வாசிக்க: எரேமியா 49,50; சங்கீதம் 119:89-176; 2 தீமோத்தேயு 1
வேத வசனம்: 2 தீமோத்தேயு 1: 9. அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
கவனித்தல்: இரட்சிப்பைப் பற்றிய கொள்கை எல்லா மதங்களிலுமே
இருக்கிறது. கடவுள் நம்பிக்கைக்கு எதிரான பவுத்த மதம் உட்பட, பெரும்பாலான மதங்கள்
ஒருவர் தன் ஆன்மீக வாழ்வின் இறுதியில் அல்லது மரணத்திற்குப் பின்பு அவர் செய்த செயல்கள்/கர்மா
அடிப்படையில் இரட்சிப்பை அடைவார் என போதிக்கின்றன. இரட்சிப்பைப் பற்றிய புரிதலானது
மதத்திற்கு மதம் வேறுபடுகிறது. இரட்சிப்பைப்
பற்றிய கிறிஸ்தவ கண்ணோட்டமானது மற்ற எல்லா மதஙகளில் இருந்தும் வேறுபட்டது ஆகும். நாம் உயிரோடிருக்கும்போதே நம் ஆவிக்குரிய வாழ்க்கையானது
நம் இரட்சிப்பின் அனுபவத்துடன் ஒரு தொடக்கத்தைக் காண்கிறது. நம் இரட்சிப்பு தேவனுடைய ஈவு என்று வேதம் போதிக்கிறது.
நாம் தேவனுடைய கிருபையினாலேயே இரட்சிக்கப்படுகிறோமேயன்றி, நம் தகுதியினாலேயோ அல்லது
நம் கிரியைகளின் அடிப்படையிலோ இரட்சிப்படைவதில்லை. ”தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த
அன்பினாலே, அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக்
கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே
இரட்சிக்கப்பட்டீர்கள்” என்று எபேசியர் 2:4-5 இல் பவுல் கூறுகிறார். நம் இரட்சிப்பு
என்பது கிறிஸ்துவுடன் வாழ்கிற அனுபவம் ஆகும்.
தேவனே முதலாவது நம்மைக் கண்டு, நம்மை இரட்சித்தார்.
அவருடைய அன்பின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து, நாம் நன் அனுதின ஆழ்வில் அவருடைய இரட்சிப்பை
பெற்றனுபவிக்கிறோம். தேவன் நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைத்திருக்கிறார். நாம்
நம் இரட்சிப்பைப் பெற்ற பின்பு, நம் வாழ்க்கை முன்பு போல இருப்பதில்லை/ இருக்கக் கூடாது.
தேவனுடைய அழைப்பிற்கு ஒரு நோக்கம் உண்டு. நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று
அவர் விரும்பி, பரிசுத்தமான வாழ்க்கையை வாழ அவர் அழைக்கிறார் (எபே.1:4; 1 தெச.4:7).
தேவன் எப்பொழுதுமே பலவீனமான மனிதரைத் தேர்ந்தெடுத்து, அவர்களை கிறிஸ்துவில் பலப்படுத்தி
அவருக்காக பரிசுத்தமாக வாழப் பண்ணுகிறார். இது தேவனுடைய ஈவு ஆகும். ”இரட்சிப்பைப்
பெறுவதற்கு தகுதியான மனிதர்களை தேவனுடைய கிருபை கண்டுபிடிப்பதில்லை, மாறாக அது அவர்களை
தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறது” என பரிசுத்த அகஸ்டின் சொல்கிறார். “நாம் செய்த நீதியின்
கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்” (தீத்து 3:5). நாம் முதல்முறை கிறிஸ்தவரான
போது, நாம் தேவனுடைய கிருபையைப் பெற்றுக் கொண்டோம் என நாம் நினைக்கிறோம். ஆனால் ”உலகத்தோற்றத்துக்கு முன்னே” தேவன் நமக்கு கிருபையை கிடைக்கக் கூடியதாக
மாற்றி இருக்கிறார் (3பே.1:4; 1பேதுரு 1:20). தேவனுடைய அறிவு நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது
ஆகும். தேவனுடைய இரட்சிப்பின் செயலுக்கு தேவன்
நம் மீது கொண்ட அன்பை மட்டுமே காரணம் என்று சொல்ல முடியும். நான் தற்செயலாகவோ அல்லது
ஏதோ விபத்தில் கிறிஸ்தவராக வில்லை. நாம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். அவர்
நமக்கு கிருபையைத் தருவதற்கு ஒரு நோக்கம் உண்டு. பரிசுத்தமாக வாழ்வதே அவருடைய நோக்கம்.
கிறிஸ்துவுக்காக வாழ்வது என்பது ஒரு ஆசீர்வாதமான பொறுப்பு ஆகும். அது நாம் விரும்பினால்
தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு அல்ல, நாம் பரிசுத்தமாக வாழ்வதற்காகவே தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்
ஆகும். நாம் தேவனுக்காக வாழ்வதற்கான பலத்தை தேவனுடைய கிருபை நமக்குத் தருகிறது.
பயன்பாடு: தேவன் முந்தி என்னில் அன்பு கூர்ந்தபடியால், நான்
அவரை நேசிக்கிறேன் (1 யோவான் 4:19). எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லாத நேரத்தில்
அவர் என்னைக் கண்டுகொண்டார். நான் பரிசுத்தமாக வாழ என்னை அழைத்தும், தெரிந்து கொண்டும்
இருக்கிறார். என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர். என் வாழ்வில் அவருடைய நோக்கத்தை நிறைவேற்ற
நான் உண்மையுள்ளவராக இருக்க வேண்டும்.
ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, என்னை இரட்சித்த உம் கிருபைக்காக
உமக்கு நன்றி. இயேசுவே, என்னைக் கண்டுகொண்டு, காப்பாற்றிய உம் அன்புக்காக உமக்கு நன்றி.
பரிசுத்த ஆவியானவரே, கர்த்தருக்காகா பரிசுத்தமாக வாழ எனக்கு உதவியருளும். ஆமென்.
- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573
Day – 302