Friday, October 22, 2021

வளர்ந்து பெருகும் விசுவாசம் மற்றும் அதிகரிக்கும் அன்பு

வாசிக்க: எரேமியா 31,32; சங்கீதம் 111; 2 தெசலோனிக்கேயர் 1

வேத வசனம் 2 தெசலோனிக்கேயர் 1: 3. சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது.
4. நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம்.

கவனித்தல்:  வெளிப்படுத்தல் புத்தகத்தில், எபேசு சபையைக் குறித்து, “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டுஎன்று இயேசு கிறிஸ்து சொன்னார் (வெளி.2:4). விசுவாசம் மற்றும் அன்பின் குறைபாடு என்பது எபேசுவில் மட்டுமே இருந்த ஒரு பிரச்சனை அல்ல. இப்போதும் கூட அனேக கிறிஸ்தவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ விசுவாசமும் அன்பும் தாங்கள் முதலில் கிறிஸ்தவரான போது அல்லது இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொண்டபோது இருந்தது போல இப்போது இல்லை என்று வெளிப்படையாக கூறுகிறார்கள்.  தங்கள் சபை நடவடிக்கைகள்  விசுவாசத்தையும் அன்பையும் கட்டி எழுப்பும்படி பக்திவிருத்தியை மையமாகக் கொண்டவை அல்ல என்று சில கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நாம் பல காரணங்களை பட்டியல் போடலாம், ஆனால் அவை எதுவும் ஒரு விசுவாசி விசுவாசத்தில் வளர அன்பில் அதிகரிக்க உடனடியாக உதவுகிறதாக இருக்காது. இங்கே தெசலோனிக்கேயில் உள்ள விசுவாசிகளின் விசுவாசமானது மிகவும் பெருகுகிறதாக இருப்பதாகவும், அவர்கள் ஒருவரிலொருவர் காட்டுகிற அன்பு அதிகரிக்கிறதாகவும் இருக்கிறது என பவுல் குறிப்பிடுகிறார். தெசலோனிக்கே விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் வளர அன்பில் அதிகரிக்க அவர்களுக்கு உதவியவை எவை என்பதை அறிந்து கொள்ளுவது நம் விசுவாசம் மற்றும் அன்பை வளர்த்தெடுக்க நமக்கு உதவிகரமாக இருக்கும்.

தெசலோனிக்கேயில் உள்ள விசுவாசிகளுக்காக ஸ்தோத்திரம் செய்ய கடன்பட்டிருப்பதாக பவுல் கூறுகிறார். தேவனை ஸ்தோத்தரித்தல் என்பது ஒரு கிறிஸ்தவ கடமை ஆகும். இங்கே, பவுல் விசுவாசம் மற்றும் அன்புக்காக அவன் முன்பு செய்த ஜெபத்திற்கான பதிலைக் காண்கிறார் (1 தெச.3:10-12). அப்படியானால், தெசலோனிக்க விசுவாசிகள் விசுவாசம் மற்றும் அன்பு இல்லாதவர்களாக இருந்தார்கள் என்று அர்த்தம் அல்ல. அவர்களிடம் ஏற்கனவே விசுவாசமும் அன்பும் காணப்பட்டது ( 1 தெச.3:6-7). தேவன் மீதான நம் விசுவாசமே நம் கிறிஸ்தவ வாழ்வின் அஸ்திபாரம் ஆகும். பவுல் (அளவுக்கு அதிகமாக பெருகுகிற என்பதைக் குறிக்கும்) “huperauxanó” என்ற கிரேக்க வார்த்தையை தெசலோனிக்கே விசுவாசிகளின் துரிதமான விசுவாச வளர்ச்சியைக் குறிப்பிட பயன்படுத்துகிறார்.அவர்களின் அன்பைக் குறிப்பிட agape என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இதன் பொருள் என்னவெனில், அவர்களுடைய அன்பு உணர்ச்சிவசப்பட்ட அல்லது உணர்வுகள் சார்ந்த ஒரு அன்பு அல்ல, மாறாக தியாகமான, நிபந்தனையற்ற அன்பு என்பதாகும். தெசலோனிக்கே விசுவாசிகள் தங்கள் விசுவாச வாழ்க்கையை வாழ முழு சுதந்திரம் உள்ள ஒரு வசதியான இடத்தில் வாழ வில்லை. அவர்கள் உபத்திரவம் மற்றும் பாடுகளின் மத்தியில் வாழ்ந்தனர். ஆயினும், அவை எதுவும் அவர்களின் விசுவாச வளர்ச்சியையும் அன்பு அதிகரிப்பதையும் தடுத்து நிறுத்த முடியவில்லை. வேறு விதமாகச் சொல்வதானால், தெசலோனிக்கே விசுவாசிகள் தங்கள் விசுவாசம் மற்றும் அன்பை அவர்கள் அனுபவித்த உபத்திரவங்கள் பாதிக்க அனுமதிக்க வில்லை.  அவர்களுடைய விசுவாசமானது தேவனுடைய வார்த்தையாகிய நற்செய்தியில் வேரூன்றி இருந்தது (அப்.17:2-4). அவர்களின் agape அன்பானது யோவான் அப்போஸ்தலனின் வார்த்தைகளை நினைவுபடுத்துகிறது: “ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்” (1 யோவான் 4:7). நாம் விசுவாசத்தில் வளர்வது குறித்து அக்கறை உள்ளவர்களாக இருக்கிறோமா அல்லது பொருளாதாரத்தில் செழிப்படைவது குறித்து கவலைப்படுகிறோமா? நம் அன்பு அதிகரிக்கிறதா அல்லது நாம் ஆதி அன்பை இழந்து போகிறவர்களாக இருக்கிறோமா? நம்மை நாமே நிதானித்துப் பார்ப்போம். நாம் தேவனுடைய ராஜ்ஜியத்திற்க்கு உரியவர்களாக எண்ணப்படும்படி விசுவாசத்தில் வளர்ந்து, அன்பில் அதிகரித்து காணப்படுவோம்.

பயன்பாடு:  கிறிஸ்தவ விசுவாசமும் அன்பும் பிரிக்க முடியாதவை. இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தில் வளருவதற்கும், அனுதினமும் அதிகரிக்கும் என் அன்பிற்கும் வானமே எல்லை. ஒரு கிறிஸ்தவராக, மற்ற கிறிஸ்தவர்கள் விசுவாசத்திலும் அன்பிலும் வளர நான் ஜெபிக்க வேண்டும். என் சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், என்னிடம் இப்பொழுது இருக்கிறவைகளுக்காக நன்றியறிதல் உள்ளவராக நான் இருந்து நான் விசுவாசத்தில் வளர அன்பில் அதிகரிக்க தேவன் என்னில் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்வதற்கு  எதிர்பார்ப்புடன் நான் காத்திருக்க வேண்டும்.   

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, நீர் எனக்குத் தந்திருக்கிற விசுவாசம் மற்றும் அன்புக்காக உமக்கு நன்றி. எனக்கு எதிராக இருக்கும் எல்லா தடைகளையும் தாண்டி, விசுவாசத்தில் வளர எனக்கு உதவும். மேலும், மற்றவர்கள் உம்மை அறிந்து உம் நாமத்தை மகிமைப்படுத்தும்படி கிறிஸ்துவின் அன்பை ஒருவரோடொருவர் காட்ட எனக்கு போதித்தருளும். ஆமென்.

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day – 293

No comments: