Thursday, December 30, 2021

பரிசுத்த வேதாகமம் கூறும் ஒரு வாழ்க்கைப் பாடம்

வாசிக்க:  சகரியா 5-6; நீதிமொழிகள் 26; வெளிப்படுத்தின விசேஷம் 16

வேத வசனம்:  நீதிமொழிகள் 26: 27. படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.

கவனித்தல்:  போட்டி நிறைந்த நம் நவீன சமுதாயத்தில், சிலர் தங்களுடைய நோக்கம் அல்லது இலக்குகளை அடைந்து தீர எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். சில நேரங்களில், மற்றவர்களை ஏமாற்றுவதில் சிறந்தவர்கள் அல்லது மற்றவர்களை வீழ்த்தி மேலே வருகிறவர்கள் வெற்றிகரமானவர்கள் என்று கருதப்படுவது நம்மை வேதனைப்படுத்துகிறது. இந்த உலகம் நல்லவர்களுக்கானது அல்ல என்று பலரும் சொல்வதை நாம் கேட்கிறோம். இங்கே, விலங்குகளைப் பிடிப்பதற்காக வேடர்கள் தோண்டி வைக்கும் குழியில் அவர்களே விழுந்து மாட்டிக் கொள்வதை ஒரு உருவகமாக ஆசிரியர் பயன்படுத்துகிறார். சாலமோன் தன் தந்தை தாவீதின் ஜெபத்தில் உள்ள வார்த்தைகளை நினைவுகூர்ந்து இதை எழுதி இருக்கலாம் (சங்.7:16,17).

நாம் மற்றவர்களுக்கு செய்வதுதான் நமக்கும் செய்யப்படுகிறது என்பது ஒரு பொதுவான கோட்பாடு ஆகும்.  ”மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்று அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறார் (கலா.6:7). மற்றவர்களுக்கு தீமை செய்ய நினைத்து தாங்களே அவைகளில் மாட்டிக் கொண்டவர்கள் பற்றிய உண்மையில் நடந்த வாழ்க்கைச் சம்பவங்கள் ஏராளமானவைகளைப் பற்றி  நாம் கூற முடியும். தீமையான திட்டங்களைத் தீட்டி அதில் மாட்டிக் கொண்டவர்கள் பற்றி வேதாகமத்திலும் நாம் வாசிக்கிறோம். தங்களுடைய தீய திட்டங்களில் மாட்டிக் கொண்டவர்கள் பற்றி வேதாகமமும் நமக்குக் கூறுகிறது.  மொர்தெகாய்க்கு ஆமான் தயார் செய்து வைத்திருந்த அதே தூக்கு மரத்தில் அவன்  மரித்ததும், சிங்கங்களால் கொல்லப்பட்ட தானியேலின் எதிரிகள் பற்றிய கதையும் நமக்கு மிகவும் பரிச்சயமானவை ஆகும்.  மற்றவர்களுக்கு தீமை செய்ய நினைக்கிற மனிதர்கள் அவர்களே தங்களுடைய தீய திட்டங்களில் சிக்கி அழிவது போல, மற்றவர்களை ஆசீர்வதிக்கிற ஒருவர் ஆசீர்வதிக்கப்படுவார். ”ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்” என்று நம் ஆண்டவர் இயேசு நமக்கு போதித்திருக்கிறார் (மத்.7:12).  மற்றவர்களை அன்பு செய்வதில், மன்னிப்பதில் மற்றும் கொடுத்தலில், நம் பிதாவாகிய தேவனைப் போல நாம் தாராளமானவர்களாகவும், பாரபட்சமற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என இயேசு நமக்குக் கூறுகிறார் (லூக்கா 6:36). நம் வாழ்க்கையில் சாதிக்க அல்லது முன்னேற நாம் உலகப்பிரகாரமான திட்டங்கள் எதையும் பின்பற்றக் கூடாது. நாம் கிறிஸ்துவின் முன்மாதிரியைக் கண்டு, அவரைப் பின்பற்ற வேண்டும்.  உலகப்பிரகாரமான திட்டங்கள் கவலைகளையும் பிரச்சனைகளையுமே தருகின்றன, நிலையான வெற்றியைத் தருவதில்லை. இயேசுவோ, இந்த உலகம் தருகிற பிரகாரம் நமக்குத் தருவதில்லை (யோவான் 14:27). கிறிஸ்து நித்திய மகிழ்ச்சியையும் தம் சமாதானத்தையும் நமக்குத் தருகிறார். கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுகிறிஸ்துவை எவ்விதத்திலும் பின்பற்றி, எப்பொழுதும் அவரில் நிலைத்திருக்க அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் தேவனுடைய அன்பின் பிரமாணத்தை நினைவு கூர்ந்து, அனைவரும் வாழ்வதற்கு ஏற்ற ஒரு சிறந்த இடமாக  நம் உலகத்தை மாற்றுவோம்.

பயன்பாடு:  வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான உலகப் பிரகாரமான கோட்பாடுகள் தேவனுடைய சட்டங்களுக்கு நேர் எதிரானவை. உலகப் பிரகாரமான திட்டங்கள் தற்காலிகமான வெற்றிகளைத் தரக் கூடும். ஆனால் அவைகளில் நிலைத்திருப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். ஆனால் இயேசுவோ நித்திய வாழ்வையும் வெற்றியையும் தருகிறார். நான் எப்பொழுதும் இயேசுவைப் பின்பற்றி அவரில்   நிலைத்திருப்பேன். கிறிஸ்துவின் வார்த்தைகளையும் போதனைகளையும் பரிசுத்த ஆவியானவர் எனக்கு நினைவுபடுத்தி, அவைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு பலத்தைத் தருகிறார். வாழ்க்கையைப் பற்றிய தேவனின் பாடமே எனக்குச் சிறந்தது ஆகும்.

 ஜெபம்நல்ல தேவனே, என் மீது பெருகுகிற உம் எல்லா அன்பு மற்றும் இரக்கங்களுக்காக உமக்கு நன்றி. இயேசுவே, உம்மைப் போல இருக்கவும், எப்பொழுதும் எல்லா இடங்களிலும் உம்மைப் பின்பற்றவும் எனக்கு உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, தீமையை நன்மையினால் வெல்ல எனக்கு உதவும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 359

No comments: