Saturday, October 2, 2021

உங்கள் ஆவிக்குரிய ஆசீர்வாதத்திற்கான ஒரு ஜெபம்

 வாசிக்க: ஏசாயா 57, 58; சங்கீதம் 91; எபேசியர் 1

வேத வசனம் எபேசியர் 1: 18. தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்;
19.
தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

கவனித்தல்:   நாம் ஒரு பிரச்சனையின் நடுவில் இருக்கும்போது, அப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டி நாம் ஊக்கமாக ஜெபிப்போம். பெரும்பாலான நேரத்தில், நம் ஜெபங்கள் நம் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் இருந்தே வருகின்றன. ரோமில் வீட்டுக்காவல் வைக்கப்பட்டிருந்த போது, அவர் எபேசு சபைக்கு எழுதின நிருபம்  அவருடைய “சிறைச்சாலை நிருபங்களில்” ஒன்று ஆகும். ஆயினும், தான் சிறையில் இருந்த நாட்களில் பவுல் ஒரு போதும் தனக்கு விடுதலை உண்டாக வேண்டும் என ஜெபித்தது கிடையாது. அதற்குப் பதிலாக, விசுவாசிகளின் மனக்கண்கள் திறக்கப்படும்படி அவர்களுக்காக ஒரு அர்த்தம் பொதிந்த ஜெபம் ஒன்றை ஏறெடுக்கிறார். வேறு விதமாக சொல்வதானால், கர்த்தருக்குள் தங்களுக்கு இருக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அறிந்து கொள்ளும்படி அவர்கள் ஆன்மீகக் கண்களை உடையவர்களாகும்படி பவுல் ஜெபிக்கிறார். இங்கே மனக்கண்கள் என்பது மனித சரீரத்தின் ஒரு உறுப்பைக் குறிக்கிறதாக நாம் பொருள் கொள்ளக் கூடாது. “மனக் கண்கள் என்பது ஆழமான புரிதலைக் குறிக்கிறது” என ஒரு போதக நண்பர் சொல்கிறார். கிறிஸ்துவில் நமக்கிருக்கும் ஆசீர்வாதங்களை பார்க்கும்படி நம் மனக்கண்களுக்கு வெளிச்சத்தை அல்லது பிரகாசத்தை பரிசுத்த ஆவியானவர் தருகிறார். பரிசுத்த ஆவியானவர் ஞானத்தையும், தெளிவையும் அருளுகிற ஆவியானவர் என்றும், சகலத்தையும் போதித்து, நம்மை சகல சத்தியத்திற்குள்ளும் நடத்துகிறவர் என்றும் வேதம் சொல்கிறது ( ஏசாயா 11:2; யோவான் 14:2-26; 16:12-14).  நாம் தேவனையும், தேவன் நமக்காக வைத்திருக்கும் திட்டங்களையும் அறிந்து கொள்வதற்கு, நம்மனைவருக்கும் “ஞானத்தையும் தெளிவையும் அருளும் ஆவியானவர் அவசியம் தேவை.

இங்கு, விசுவாசிகள் மூன்றுகாரியங்களை அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார்: தேவனுடைய அழைப்பினால் உண்டாகும் நம்பிக்கை, நம் சுதந்திரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம், மற்றும் மகா மேன்மையான அவருடைய மகத்துவ வல்லமை. கிறிஸ்துவில் நாம் நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறோம்; கிறிஸ்துவே நம் நம்பிக்கையாக இருக்குகிறார். அவருக்குள், அநம் நித்திய வாழ்க்கைக்கான நம்பிக்கை உடையவர்களாக இருக்கிறோம். 14ஆம் வசனத்தில், ”ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரம்” என்று பவுல் கூறுகிறார். கிறிஸ்துவில், நாம் தேவனுடைய மகிமையான சுதந்திரத்தைப் பெறுகிறோம். நாம் தேவனை விசுவாசிக்கும்போது, தேவன் நமக்கு அவ ருடைய மகத்துவமான வல்லமையைத் தருகிறார், அது இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி, தேவனுடைய வலது பரிசத்தில் அவரை அமர வைத்த அதே மகத்துவ வல்லமை ஆகும். நம் மனித ஞானத்தில் இருந்து நாம் இந்த மூன்று காரியங்களையும் பற்றி முழுமையாக விளக்க முடியாது. தேவன் நமக்கு பிரகாசமான மனக்கண்களைத் தரும்போது, பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய இரகசியங்களைப் புரிந்து கொள்ள நமக்கு உதவுகிறார். தேவன் தம்மை விசுவாசிக்கிறவர்கள் அனைவரும் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறார் என்பது ஆச்சரியமான ஒரு உண்மை ஆகும்.

பயன்பாடு: கிறிஸ்துவிடம் வருவதற்கு முன்பு, நான் அந்தகாரமான ஒரு இருளில் இருந்தேன். ஆனால் இப்பொழுதோ, ஒளியின் பிள்ளைகளில் ஒருவராக நான் இருக்கிறேன். என் வாழ்க்கை மற்றும் எதிர்காலத்திற்கு இந்த உலகமானது எந்த நம்பிக்கையையும் தருவதில்லை. ஆனால் இயேசுவோ நித்தியத்திற்கான நம்பிக்கையை எனக்குத் தருகிறார். அவரே என் நம்பிக்கை. எனக்குள் இருக்கிற கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக இருக்கிறார். நான் தேவனுக்கு சுதந்திரரும் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாக இருக்கிறேன். தேவனுடைய இராஜ்ஜியமாகிய கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில் நித்திய சுதந்திரம் உடையவனாக நான் இருக்கிறேன்.

ஜெபம்:  தந்தையாகிய தெய்வமே, உம் பிள்ளையாக இருக்கவும் உம் நாமத்துக்குப் புகழ்ச்சியாக ஒரு பரிசுத்த வாழ்க்கையை வாழவும் என்னை அழைக்கும் உம் அழைப்புக்கு நன்றி. கர்த்தாவே, இன்று என் வாழ்வில் இயேசுவின் உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவிக்க  உதவியருளும். பரிசுத்த ஆவியானவரே, அனுதினமும் நான் தேவனைச் சிறந்த முறையில்  காண என் மனக்கண்களைத் திறந்தருளும். ஆமென்

- அற்புதராஜ் சாமுவேல்
+91 9538328573

Day - 274

No comments: