ஆகும். உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டின் படி, “இருந்த இடத்தில் இருந்து கொண்டே வேலை செய்தல் என்பது நான்காவது பெரிய உலகளாவிய பிரச்சனையாக மனிதர்களைக் கொல்லும் ஆட்கொல்லியாக மாறிக் கொண்டு வருகிறது. இது போன்ற சூழ்நிலை இனியும் தொடரக் கூடாது என பல புள்ளிவிவரக் குறிப்புகள் நம்மை எச்சரிக்கின்றன. இங்கு நீதிமொழிகள் 24:32-34 இல், சோம்பேறியின் இடத்தைப் பார்த்து சாலமோன் தான் கண்ட மற்றும் கற்றுக் கொண்டவைகளை பற்றி கூறுகிறார்.

நம் சரீரத்தின் அனைத்து புலன்களும் புதிய மற்றும் பயனுள்ள காரியங்களைக் கற்றுக் கொள்வதற்கு எப்பொழுதும் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என அறிஞர்கள் கூறுகிறார்கள். நூலாசிரியர் இப்பொழுதுதான் முறையான பராமரிப்பு இல்லாமல், களைகளும் முட்செடிகளும் நிரம்பிய ஒரு சோம்பேறியின் திராட்சைத் தோட்டத்தை இப்பொழுது தான் பார்த்திருக்கிறார். அதன் பின்னர், அது எப்படி நடந்திருக்கும் என்பதை பகுப்பாய்வு செய்து, சாக்கு சொல்லி படுக்கையை விட்டு வெளியேறவோ அல்லது எதையும் செய்யவோ மறுக்கும் வழக்கமான சோம்பேறியின் படத்தைக் காட்டுகிறார். நீதிமொழிகள் 24:32-34 இந்த வேதபகுதியானது நீதிமொழிகள் 6:10-11 இல் உள்ளதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை ஒத்திருக்கிறது. எவரும் சோம்பேறி ஆக விரும்புவதில்லை. ஆனால் எல்லா சோம்பேறித்தனமும் வேறொரு நாளில் செய்யலாம் என்று ஒத்திப் போடுவதில் அல்லது தள்ளி வைப்பதில் இருந்து துவங்குகிறது. ஒரு சோம்பேறியானவன் தன் படுக்கையில் இருந்து கீழே இறங்காமலேயே எல்லா காரியங்களையும் செய்ய முடியும் என்று நம்புகிறார் (நீதி.6:9; 26:14). சோம்பேறித்தனத்திற்கு கிடைக்கும் பரிசு வறுமையும் இல்லாமையுமே என நீதிமொழிகளின் ஆசிரியர் கூறுகிறார்.  வேறுவிதமாகக் கூறுவதானால், சோம்பேறி தன் சோம்பேறித்தனத்தினால் எதையுமே சம்பாதிப்பதில்லை. மாறாக, அவர் தீமைகளை உண்டாக்கும் பின்விளைவுகளைப் பெறுவார்கள். ஆனால், கடினமாக உழைப்பவர்களோ திருப்தி அடைகிறார்கள் (நீதி.12:11). ஒரு சோம்பேறியானவன் எறும்பினிடத்தில் இருந்து கூட கற்றுக் கொள்ள முடியும் என்றும் அவைகளைப் போல சுறுசுறுப்பாக ஞானத்துடன் இருக்க வேண்டும் என்பதை நீதி.6:6 குறிப்பிடுகிறது (நீதி.6:6). நாம் நம் சரீர மற்றும் ஆன்மீகத் தேவைகளை முறையாக கவனிக்காமல் அசட்டை செய்தால், நாம் அவைகளில் எந்தக் கனியையும் காண முடியாது. கோடைகாலத்தில் சேர்க்கிற ஞானமுள்ள மகனைப் போல நாமும் ஞானமுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒரு செடிக்கு தொடர்ச்சியான பராமரிப்பு மற்றும் கவனிப்பு தேவைப்படுவது போல, நம் ஆவிக்குரிய வாழ்க்கை நாம் கர்த்தரிடத்தில் உறுதியாக இருக்கவும், அவரில் வளரவும் நம் கவனம் தேவைப்படுகிறதாக இருக்கிறது. நம் சரீர மற்றும் ஆவிக்குரிய புத்துணர்ச்சி நம் அனுதின செயல்பாடுகளில் வெளிப்படுகிறது. நாம் தேவனை, அவருடைய வார்த்தையை, மற்றும் பரிசுத்த ஆவியானவரை அசட்டை செய்யக் கூடாது. நாம் அதிக கனிதருகிறவர்களாக இருக்க வேண்டுமெனில், நாம் கிறிஸ்துவில் நிலைத்திருக்க வேண்டும். நாம் அதிக கனி கொடுக்கும்படி அவர் உரமிட்டு, சுத்திகரித்து, தேவனுடைய மகிமைக்காக அதிக கனிகொடுக்கச் செய்கிறார். நாம் தேவனுடனான நம் உறவு மற்றும் ஐக்கியத்தையும், ஆன்மீக வாழ்க்கையையும் ஒருபோதும் அசட்டை செய்யக் கூடாது.

பயன்பாடு: நான் என் வாழ்வில் சோம்பேறியாக இருக்கக் கூடாது. நான் என் சரீரத்திற்கும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் உரிய கவனத்தை தொடர்ந்து கொடுக்க வேண்டும். நான் என் ஆவிக்குரிய மற்றும் சரீர வாழ்க்கையை உயிர்ப்புடனும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். என் சரீர ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையானவைகளைச் செய்கிற என் பொறுப்பை நான் தட்டிக் கழிக்க கூடாது.  நான் வேதாகமத்தை வாசித்து, இயேசுவுடனான என் உறவை உறுதியானதாகவும்,  தொடர்ந்து ஜெபிக்கவும், அவரில் நிலைத்திருந்து, அவரைப் போல நான் வாழ வேண்டும்.

ஜெபம் தந்தையாகிய தெய்வமே, நான் உம்மைப் பற்றி விசுவாசிக்கிறவைகளை கைக்கொள்கிற வாழ்க்கையை வாழவும் செயல்படும் கிறிஸ்தவனாகவும் இருக்க எனக்கு உதவியருளும். என் வாழ்க்கை மிகவும் குறுகியது மற்றும் இயேசுவின் வருகை சமீபம் என்பதை உணர்ந்து, எல்லா மக்களும் தேவனை அறிந்து கொள்ளும்படி எல்லா மனிதரின் இரட்சிப்புக்காக நான் ஜெபிக்கிறேன். பரிசுத்த ஆவியானவரே, உண்மையுள்ளவனாகவும், சுறுசுறுப்பான கிறிஸ்தவனாக எப்பொழுதும் இருக்க பலம் தாரும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 357

No comments: