Friday, October 15, 2021

தேவனைத் தேட, நினைவு கூர ஒரு அழைப்பு

வாசிக்க: எரேமியா 19,20; சங்கீதம் 105; கொலோசெயர் 4

வேத வசனம்சங்கீதம் 105: 4. கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
5. அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே!
6. அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்.

கவனித்தல்:  மனிதர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தேடும் முறையில் இணையதள சேவைகள் நம்பமுடியாத அளவுக்கு மாற்றங்களை உண்டாக்கி இருக்கின்றன. ஒரு எளிய இணையதள தேடல் மூலமாக (பெரும்பாலுல் கூகுள் தேடலில்), நாம் எந்த தலைப்பிலும் தேடல் முடிவுகளைப் பெற முடியும். ஆயினும், இணையதள தேடல்கள் எல்லா சமயங்களிலும் துல்லியமான மற்றும் நம்பகமான முடிவுகளைத் தருவதில்லை. ஏனெனில் அவை முந்தைய தேடல்கள் மற்றும் இணையதளத்தில் இருக்கக் கூடிய தகவல்களின் அடிப்படையிலேயே அவை முடிவுகளைத் தருகின்றன. சில நேரங்களில், அவை தவறான மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய முடிவுகளை தரக் கூடும். தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த உடன்படிக்கையின் ஆசீர்வாதங்களை நிறைவேற்றுவதற்காக, அவர் ஏற்கனவே நமக்காக செய்து முடித்தவைகளை நினைவுபடுத்தி நாம் அவரைத் தேடவேண்டும் என சங்கீதம் 105 நம்மை அழைக்கிறது.

நாம் அனேக காரியங்களில் தேடல் உள்ளவர்களாக இருக்கலாம். ஆனால் தேவனில் மட்டுமே நம் வல்லமையைக் கண்டு கொள்ளுகிறோம். ஆகவே, நாம் அவருடைய முகத்தை அனுதினமும் தேடவேண்டும். தேவனை நாம் தேடவேண்டும் என வேதாகமம்  நம்மை தொடர்ந்து அழைக்கிறது. பொதுவாக நம் தேடல்கள் நம் வாழ்க்கைத் தேவைகள் மற்றும் விருப்பங்களின் அடிப்படையிலேயே இருக்கிறது. ஆனால் இயேசுவோ நாம் முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும் அவருடைய நீதியையும் தேடவேண்டும் என நம்மை அழைக்கிறார் (மத்.6:33). ”நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார்” என்று சங்கீதக்காரனாகிய தாவீது பாடுகிறார் (சங்.34:4-6). நாம் நம் வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்கும்போது அல்லது நமக்குத் தேவைப்படும் நேரங்களில் மட்டுமே தேவனைத் தேடுகிறோமா என்பதை சிந்தித்துப் பார்ப்போம். ”என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று” என்று சங்கீதக்காரனோடே கூடச் சேர்ந்து சொல்லுவோம் (சங்.27:8). ”இவ்விதமாக தேவனைத் தேடுதல் ஒருபோதும் நிற்பதில்லை—நாம் எவ்வளவு அதிகமாக அறிந்து கொள்கிறோமோ அவ்வளவு அதிகமாக இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் என்று தேட வேண்டும்” என்று ஸ்பர்ஜன் சொல்கிறார். நாம் தேவனை எந்த சமயத்திலும் தேடலாம்/தேட வேண்டும். அவர் நாள் முழுதும் நமக்கு தொடர்பு கொள்ளக் கூடியவராக இருக்கிறார்.

நாம் பல காரியங்களை அடிக்கடி மறந்து விடுகிறோம். நாம் பிரச்சனைகளைச் சந்திக்கும்போது, நம் தகுதிக்கு மீறிய சவால்களை எதிர்கொள்கிறோம் என நாம் நினைக்கும்போது நம் மறதியானது அதிகரிக்கிறது. அப்படிப்பட்ட சமயங்களில், நாம் தேவனையும் அவர் கடந்த காலத்தில் செய்த அற்புதங்களையும் நினைவுகூரும்படி வேதாகமம் நம்மை அழைக்கிறது. ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையை நினைவுகூரும் தேவன் நம் தேவன் என 8ஆம் வசனம் சொல்கிறது. ”கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்” என்று சங்,115:12 சொல்கிறது. ”நான் உன்னை மறப்பதில்லை” என்று தேவன் சொல்கிறார் (ஏசாயா 49:15). தேவன் தாம் கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராக இருக்கிறார் என்பதை நம்பி, நம் நிகழ்காலப் பிரச்சனைகளைக் குறித்து கவலைப்படாமல் நாம் எப்பொழுதும் அவரை நினைவு கூர முடியும். தேவனுடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியாகவும், அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட யாக்கோபின் புத்திரராகவும் நாம் இருக்கிறோம். ஆகவே, நாம் தேவனை எப்பொழுதும் தேடி, நினைவு கூர வேண்டும்.

பயன்பாடு: தேவனைத் தேடாமல் இருப்பதற்கு நான் எந்த சாக்குப் போக்கும் சொல்ல முடியாது. ”ஜீவ ஊற்று” அவரிடத்தில் இருக்கிறது (சங்.36:9). நான் எவ்வளவு அதிகமாக அவரை தேடுகிறேனோ, அவ்வளவு அதிகமாக நான் அவரை அறிந்து கொள்கிறேன். என் முழு இருதயத்தோடும் நான் அவரைத் தேடுகையில் அவரைக் கண்டடைகிறேன்.

ஜெபம்: அன்பின் தேவனே, உம் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதில் நீர் உண்மையுள்ளவராக இருப்பதற்காக உமக்கு நன்றி.  உம் முகத்தை அனுதினமும் தேடுகிற இருதயத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 287

No comments: