Wednesday, October 13, 2021

தேவனுடைய வார்த்தை – நம் இதயத்திற்கான உணவு

வாசிக்க: எரேமியா 15,16; சங்கீதம் 103; கொலோசெயர் 2

வேத வசனம்எரேமியா 15: 16. உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.

கவனித்தல்: எரேமியாவை யூதர்கள் முக்கியமான தீர்க்கதரிசிகளில் ஒருவராக மதிக்கின்றனர். தன் ஜனங்களின்  மீது வரவிருக்கும் அழிவு குறித்த வேதனையை அடிக்கடி வெளிப்படுத்துகிறபடியால், எரேமியா “அழுகையின் தீர்க்கதரிசி” என்று அழைக்கப்படுகிறார். யூதாவின் கடைசி ஐந்து ராஜாக்களின் ஆட்சி காலத்தில், 40 ஆண்டுகளாக எரேமியா தீர்க்கதரிசனம் உரைத்தார். ஆயினும், அவரின் எச்சரிப்பின் தீர்க்கதரிசனங்களுக்கு ஒருவரும் செவிகொடுக்கவில்லை. அவருடைய ஜனங்கள் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய மறுத்து, செவிசெய்க்காமல் இருந்தனர். எரேமியா 6:10 யூதர்களின் நிலை பற்றிய ஒரு சித்திரத்தை நம் முன் காட்டுகிறது, “கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.” அப்படிப்பட்ட ஒரு காலத்துல், எரேமியாவுக்கு தேவனுடைய வார்த்தை கிடைத்தது. யோசியா ராஜாவின் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட நியாயப்பிரமாணப் புத்தகத்தை இது குறிக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர் (2 இராஜா 22:8). எரேமியாவின் வாழ்க்கையைக் கவனித்துப் பார்க்கும்போது, எரேமியா தேவனுடைய வார்த்தையைத் தேடிக் கண்டடைந்தார் அல்லது பெற்றுக் கொண்டார் என்பதை எரேமியா 15:16 குறிக்கிறது. நம் பிரச்சனைகளின் நேரங்களில் நாம் தேவனுடைய வார்த்தையைத் தேடுகிறோமா? தேவனுடைய வார்த்தை நம்மிடம் வரும்போது, நாம் என்ன செய்கிறோம்?

வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்” என்று  எரேமியா கூறுகிறார். தேவனுடைய வார்த்தையை ருசித்தவர்கள் உடனடியாகச் செய்யும் காரியம் இதுவாகவே இருக்கும். நம் ஆவிக்குரிய மனிதனுக்கு தேவனுடைய வார்த்தையே அத்தியாவசியமான உணவு ஆகும். ”தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும்” இந்த உலகில் நாம் வாழ உதவுகிறது (உபா 8:3; மத்.4:4). அவை தேனிலும் மதுரமானதாக இருக்கிறது (சங்.119:103). இங்கே, தேவனுடைய வார்த்தையை உட்கொள்ளுதல் என்பது அதை தியானிப்பதைக் குறிக்கிறது. உணவில் இருந்து ஊட்டச்சத்துகளைப் பெற செரிமானம் உதவுவது போல, தேவனுடைய வார்த்தையை தியானிப்பது நம் இருதயங்களை ஆசீர்வதிக்கிறது. தேவனுடைய வார்த்தையானது, “ஆவியாயும் ஜீவனாயும்” இருப்பதால், அவர் நம் இருதயங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது (சங்.19:8; யோவான் 6:63). தேவனுடைய வார்த்தைகள் எரேமியாவிற்கு மனமகிழ்ச்சியைக்  கொடுத்தன. நாம் வாழ்வதற்கும், நம் போராட்டங்களை மேற்கொள்ளுவதற்குமான வல்லமையை தேவனுடைய வார்த்தையானது நமக்குத் தருகிறது. ”உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்” என்று சங்கீதக்காரன் சொல்கிறார் ( சங்.119:92). தேவனுடைய வார்த்தையை வாசித்து தியானிக்கிறவர்கள் அதில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கண்டு கொள்கிறார்கள் (சங்.1:1-2).  நம் வாழ்க்கைக்கான தேவனுடைய வார்த்தையை நாம் தேடும் போது, அதை நாம் கண்டடைவோம்.  நாம் தேவனுடைய வார்த்தையை தியானம் செய்யும்போது, அவை சந்தோசத்தையும் மனமகிழ்ச்சியையும் நமக்குத் தருகிறது. நாம் தேவனுடைய வார்த்தையில் மனமகிழ்ச்சியடைகிறோமா? தேவனுடைய வார்த்தையை தியானிக்க நாம் அனுதினமும் எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம்? நாம் தேவனுடையவர்கள்!

பயன்பாடு: நான் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறவனாக இருக்கக் கூடாது. நான் தேவனுடைய வார்த்தைக்கு என் முழு கவனத்தையும் கொடுக்க வேண்டும். நான் தேவனுடைய வார்ஹ்தையை தியானிக்கையில்,  அது என்னை மாற்றவும், உருமாற்றவும் நான் அனுமதிக்க வேண்டும். தேவனுடைய வார்த்தை என் மகிழ்ச்சியும் சந்தோஷமுமாக இருக்கிறது. நான் தேவனுக்குச் சொந்தமானவர்; அவருடைய வார்த்தைகளை நான் என் இருதயத்தில் வைத்திருக்கிறேன்.

ஜெபம்: தந்தையாகிய தெய்வமே, நீர் தருகிற நித்திய ஜீவ வசனங்களுக்காக உமக்கு நன்றி. நிச்சயமில்லாத உலகில், உம் வார்த்தைகள் என் மகிழ்ச்சியும் சந்தோஷமுமாக இருக்கின்றன. கர்த்தாவே, உம் வார்த்தையை முழு இருதயத்துடன் தேடவும், தியானிக்கவும் எனக்கு உதவியருளும். உம் வார்த்தையில் உள்ள அதிசயங்களைக் காணும்படி என் கண்களைத் திறந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 285

No comments: