Tuesday, October 19, 2021

ஊக்கமளிக்கும் நித்திய நம்பிக்கை

வாசிக்க: எரேமியா 27,28; சங்கீதம் 109; 1 தெசலோனிக்கேயர் 4

வேத வசனம் 1 தெசலோனிக்கேயர் 4: 13. அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை.

கவனித்தல்:  1 தெசலோனிகேயர் 4:13-18 வரையிலான வேதபகுதியானது அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வேதபகுதிகளில் ஒன்று ஆகும்.  அடக்க ஆராதனைகளின் போதும் மற்றும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகை பற்றி ஜனங்கள் பேசும்போதும், மக்கள் இந்த வேதபகுதியை குறிப்பிடுவதுண்டு. மரணத்திற்கு பின் வரும் வாழ்க்கை பற்றிய ஜனங்களின் நம்பிக்கையானது அவர்களின்  மதநம்பிக்கையைப் பொறுத்து மாறுபடுகிறது. முதல் நூற்றாண்டின் வாழ்ந்த பிற சமய மக்கள் மரணம் அனைத்திற்குமான ஒரு முடிவு  என்று கருதி அதைக் கண்டு பயந்திருக்கின்றனர் என அக்காலத்தைச் சேர்ந்த கல்லறைக் கல்வெட்டுகள், மற்றும் நூல்கள் கூறுகின்றன. ஆகவே அவர்கள் மற்றும் யூதர்கள் ஒருவரின் மரணத்திற்காக துக்கம் அனுசரிக்கும்போது, தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தும் சடங்குகளை செய்தனர். இங்கே, பவுல் ஒரு வெறுமையான நம்பிக்கையை விதைக்க பவுல் முயற்சி செய்ய வில்லை. நித்தியத்தைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கிறிஸ்தவ நம்பிக்கையைப்  பற்றி விசுவாசிகளுக்கு அவர் நினைவுபடுத்துகிறார்.

14ஆம் வசனமானது நமக்கு உயிர்த்தெழுதலின் நம்பிக்கை உண்டு என்பதை நினைவுபடுத்துகிறது. 16ஆம் வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகை பற்றி நாம் வாசிக்கிறோம். இயேசு தாமே தம் இரண்டாவது வருகை பற்றி  வாக்குப்பண்ணி இருக்கிறார் (மத்.24:27,31; யோவான் 14:1-3, 18, 28). 17ஆம் வசனமானது எடுத்துக் கொள்ளப்படுதல் மற்றும் கிறிஸ்துவுடன் சேருதல் பற்றி சொல்கிறது. ஆகவே, நாம் நம்பிக்கையற்றவர்களாக இல்லை. தீத்து 2:13ல், கிறிஸ்துவின் வருகையானது நாம் நம்பியிருக்கிற ”ஆனந்த பாக்கியம்” என்று பவுல் சொல்கிறார்.  கிறிஸ்து இயேசுவே நம் நம்பிக்கையாக இருக்கிறார். கிறிஸ்துவில் நமக்கு இருக்கும் நம்பிக்கையை நினைவுபடுத்தி, ஒருவரையொருவர் தேற்றும்படி பவுல் தெசலோனிக்கேயில் உள்ள விசுவாசிகளிடம் கூறுகிறார். இங்கே, நமக்கு பிரியமானவர்களை இழந்து தவிக்கையில் அவர்களுக்காக துக்கமாக இருக்கக் கூடாது என்று பவுல் சொல்லவில்லை. அவர் சொல்லவரும் கருத்து என்னவெனில், கிறிஸ்துவில் நமக்கு இருக்கும் நம்பிக்கையை நாம் அறிந்திருந்தால், நம்பிக்கையற்றவர்கள் துக்க முகமாக இருப்பது போல நாம் இருக்க மாட்டோம் என்பதாகும். இயேசுவின் இரண்டாவது வருகை குறித்து பேசுகையில், சில கிறிஸ்தவர்கள் அது இரகசிய வருகையாக இருக்கும் என்று விளக்கம் கொடுக்கின்றனர். ஆனால், ஆரவாரம், சத்தம் மற்றும் தேவ எக்காளம் ஆகியவை வெளிப்படையான பகிரங்க வருகையைக் குறிக்கிறதாக இருக்கிறது.  “நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்” என்று வேதம் சொல்கிறது (கொலோ.3:4). நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி என்னவெனில், நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாக இருக்கிறோமா?

பயன்பாடு:  ஒரு கிறிஸ்தவனாக, என் வாழ்க்கை இந்த உலகத்துடன் முடிந்து போவதில்லை. இயேசு கிறிஸ்து எனக்கு நித்திய நம்பிக்கையைத் தந்திருக்கிறார். நம்பிக்கை இல்லாதவர்கள் வாழ்வது போல, துக்கம் அனுசரிப்பது போல நான் இருக்கக் கூடாது. மாறாக, இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தப்படும்படி நான் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும். பூமியில் நான் வாழும் வாழ்க்கையானது என் தேவனைச் சந்திக்கவும், நித்தியத்தில் அவருடன் வாழவும் என்னை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்கு எனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பு ஆகும்.

ஜெபம்:  தந்தையாகிய தேவனே,  உம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நீர் எனக்குத் தருகிற நம்பிக்கைக்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, பரிசுத்தமாக வாழ எனக்கு உதவும். மேலும், நித்திய நம்பிக்கை பற்றி மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் உம் வருகைக்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் உம் பலத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 291

No comments: